மேலும்

அசாத் சாலி, ஹிஸ்புல்லா பதவி விலகினர்

நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரரின் உண்ணாவிரதப் போராட்டம், மற்றும் அவருக்கு ஆதரவாக தீவிரமடைந்து வந்த போராட்டங்களை அடுத்து, மேல் மாகாண ஆளுநர், அசாத் சாலி மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லா ஆகியோர் பதவிகளை விட்டு விலகியுள்ளனர்.

இன்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு அவர்கள் தமது பதவி விலகல் கடிதத்தை கையளித்தனர். இவர்களின் பதவி விலகலை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன ஏற்றுக் கொண்டுள்ளார்.

அரசிதழ் அறிவிப்பு வெளியானது

மேல் மாகாண ஆளுநர், அசாத் சாலி மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லா ஆகியோர் பதவி விலகியுள்ளமை தொடர்பான அரசிதழ் அறிவிப்புகளும் வெளியிடப்பட்டுள்ளன.

விரைவில் புதிய ஆளுநர்கள்

மேல் மாகாணம் மற்றும் கிழக்கு மாகாணத்துக்கு புதிய ஆளுநர்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள் என்றும் சிறிலங்கா அதிபர் செயலகம் அறிவித்துள்ளது.

அழுத்தங்களுக்கு பணிந்தனர்

அமைச்சர் றிசாத் பதியுதீன், மேல் மாகாண ஆளுநர், அசாத் சாலி மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லா ஆகியோரையும் பதவி நீக்கம் செய்யக் கோரி, நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர் இன்று நான்காவது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வந்த நிலையிலும், அவரது போராட்டத்துக்கு ஆதரவாக பெருமளவானோர் அணி திரளத் தொடங்கிய நிலையிலும் மேல் மற்றும் கிழக்கு ஆளுநர்கள் பதவி விலக முடிவு செய்தனர்.

மகாநாயக்கர்கள் அவசர கடிதம்

அத்துரலியே ரத்தன தேரரின் கோரிக்கையை நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்குமாறு அஸ்கிரிய மற்றும் மல்வத்த பீடங்களின் மகாநாயக்கர்கள் இன்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு அவசர கடிதம் ஒன்றையும் அனுப்பியிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *