மேலும்

கண்டியில் இன்று வணிக நிலையங்களை மூடி தேரரின் போராட்டத்துக்கு ஆதரவு

தலதா மாளிகைக்கு முன்பாக, நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர் நடத்தி வருகின்ற உண்ணாவிரதப் போராட்டம், இன்று நான்காவது நாளை எட்டியுள்ள நிலையில், கண்டி நகரில் இன்று வணிக நிலையங்களை அடைத்துப் போராட்டம் நடத்தப்படவுள்ளது.

அமைச்சர் றிசாத் பதியுதீன், மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி, கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லா ஆகியோரை பதவியில் இருந்து நீக்கக் கோரி, நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர் கடந்த 31ஆம் நாள் தொடக்கம் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வருகிறார்.

தமது கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை, இந்தப் போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை என்று உறுதியாகத் தெரிவித்துள்ளார்.

அத்துரலியே ரத்தன தேரர் நீர் மாத்திரம் அருந்திப் போராட்டத்தை தொடர்ந்து வருகிறார். அவரது  உடல்நிலை சீராக இருப்பதாக, தேரரின்  உடல் நிலையைப் பரிசோதித்த மருத்துவர்கள்,தெரிவித்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அத்துரலியே ரத்தன தேரரை நேற்று பொது பலசேனாவின் பொதுச்செயலர் கலகொடஅத்தே ஞானசார தேரர், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த திசநாயக்க உள்ளிட்டவர்கள் சந்தித்தனர்.

இந்தச் சந்திப்புக்குப் பின்னர் கருத்து வெளியிட்ட ஞானசார தேரர், 24 மணித்தியாலங்களுக்குள் அத்துரலியே ரத்தன தேரரின் போராட்டத்துக்கு உரிய பதில் அளிக்கப்படாவிடின், பௌத்த பிக்குகளை களமிறக்கிப் போராட்டத்தை நடத்தப் போவதாக எச்சரித்தார்.

இந்தநிலையில், அத்துரலியே ரத்தன தேரரின் போராட்டத்துக்கு ஆதரவாக இன்று கண்டி நகரில் உள்ள வணிக நிலையங்களை அடைத்துப் போராட்டம் நடத்தப் போவதாக சிங்கள வணிகர் சங்கம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *