மேலும்

சிறிலங்காவுடனான இராணுவ ஒத்துழைப்பை விரிவுபடுத்த ரஷ்யா ஆர்வம்

சிறிலங்காவுடன் இராணுவ ஒத்துழைப்பை விரிவுபடுத்த ஆர்வம் கொண்டுள்ளதாக ரஷ்ய கூட்டுப் படைகளின் தலைவரான, ஜெனரல்  வலேரி ஜெராசிமோவ் தெரிவித்துள்ளார்.

மொஸ்கோ நகரில் நடைபெறும் இராணுவ கருத்தரங்கு மற்றும் கண்காட்சியில் பங்கேற்கச் சென்றுள்ள சிறிலங்காவின் பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவுடன் நடத்திய சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

நேற்று முன்தினம் மொஸ்கோவில் இடம்பெற்ற இந்தச் சந்திப்பில் கருத்து வெளியிட்ட ஜெனரல்  வலேரி ஜெராசிமோவ்,

“சிறிலங்காவுடன் இராணுவ ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கும், பிராந்தியத்தில் அனைத்துலக தீவிரவாதத்துக்கு எதிரான போர் பற்றியும், ஏனைய பாதுகாப்பு சவால்கள் குறித்து கலந்துரையாடுவதற்கும், நாங்கள் ஆர்வம் கொண்டுள்ளோம்.

எங்களுக்குள் 60 ஆண்டு கால நல்லுறவு உள்ளது. தெற்காசியாவில் ரஷ்யாவின் நம்பகமான பங்காளராக சிறிலங்கா இருக்கிறது.

அண்மையில் டுஷான்பேயில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினுக்கும், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில், எட்டப்பட்ட உடன்பாடுகளை நடைமுறைப்படுத்துவதற்கு முன்னுரிமை கொடுக்கப்படும்.

இரு நாடுகளின் ஆயுதப்படைகளுக்கு இடையிலான நட்புறவை இந்த சந்திப்பு வலுப்படுத்தும் என்று, நம்புவதாகவும், ஜெனரல் ஜெராசிமோவ் தெரிவித்தார்.

இந்தச் சந்திப்பில் சிறிலங்கா தரப்பில், அட்மிரல் விஜேகுணரத்னவுடன் அவரது செயலர் கப்டன் சமரநாயக்க, பாதுகாப்பு அமைச்சின் மூத்த உதவிச் செயலர் ஏஎஸ்எஸ் குமார, விங் கொமாண்டர் விஜேசிங்க, ரஷ்யாவுக்கான தூதுவர் கலாநிதி தயான் ஜயதிலக, மொஸ்கோவில் உள்ள சிறிலங்கா தூதரக பாதுகாப்பு ஆலோசகர் குறூப் கப்டன் உதித்த பியசேன ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *