மேலும்

சிறிலங்கா தாக்குதல்கள் குறித்து முதலில் அறிந்திராத ஐஎஸ் – விசாரணைகளில் தகவல்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுக்கு, ஐஎஸ் அமைப்பு உரிமை கோரியிருந்த போதிலும், இவ்வாறான தொடர் தாக்குதல் இடம்பெற்றிருந்தது குறித்து, ஆரம்பத்தில் அந்த அமைப்பின் தலைவர் அபூ பக்கர் அல் பக்தாதி அறிந்திருக்கவில்லை என விசாரணைகளுடன் தொடர்புடைய அதிகாரி ஒருவர் தி ஹிந்து நாளிதழுக்குத் தெரிவித்துள்ளார்.

தாக்குதல்கள் இடம்பெற்ற பின்னர், இஸ்லாமிய கடும்போக்கு உள்நாட்டவரும், ஐஎஸ் அமைப்பின்  ஆதரவாளருமான ஒருவர் ஐஎஸ் அமைப்பின் தலைமையுடன் தொடர்பு கொண்டமை விசாரணைகளில் போது தெரியவந்துள்ளது.

தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள அந்த சந்தேக நபர், மூன்றாவது தரப்பு ஒன்றின் ஊடாக, ஐஎஸ் தலைமையுடன் தொடர்பு கொண்டு, தங்கள் உயிர்களை தியாகம் செய்த ஜிகாத் தீவிரவாதிகளை ஐஎஸ் அமைப்பு அங்கீகரிக்க வேண்டும் என்று மன்றாட்டமாக கேட்டுக்கொண்டுள்ளார்.

தாக்குதல் இடம்பெற்று சுமார்  48 மணித்தியாலங்களின் பின்னரே ஐஎஸ் அமைப்பு அந்த தாக்குதலுக்கு உரிமை கோரியதுடன், சிறிலங்காவில் தாக்குதல் நடத்திய குண்டுதாரிகள், ஐஎஸ் அமைப்புக்கு விசுவாசமாக உறுதியேற்கும் காணொளியையும் ஐஎஸ் அமைப்பின் அமாக் செய்தி நிறுவனம், வெளியிட்டது.

ஐஎஸ் அமைப்பின் கறுப்பு கொடியின் முன்பாக, தற்கொலைக் குண்டுதாரிகளில் அதன் தலைவர் சஹ்ரான் காசிம் தவிர்ந்த ஏனையோர், தமது முகங்களை மூடி மறைத்திருந்தனர்.

அதேவேளை, ஐஎஸ் அமைப்பின் இந்த தாமதமான உரிமை கோரல், வழமைக்கு மாறானது என ஐஎஸ் அமைப்பு குறித்து ஆய்வு செய்பவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

உள்ளுர் தீவிரவாதிகளுக்கு ஐஎஸ் அமைப்புடன் நேரடி தொடர்பிருந்தது  என்பதற்கான உறுதியான ஆதாரங்கள், இதுவரை சிறிலங்காவின்  விசாரணையாளர்களுக்கு கிடைக்கவில்லை.

தாக்குதலை மேற்கொண்டவர்கள்,  கைது செய்யப்பட்டுள்ளவர்கள் அனைவரும் ஐஎஸ் அமைப்பின் அனுதாபிகள். ஆனால் அவர்கள் ஐஎஸ் அமைப்புடன் எவ்வாறு தொடர்புகளை பேணிவந்தனர் என்பதற்கான பதில்கள் கிடைக்கவில்லை.

இப்போது நாங்கள் ஐஎஸ் அமைப்பின் ஆதரவாளர்களான வேறு சில கடும்போக்காளர்களையும் கண்டுபிடித்துள்ளோம்  என விசாரணையுடன் தொடர்புபட்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

கடந்தவாரம் சவூதி அரேபியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட ஐந்து சிறிலங்கா சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளும் விசாரணைகளில் இருந்து, மேலும் முக்கியமான பல தகவல்களைவரும் வாரங்களில் பெற முடியும் என விசாரணையாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

சவூதி அரேபியாவில் இருந்து நாடு கடத்தப்பட்டவர்களில் ஒருவர், மொகமட் மில்ஹான். அவரே, சஹ்ரானுக்குப் பின்னர், அவரது தேசிய தவ்ஹீத் ஜமமாத் குழுவுக்குத் தலைமையேற்கத் தெரிவு செய்யப்பட்டவர் என்று நம்பப்படுகிறது.

ஈஸ்டர் தாக்குதல்கள் தவிர்ந்த வேறு இரண்டு வழக்குகளிலும் மில்ஹானின் தொடர்புகள் குறித்து விசாரணையாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

முதலாவது சம்பவம், 2018 நொவம்பரில், மட்டக்களப்பில் உள்ள சோதனைச் சாவடி ஒன்றில் இரண்டு காவல்துறையினர் கொலை செய்யப்பட்டது. இரண்டாவது சம்பவம், மாவனெல்லவில் கடந்த மார்ச் மாதம் அமைச்சர் கபீர் ஹாசிமின் ஒருங்கிணைப்புச் செயலர் சுடப்பட்டது. ஆகும்.

இந்தியாவினால் வழங்கப்பட்ட புலனாய்வுத் தகவலை அடுத்து, சிறிலங்காவின் உயர் காவல்துறை அதிகாரி ஒருவரால், தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் நடக்க வாய்ப்பிருப்பதாக, ஏப்ரல் 11ஆம் நாள்  காவல்துறை அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்ட குறிப்பு ஒன்றில், மில்ஹானின் பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தக் கடிதம் பரிமாறப்பட்ட ஒரு வாரத்துக்குப் பின்னர், ஈஸ்டர் தாக்குதல்கள் நடப்பதற்கு 4 நாட்கள் முன்னதாக, ஏப்ரல் 17ஆம் நாள்- மின்ஹால் நாட்டை விட்டு வெளியேறியுள்ளார் என விசாரணையாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

சதித்திட்டத்தில் அவரது பங்கு பற்றிய கூடுதல் ஆதாரங்களைத் தெரிந்து கொள்ள, மில்ஹானின் தொலைபேசி மற்றும் மடிகணினியை சவூதி அரேபிய அதிகாரிகளிடம் இருந்து மீட்டெடுக்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம், என விசாரணை அதிகாரி ஒருவர் கூறினார்.

இதேவேளை, சந்தேகநபர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளின் போது ,தற்கொலை குண்டுதாக்குதல்களை மேற்கொண்டவர்கள் செயற்பட்ட விதம் குறித்து மேலும் பல தகவல்கள் கிடைத்துள்ளன.

சஹ்ரான் காசிமின் சர்வாதிகார போக்கு குறித்த விடயங்கள் விசாரணையின் போது வெளியாகியுள்ளன.

அவர் தாக்குதலுக்காக சேர்த்துக் கொண்ட ஏனைய இளைஞர்கள்  பலரும், சிரியா அல்லது ஈராக்  சென்று,  ஐஎஸ் அமைப்புக்காக போரிடவே விரும்பினார்கள்.

ஆனால்  சஹ்ரான் அதற்கு வாய்ப்பேயில்லை என்றும், சிறிலங்காவிலேயே நடவடிக்கையில் ஈடுபடுவது மிகவும் புனிதமானதும் முக்கியமானதுமாகும் என தெரிவித்துள்ளார் என்ற விடயமும் தெரியவந்துள்ளதாக அதிகாரி ஒருவர் கூறினார்.

சஹ்ரான் வேறு எவரதும் சொல்லையும் கேட்கவில்லை, தான் நினைத்ததையே செய்தார் போல தோன்றுகின்றது  என்றும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார் எனவும் தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *