‘இலங்கையின் போரும் சமாதானமும்’ – ஒஸ்லோவில் இன்று புத்தக அறிமுக அரங்கு
‘இலங்கையின் போரும் சமாதானமும்’ – நோர்வேயின் சமாதானத் தோல்வியின் விளைவுகள், என்ற பேராசிரியர் Øivind Fuglerudஇன் புத்தக அறிமுக அரங்கு ஒஸ்லோவில் இன்று இடம்பெறுகின்றது.
Øivind Fuglerud: நோர்வேஜிய சமூக மானிடவியற்துறைப் பேராசிரியர். முப்பது ஆண்டுகளுக்கு மேலாக இலங்கைத்தீவின் அரசியல் சமூக நிலைமைகள் பற்றிய ஆய்வுகளை முன்னெடுத்து வருபவர். மட்டுமல்லாது நோர்வே தமிழ்ச் சமூகம் தொடர்பான ஆழ்ந்த அறிதலுடையவர். ஈழத் தமிழர்களின் நாடுகடந்த வாழ்வு பற்றிய அறிதலுமுடையவர்.
இலங்கையின் பல பாகங்களிலும் தங்கியிருந்து கள ஆய்வுகளை மேற்கொண்ட அனுபவம் மிக்கவர்
இலங்கை நிலைமைகள் பற்றிய நிபுணத்துவ அறிதல் உடைய கல்வியாளர்களில் முக்கியமானவர்.
இன்று வியாழன் 06/06/19 அவர் எழுதிய ‘இலங்கையின் போரும் சமாதானமும்’ – நோர்வேயின் சமாதானத் தோல்வியின் விளைவுகள்!’ நூல் அறிமுக அரங்கு ஒஸ்லோவில் இடம்பெறவுள்ளது.
இலங்கைத்தீவின் இனமுரண்பாட்டுக்கான சமாதான அனுசரணை (2000 – 2009) நோர்வேயின் வெளியுறவு அரசியலில் அதீத முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வென்ற பிம்பம் நோர்வேயினால் கொடுக்கப்பட்டது.
நோர்வேயின் சமாதான முயற்சியின் தோல்வி ஏற்படுத்தியதும் தொடர்ச்சியாக பலதளங்களில் ஏற்படுத்திக்கொண்டிருக்கின்றதுமான விளைவுகளைப் பற்றி ஆராய்வது புத்தகத்தின் நோக்கமெனக் குறிப்பிடப்படுகிறது.
சமாதான முயற்சியின் தோல்விகளையும் அதற்கான காரணங்களையும் ஆராயும் புத்தகம். அதன் அடிப்படையில் இலங்கைத்தீவின் அரசியல் வரலாற்றுப் பின்னணி- இனமுரண்பாட்டுக்கான மூலகாரணிகள்- அரசியல், இன,மத,சமூக,பொருளாதார,பண்பாட்டு முரண்களும் யதார்த்தங்களும் புத்தகத்தில் பேசப்படுகின்றன.
முள்ளிவாய்க்கால் பேரழிவுவின் பத்தாண்டு நிறைவில் இந்தப்புத்தகம் வெளிவருகின்றது. இலங்கைத்தீவின் இன முரண்பாடுடன் தொடர்புடைய
– உள்நாட்டுத்தரப்புகள்
– பிராந்திய சக்திகள்
– தமிழ் டயஸ்போறா
– நோர்வே உட்பட்ட சர்வதேச சக்திகள்
என அனைத்துத் தரப்பினரைப் பற்றியதும் நோக்கியதுமான விமர்சனங்கள் கணிசமாக உள்ளதாக அறிய முடிகின்றது.
அந்த வகையில் இது ஒரு முக்கியமான புத்தகமாக – காத்திரமான உரையாடல்களுக்கும் விவாதங்களுக்கும் வழிகோலக்கூடியது என்பதை உணர முடிகின்றது.
இன்றைய அறிமுக அரங்கில் ஆய்வாளர்களான இசலின் பிரிதன்லுன்ட், குன்னார் சோர்போ மற்றும் தமிழ் சிவில் சமூக செயற்பாட்டாளர் பாலசிங்கம் யோகராஜா, பேராசிரியர் ஒய்வின்ட் புக்லரூட் ஆகியோர் கருத்துரை ஆற்றுகின்றனர்.
Keen to read the content of the Book-hope we can soon expect an English translation of this important Book. Best wishes for the launch.