மேலும்

இந்திய- சிறிலங்கா இராணுவ அதிகாரிகள் பேச்சு – பயிற்சி வாய்ப்புகளுக்கு சிறிலங்கா கோரிக்கை

இந்திய- சிறிலங்கா இராணுவ அதிகாரிகள் மட்டப் பேச்சுக்கள் நேற்று கொழும்பில் ஆரம்பமாகியுள்ளன. இந்தப் பேச்சுக்களில் பங்கேற்பதற்காக, இந்திய இராணுவத்தின் மூத்த அதிகாரிகள் 5 பேரைக் கொண்ட குழுவொன்று கொழும்பு வந்துள்ளது.

இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ள மேஜர் ஜெனரல் சுசீந்திர குமார், கேணல் நிஷிட் ரஞ்சன், லெப்.கேணல் சிறீநாத் சடிப்பா ரெட்டி ஆகியோரும், கொழும்பில் உள்ள இந்திய தூதரக பாதுகாப்பு ஆலோசகர் கப்டன் அசோக் ராவ் மற்றும் உதவி பாதுகாப்பு ஆலோசகர் லெப்.கேணல் ரவி மிஸ்ரா ஆகியோரும், நேற்று பிற்பகல் சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவைச் சந்தித்து பேச்சு நடத்தினர்.

இந்தச் சந்திப்பின் போது, சிறிலங்கா இராணுவத்தின் இளம் அதிகாரிகளுக்காக இந்தியாவில் அளிக்கப்படும் பயிற்சி பயனுள்ளதாக இருப்பதாக சிறிலங்கா இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

இதுபோன்று, மூத்த அதிகாரிகளுக்கான புலனாய்வு, சிறிய ஆயுதங்களைக் கொண்ட பொறிமுறைகள் போன்ற பயிற்சி நெறிகளை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் குறித்து ஆராயுமாறும் அவர் இந்திய அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டார்.

அதேவேளை, சிறிலங்கா இராணுவத் தலைமையகத்தில் இரண்டு நாடுகளின் இராணுவ அதிகாரிகள் மட்டத்திலான கலந்துரையாடல் நேற்றுக்காலை ஆரம்பமானது.

இந்த கலந்துரையாடலுக்கு சிறிலங்கா இராணுவத்தின் பொது அதிகாரிகள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் நிசங்க ரணவானவும், இந்திய இராணுவத்தின் மேஜர் ஜெனரல் சுசீந்திர குமாரும் இணைத் தலைமை தாங்கினர்.

இந்தப் பேச்சுக்களில் இருதரப்பு இராணுவ ஒத்துழைப்புகள், பயிற்சிகள் மற்றும் விளையாட்டு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசனைகள் நடத்தப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *