மேலும்

கிளிநொச்சி விபத்தில் 5 சிறிலங்கா படையினர் பலி- ஒருவர் ஆபத்தான நிலையில்

கிளிநொச்சி – 55 ஆவது கட்டையில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற தொடருந்து விபத்தில் உயிரிழந்த சிறிலங்கா படையினரின் எண்ணிக்கை 5 என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கொழும்பில் இருந்து காங்கேசன்துறை நோக்கிச் சென்று கொண்டிருந்த விரைவு தொடருந்து, முருகண்டி- கிளிநொச்சி தரிப்பு நிலையங்களுக்கிடையில் சென்று கொண்டிருந்த போது, சிறிலங்கா இராணுவ வாகனம் ஒன்றுடன் மோதியது.

நேற்று பிற்பகல் 1.45 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 4 சிறிலங்கா படையினர் கொல்லப்பட்டனர். மேலும் மூவர் படுகாயம் அடைந்தனர்.

படுகாயமடைந்த நிலையில், கிளிநொச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மற்றொரு சிறிலங்கா படைச் சிப்பாயும் உயிரிழந்ததை அடுத்து, இந்த விபத்தில் உயிரிழந்த சிறிலங்கா படையினரின் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது.

முன்னதாக நேற்று 6 சிறிலங்கா படையினர் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

அதேவேளை, படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வரும் மற்றொரு சிறிலங்கா இராணுவ சிப்பாயின் நிலையும் கவலைக்கிடமாக உள்ளது என, கூறப்படுகிறது.

கிளிநொச்சி தொடருந்து நிலையத்துக்கு அருகே உள்ள சிறிலங்கா இராணுவ மருத்துவமனையில் பணியாற்றும் 7 சிறிலங்கா இராணுவத்தினர், பாரதிபுரத்தில் இருந்து குடிநீர் எடுத்து வரச் சென்ற போதே, இந்த விபத்தில் சிக்கினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *