மேலும்

மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா: கைக்கு எட்டியது வாய்க்கு எட்டுமா? – சுபத்ரா

இலங்கை இராணுவத்தில் சர்ச்சைக்குரிய அதிகாரிகளில் முதன்மையானவராக கருதப்படும், மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு ஆறு மாதகால சேவை நீடிப்பு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வழங்கப்பட்டிருக்கிறது.

இராணுவத்தின் இரண்டாவது நிலைப் பதவியான – இராணுவத் தலைமை அதிகாரியாக உள்ள, மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நேற்று முன்தினம், 21ஆம் திகதி, 55 வயதை எட்டிய நிலையில் ஓய்வு பெறவிருந்தார்.

அதற்கு, மூன்று நாட்கள் முன்னதாக, கடந்த 18ஆம் திகதி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால், சேவை நீடிப்பு வழங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது.

இதன் மூலம், இந்த ஆண்டு டிசெம்பர் 31ஆம் திகதி வரை, அவர் பதவியில் நீடிக்கப் போகிறார்.

இந்த சேவை நீடிப்பு, மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு இராணுவத் தளபதியாகும் வாய்ப்புக் கிட்டுவதற்குச் சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தியிருக்கிறது.

ஏனென்றால், தற்போதைய இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவின் பதவிக்காலம், எதிர்வரும், ஓகஸ்ட் 19ஆம் திகதியுடன் முடிவடைகிறது.

2017  ஜூலை 4ஆம் திகதி இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்ட அவர், 2018 ஓகஸ்ட் 19ஆம் திகதியுடன் ஓய்வுபெறவிருந்த நிலையிலேயே, 2019 ஓகஸ்ட் 19ஆம் திகதி வரை ஜனாதிபதியினால் சேவை நீடிப்பு வழங்கப்பட்டது. அவருக்கு இரண்டு முறை ஜனாதிபதியினால் சேவை நீடிப்பு வழங்கப்பட்டு விட்டது.

எனவே, மீண்டும் அவருக்கு, எதிர்வரும் ஓகஸ்ட் 19ஆம் திகதிக்குப் பின்னர் சேவை நீடிப்பு வழங்கப்படுமா என்பது சந்தேகம்.

எனினும், இதற்கு முன்னர் பதவியில் இருந்த இராணுவத் தளபதி ஜெனரல் கிரிஷாந்த டி சில்வாவுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால், மூன்று தடவைகள் சேவை நீடிப்பு வழங்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே, தற்போதைய இராணுவத் தளபதிக்கு அவ்வாறு மீண்டும் ஒருமுறை சேவை நீடிப்பு வழங்கப்பட்டால் ஆச்சரியமில்லை.

இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க, ஓகஸ்ட் 19ஆம் திகதியுடன், ஓய்வுபெறும் நிலை ஏற்பட்டால், தற்போது இராணுவத்தில் இரண்டாவது நிலையில் உள்ள மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா இராணுவத் தளபதியாக நியமிக்கப்படும் வாய்ப்புகள் அதிகம்.

பொதுவாக, இராணுவத் தளபதி நியமனங்கள் அவ்வாறு தான் செய்யப்படுவது வழக்கம். எனினும், அபூர்வமாக சிலவேளைகளில், மேல் நிலையில் இருந்தவர்கள் ஓரம்கட்டப்பட்டு, மூப்பு வரிசையில் பின்னால் இருந்தவர்கள் இராணுவத் தளபதி பதவியைப் பிடித்த சந்தர்ப்பங்களும் உள்ளன.

தற்போதைய நிலையில், மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு அளிக்கப்பட்டுள்ள சேவை நீடிப்பு, அவருக்கான வாய்ப்புகளை உயர்த்தியிருக்கிறது. ஏனென்றால், அவர் டிசெம்பர் 31ஆம் திகதி வரை பதவியில் இருக்கப் போகிறார்.

அதற்கு முன்னதாக, டிசெம்பர், 7ஆம் திகதிக்குள் ஜனாதிபதி தேர்தல் நடக்கப் போகிறது. ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்டுபவர், சில நாட்களிலோ, ஓரிரு வாரங்களிலோ பதவியேற்று விடுவார். அந்த வகையில் எப்படியும், டிசெம்பர் 31ஆம் திகதிக்குள் புதிய ஜனாதிபதி பதவியேற்கும் வாய்ப்பு உள்ளது.

புதிய ஜனாதிபதியாக, தெரிவாகிறவர் யார் என்பதைப் பொறுத்து, மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவின் எதிர்காலம் தீர்மானிக்கப்படும்.

கூட்டு எதிரணி சார்பில் கோத்தாபய ராஜபக்ச போட்டியிட்டு வெற்றி பெறுவாராயின் – நிச்சயமாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா தான் அடுத்த இராணுவத் தளபதி என்று கண்ணை மூடிக் கொண்டு, இப்போதே அடித்துக் கூறலாம்.

கோத்தாபய ராஜபக்ச மாத்திரமன்றி, கூட்டு எதிரணி சார்பில் யார் போட்டியிட்டு வெற்றி பெற்றாலும், மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு இராணுவத் தளபதி பதவி உறுதி.

ஏனென்றால், அவர் கோத்தாபய ராஜபக்சவின் நம்பிக்கைக்குரிய ஒருவர். கஜபா படைப்பிரிவில் ஒன்றாக பணியாற்றியவர். இறுதிப் போரில், இருவரும் இணைந்து செயற்பட்டவர்கள்.

இராணுவத் தளபதியாக இருந்த சரத் பொன்சேகாவுக்குப் பதிலாக, கோத்தாபய ராஜபக்சவின், உத்தரவையே அவர் இறுதிக்கட்டப் போரில் பின்பற்றி நடைமுறைப்படுத்தினார், என்ற குற்றச்சாட்டுகளையும் எதிர்கொள்பவர்.

எனவே, கூட்டு எதிரணி ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றால், மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு பிரகாசமான எதிர்காலம் வாய்க்கும் என்பதில் சந்தேகமில்லை.

அதேவேளை, ஜனாதிபதி தேர்தலில், ஐதேக நிறுத்தும் வேட்பாளர் வெற்றி பெறும் நிலை ஏற்பட்டால், நிச்சயமாக, அவரால், இராணுவத் தளபதி பதவியை எதிர்பார்க்கவே முடியாது.

ஏனென்றால், மேற்குலகுடன் இசைந்து போகும் கொள்கையை பின்பற்றக் கூடிய ஐதேக, இறுதிப் போரில் பாரிய மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டார் என குற்றம்சாட்டப்படும் ஒருவரான மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவை இராணுவத் தளபதியாக நியமிக்காது.

அது அமெரிக்கா போன்ற நாடுகளுடனான பாதுகாப்பு உறவுகளை மேலும் வளர்த்துக் கொள்வதற்கு தடையாக இருக்கும் என்றே ஐதேக கருதும்.

மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு வழங்கப்பட்டுள்ள சேவை நீடிப்பு மூலம், அவருக்கு அடுத்த இராணுவத் தளபதி பதவி வழங்கப்படும் என்ற சமிக்ஞையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளிப்படுத்தியிருக்கிறாரா என்றால், அதையும் நிச்சயமாக கூறமுடியாது.

இராணுவத் தளபதிகள் தவிர்ந்த, மற்றைய அதிகாரிகளுக்கு 55 வயதுக்கு மேல் சேவை நீடிப்பு வழங்குவதில்லை என்ற விதிமுறை கடந்த ஆட்சிக்காலத்தில் இருந்து உறுதியாகப் பின்பற்றப்பட்டு வருகிறது.

இராணுவத் தளபதிகளாக இருந்த பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, ஜெனரல் கிரிஷாந்த டி சில்வா போன்றவர்களுக்கு 55 வயதுக்குப் பின்னர் மூன்று முறை சேவை நீடிப்புகள் வழங்கப்பட்டன. தற்போதைய இராணுவத் தளபதியும் அதற்கு விதிவிலக்கானவர் அல்ல.

ஆனால், மேஜர் ஜெனரல்களைப் பொறுத்தவரையில், 55 வயதுக்குப் பின்னர், சேவை நீடிப்பு அரிதாகவே வழங்கப்பட்டிருக்கிறது.

மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில், 2009ஆம் ஆண்டு மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி, 55 வயதுக்குப் பின்னர், சேவை நீடிப்புப் பெற்றார்.

அவருக்குப் பின்னர், ஒரு ஆச்சரியமான நிகழ்வு, கடந்த ஆண்டு நிகழ்ந்தது.

இராணுவத் தலைமை அதிகாரியாக இருந்த மேஜர் ஜெனரல் டம்பத் பெர்னான்டோ, சேவை நீடிப்புக்கு விண்ணப்பித்திருந்த நிலையில், அவருக்கு எந்தப் பதிலும் அளிக்கப்படாததால், 2018 ஒக்ரோபர் 3ஆம் திகதி அவர் பதவியில் இருந்து ஓய்வுபெறத் தயாரானார். அவருக்கு இராணுவத் தலைமையகத்தில் பிரியாவிடை அணிவகுப்பும் அளிக்கப்பட்டது.

அதற்குப் பின்னரே, அவருக்கு 3 மாத சேவை நீடிப்பு வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. அவருக்கு 3 மாத சேவை நீடிப்பு வழங்கப்பட்ட போது, மூப்பு வரிசையில் அவருக்கு கீழ் இருந்த மேஜர் ஜெனரல்கள் பலர் அதிருப்தியடைந்தனர்.

ஏனென்றால், மேஜர் ஜெனரல் டம்பத் பெர்னான்டோ, இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டால், தமக்கு அந்த வாய்ப்புக் கிட்டாது போய் விடும் என்று அவர்கள் கருதினார்.

அதுபோலவே, சேவை நீடிப்பு வழங்கப்பட்டதால், அவருக்கு இராணுவத் தளபதி பதவி கிடைக்கும் என்றும் கருதப்பட்டது.

ஆனால், மேஜர் ஜெனரல்  டம்பத் பெர்னான்டோவுக்கு இராணுவத் தளபதி பதவியை ஜனாதிபதி வழங்கவில்லை. அதனால் அவர் கடந்த ஆண்டு ஓய்வு பெற்றுச் சென்று விட்டார்.

மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறிக்கு சேவை நீடிப்பு வழங்கப்பட்ட போதும், அதற்குப் பின்னர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மேஜர் ஜெனரல்  டம்பத் பெர்னான்டோ,வுக்கு சேவை நீடிப்பு வழங்கப்பட்ட போதும், அவர்களுக்கு இராணுவத் தளபதியாகும் வாய்ப்பு உள்ளதாகவே கருதப்பட்டது.

அதேபோன்று தான் தற்போது மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவும் இராணுவத் தளபதியாக நியமிக்கப்படக் கூடும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

ஆனால், அது உண்மையாக வேண்டும் என்பது நியதியில்லை என்பதை, மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி, மேஜர் ஜெனரல்  டம்பத் பெர்னான்டோ ஆகியோருக்கும் ஏற்பட்ட நிலையில் இருந்து புரிந்து கொள்ள முடியும்.

சேவை நீடிப்பு பெற்றிருந்தாலும், இராணுவத் தலைமை அதிகாரியாக இருந்தாலும் கூட, இராணுவத் தளபதியாக நியமிக்கப்படுவதற்கான வாய்ப்பை இந்த இரண்டும் தீர்மானிக்காது.

மனித உரிமைகள் விவகாரத்தில் பலத்த சர்ச்சைக்குரியவராக இருந்தாலும், மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி, மேஜர் ஜெனரல் டம்பத் பெர்னான்டோ, போன்றவர்களை விட, போர்க்களச் சாதனைகளில், மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா மிக உயரமான இடத்தில் இருப்பவர்.

இராணுவத் தளபதி பதவிக்கு மிகவும் பொருத்தமானவராகக் கருதப்படுபவர்.

ஆனால், மனித உரிமை விவகாரங்களும், சர்வதேச அழுத்தங்களும், ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு இராணுவத் தளபதி பதவியைக் கொடுக்குமா என்ற கேள்வி உள்ளது.

ஏற்கனவே, இறுதிக்கட்டப் போரில் முக்கிய பங்காற்றியவர்களான மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ், மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன, மேஜர் ஜெனரல் பிரசன்ன டி சில்வா, மேஜர் ஜெனரல் நந்தன உடவத்த, மேஜர் ஜெனரல், சாஜி கல்லகே, மேஜர் ஜெனரல் நிசாந்த வன்னியாராச்சி, மேஜர் ஜெனரல் நிர்மல் தர்மரட்ண, மேஜர் ஜெனரல் ரால்ப் நுகேரா உள்ளிட்ட பலரும், இராணுவத் தளபதி பதவியை நெருங்கக் கூட முடியாமல் ஓய்வுபெற நேரிட்டமைக்கு முக்கியமான காரணம், போர்க்கால மீறல்கள் தான்.

மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா ஓய்வுபெறவிருந்த ஜூன் 21ஆம் திகதியும் கூட, இறுதிப்போரில் முக்கிய பங்கெடுத்த அதிகாரிகளில் ஒருவரான மேஜர் ஜெனரல் நிசங்க ரணவான ஓய்வுபெற்றிருக்கிறார்.

இவர்களை விட, இறுதிப்போரில் கட்டளைத் தளபதிகளாக இருந்த மேஜர் ஜெனரல் சத்யப்பிரிய லியனகே, மேஜர் ஜெனரல் அத்துல கொடிப்பிலி, மேஜர் ஜெனரல் ஜி.வி. ரவிப்பிரிய போன்ற அதிகாரிகள், அடுத்த ஜனவரிக்குள் ஓய்வுபெற வேண்டிய நிலையில் உள்ளனர்.

வரும் ஓகஸ்ட் 19ஆம் திகதி இராணுவத் தளபதி பதவியில் இருந்து லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்க ஓய்வுபெற்றால், அடுத்த இராணுவத் தளபதியாகும் வாய்ப்பை பெறக்கூடிய மூத்த அதிகாரிகளாக கொழும்பு நடவடிக்கை தளபதி மேஜர் ஜெனரல் சத்யப்பிரிய லியனகேயும், யாழ். படைகளின் தளபதியான மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெற்றியாராச்சியும் இருப்பார்கள் என்றே நம்பப்பட்டது.

குறிப்பாக, மேஜர் ஜெனரல் சத்யப்பிரிய லியனகே அடுத்த இராணுவத் தளபதியாகும் வாய்ப்புக் கிட்டும் என்று கருதப்பட்டது. இந்த நிலையில் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு அளிக்கப்பட்டுள்ள சேவை நீடிப்பானது, அவரதும், மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெற்றியாராச்சியினதும், எதிர்காலத்தில் மண்ணை அள்ளிப் போட்டுள்ளது.

ஏனென்றால், மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவின் சேவை நீடிப்பு முடிவதற்குள், மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெற்றியாராச்சி, 2019 ஜூலை 22 ஆம் திகதியும், மேஜர் ஜெனரல் சத்யப் பிரிய லியனகே நொவம்பர் 14ஆம் திகதியும் ஓய்வுபெற வேண்டிய நிலையில் இருக்கின்றனர்.

– சுபத்ரா

நன்றியுடன் –  வீரகேசரி வாரவெளியீடு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *