மேலும்

தமிழர் பிரச்சினைக்கான தீர்வு குறித்து இந்தியப் பிரதமருடன் பேசுவோம் – சுமந்திரன்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை நாளை சந்திக்கும் போது, இனப்பிரச்சினைத் தீர்வு மற்றும் தமிழ், முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடப்படும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரான, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

குறுகிய நேரப் பயணம் ஒன்றை மேற்கொண்டு இந்தியப் பிரதமர்  நரேந்திர மோடி நாளை முற்பகல் 11 மணியளவில் சிறிலங்காவுக்கு வரவுள்ளார்.

மதிய விருந்துடன் பேச்சு

இந்தியப் பிரதமர் மோடிக்கு, சிறிலங்கா  அதிபர் செயலகத்தில், செங்கம்பள வரவேற்புடன் கூடிய இராணுவ அணிவகுப்பு மரியாதை அளிக்கப்படும்.

அதையடுத்து, சிறிலங்கா அதிபரினால் அளிக்கப்படும், மதிய போசன விருந்துக்குப் பின்னர், இரு நாடுகளின் தலைவர்களுக்கும் இடையில், இருதரப்பு பேச்சுக்கள் இடம்பெறவுள்ளன.

இந்தியா ஹவுசில் சந்திப்புகள்

அதன் பினனர், பிற்பகல், 2 மணியளவில், இந்தியத் தூதுவரின் இல்லத்துக்குச் செல்லும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, அங்கு பல்வேறு அரசியல் கட்சிகளினதும் தலைவர்களைச் சந்தித்து பேசத் திட்டமிட்டுள்ளார். இந்தச் சந்திப்புகள் சுமார் 1 மணி நேரம் வரையே இடம்பெறும் எனத் தெரிகிறது.

சந்திக்கவுள்ள தலைவர்கள்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச, இதொகா தலைவர் ஆறுமுகன் தொண்டமான், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர்கள் மற்றும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் ஆகியோரும் இந்தியப் பிரதமரைச் சந்தித்துப் பேசவுள்ளார்.

இந்தப் பேச்சுக்களின் போது, ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுக்குப் பின்னர், சிறுபான்மையினர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், நெருக்கடிகள் குறித்து கூடுதல் கவனம் செலுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கூட்டமைப்பு பேசப் போவது என்ன?

இந்தியப் பிரதமருடன் நாளை பிற்பகல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நடத்தவுள்ள பேச்சு தொடர்பாக, கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் சிங்கள நாளிதழ் ஒன்றுக்கு தகவல் வெளியிட்டுள்ளார்.

“இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு, ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுக்குப் பின்னர், தமிழ், முஸ்லிம் மக்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகள், அரசியல் கைதிகளின் விடுதலையில் காணப்படும் இழுபறிகள், வடக்கு, கிழக்கில் மீள்குடியமர்வில் எதிர்கொள்ளப்படும் சிக்கல்கள், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்துதல் உள்ளிட்ட விடயங்கள் குறித்து இந்தியப் பிரதமருடன் கலந்துரையாடப்படும்” என்று சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

மாவை கருத்து

இந்தியப் பிரதமருடன் பேசவுள்ள விடயங்கள் குறித்து, கருத்து வெளியிட்டுள்ள கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர், மாவை சேனாதிராசா-

இனப்பிரச்சினைத் தீர்வு விடயத்தில் தீர்க்கமான முடிவை எடுப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்பாகவும்,  சிறுபான்மை மக்கள் மீது மேற்கொள்ளப்பட்டு வருகின்ற தாக்குதல்கள் அடக்குமுறைகள் தொடர்பாகவும் இந்தியப் பிரதமருடன் கலந்துரையாடவுள்ளோம்.

இந்தியாவின் பாதுகாப்புக்கும் முக்கியம்

இனப்பிரச்சினைக்குத் தீர்வினை பெற்றுக் கொள்வதன் மூலம் தான், இந்த நாட்டில் அனைத்துல பயங்கரவாத தாக்குதல்கள் இடம்பெறாமல், தடுக்க முடியும்  என்பதை, நாம் சுட்டிக்காட்டுவோம்.

இனப்பிரச்சினைக்கான தீர்வுச் செயற்பாடுகள் தற்போது கைவிடப்பட்டதாகவே உள்ளன.  இனப்பிரச்சினைக்கான தீர்வு முயற்சிகளை, மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பிலேயே எமது பேச்சுக்களில் முக்கிய கவனம் செலுத்தப்படும்” என்று  தெரிவித்தார்.

சம்பந்தனிடம் சுரேஸ் கோரிக்கை

இந்தியப் பிரதமர் மோடியைச் சந்திக்கும் போது, வடக்கு- கிழக்கு இணைப்பை இரா.சம்பந்தன் வலியுறுத்த வேண்டும் என்று, கூட்டமைப்பின் முன்னாள் பங்காளிக் கட்சியான ஈபிஆர்எல்எவ்வின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் கோரியுள்ளார்.

வடக்கு- கிழக்கு இணைப்பின் மூலமே, இந்தியாவினதும், தமிழர்களினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும் என்பதை, இந்தியப் பிரதமருக்கு எடுத்துக் கூறி இந்தச் சந்திப்பை அதற்கான தொடக்கப் புள்ளியாக அமைத்துக் கொள்ள வேண்டும் என்றும், சுரேஸ் பிரேமச்சந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *