மேலும்

கைது செய்வதை தடுக்கக் கோரி அட்மிரல் கரன்னகொட உச்ச நீதிமன்றில் மனு

தம்மைக் கைது செய்து தடுத்து வைப்பதற்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரி, சிறிலங்கா உச்சநீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொட.

கொழும்பில் 11 இளைஞர்கள், 2008-09 காலப்பகுதியில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட வழக்கில், 14 ஆவது சந்தேக நபராக சேர்க்கப்பட்டுள்ள அட்மிரல் வசந்த கரன்னகொடவிடம், வாக்குமூலம் பெறுவதற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அவரைத் தேடி வருகின்றனர்.

அவரது இரண்டு வசிப்பிடங்களிலும் இருந்து தலைமறைவாகியுள்ள அட்மிரல் வசந்த கரன்னகொட, குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்படுவதை தடை செய்யும் இடைக்கால உத்தரவு ஒன்றை பிறப்பிக்குமாறு கோரி, உச்சநீதிமன்றில் நேற்று தமது சட்டவாளர்களின் ஊடாக அடிப்படை உரிமை மனுவை தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், மேற்படி கடத்தல்கள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்களுடன் தனக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்றும், அதுபற்றி அறிந்ததும் தானே காவல்துறையில் முறைப்பாடு செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ட்ராவிஸ் சின்னையாவும்,  வேறு சிலருமே தமக்கு எதிராக முறைப்பாடு  செய்துள்ளனர் என்றும் அதன் பேரில் தாம் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும், அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *