மேலும்

தெற்காசியாவின் நட்சத்திரம் –3

பூகோள சர்வதேசஅரசியல்  நிலையை சாதகமாக பயன்படுத்த முனையும் வகையில் இந்து சமுத்திர  பூகோள அரசியலில் மூலோபாய மையமாக தன்னை விளம்பரப்படுத்தி கொள்வதில் பெருமை கொண்டுள்ள  சிறு தீவான சிறிலங்கா, சிங்கப்பூரின் தகைமைகள்யாவும் தன்னகத்தே கொண்டதான சர்வதேச எண்ணக் கருத்தை உருவாக்க முயற்சிக்கிறது.

ஆனால் உள்நாட்டு கொள்கையில் சிங்கள பெளத்த தேரவாத தலையீடுகளாலும் , அதன் மேலாண்மையாலும் நினைத்த பொருளாதார அரசியல்  வளர்ச்சியை உள்நாட்டில் எட்ட முடியாத நிலையில் உள்ளது.

சிங்கப்பூரின் பொருளாதார வளர்ச்சியினாலும், வெளியுறவுக் கொள்கையினாலும் மலேசியாவுக்கோ தாய்லாந்துக்கோ அல்லது இந்தோனேசியாவுக்கோ எந்தவித பலசமநிலை குறித்த இடையுறுகள் ஏற்படவாய்ப்பு இல்லை என்பதை சிங்கப்பூர் ஆரம்பத்திலிருந்தே உறுதிப்படுத்தும் வகையில் செயற்பட்டு வந்துள்ளது.

சுதந்திரம் அடைந்த காலகட்டங்களில்  ஏற்பட்ட தகராறுகளை கூட பொருளாதார அபிவிருத்தி  நலன்களை முன்நிறுத்தி சமயோசித இராஜதந்திரத்தால் தீர்த்து கொண்டது.

சிறிலங்காவின் நகர்வுகள் 1978 இல் இருந்து திறந்த பொருளாதார கொள்கைகள் என்ற வகையில்   அது அமெரிக்காவுடன் உறவுகளை  விரிவுபடுத்தி வைத்திருந்த காலங்களில் எவ்வாறு அது இந்தியாவின் பிராந்திய நலன்களை பாதிப்பதாக இருந்ததோ, அதேபோல தொண்ணூறுகளிற்கு அப்பால்  சீன சார்பு உறவுகளை ஏற்படுத்தி கொள்ளும் போதும் இந்தியாவின் பிராந்திய நலன்களை பாதிப்பதாக உள்ளது.

சிங்கப்பூர் என்ற சிறிய தேசம் பெரிய வல்லரசுகளுடன் வெளிப்படையான நடைமுறை சாத்தியம் கொண்ட அணுகுமுறையுடன் சர்வதேச உறவின் மாற்றங்களுக்கு ஏற்ப , ஆசியான் நாடுகளுடனும் அமெரிக்காவுடனும் சீனாவுடனும் ஆக்கபூர்வமான நடுநிலை கொள்கையை கொண்டுள்ளது. ஆசிய கலாச்சாரங்களை அடியொற்றி மேலைத்தேய நெறிமுறைகளை கடைப்பிடிக்கும் அதேவேளை, எந்த கலாச்சாரத்தையும் அரச செயற்பாடுகளில் தலையீடு செய்வதற்கு அனுமதிப்பதில்லை

இதனால் தனித்துவமான ஆசிய முதலாளித்துவ முறைமை ஒன்றை வெளிப்படுத்தவதுடன் அதற்கு ஏற்ற வகையிலான ஆட்சியையும் கொண்டுள்ளது எனலாம்.

இதற்கு நேரெதிராக இந்தியாவை உறுதிமொழிகள் மூலம் நம்ப வைத்து கையாளுவதிலேயே பெரும் கவனம் செலுத்தப்படுகிறதே தவிர , நடைமுறைக்கு சாத்தியமான உள்நாட்டு கொள்கை எதனையும் மாற்ற முடியாத நாடாக சிறிலங்கா உள்ளது.

இந்தியாவே தனது பிரதான வர்த்தக தொடர்பு மட்டுமல்லாது பண்பாட்டு தொடர்புகளை  இந்திய சார்பானதாக காட்டிகொள்ளும் சிறிலங்கா, நடைமுறையில் இந்திய எதிர்ப்புவாத போக்கை பின்புலத்தில் கொண்டுள்ளது.

உதாரணமாக சிறிலங்கா எந்த வல்லரசுகளும் இராணுவ கட்டமைப்புகளை தனது இறையாண்மைக்கு உட்பட்ட பிரதேசத்தில்  நிறுவுவதற்கு அனுமதிக்காது என்ற உறுதிமொழிகளை வழங்கி வருகிறது.

ஏற்கனவே உள்நாட்டு இனப்பிரச்சினை தீர்வு திட்டங்களில் சிறிலங்காவின் நிறைவேற்றப்படாத உறுதிமொழிகள் குறித்து  வல்லரசுகள் நன்கு அனுபவப்பட்டவைகளாகவே உள்ளன. சிறிலங்கா வெளியுறவு அமைச்சின் நகர்வுகளை உன்னிப்பாக அவதானித்து வரும் இந்திய இராஜாங்க அலுவலர்கள்   சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் உறுதி மொழிகள் ஒரு புறமிருக்க நடைமுறையில் இந்தியாவுக்கு எதிரான   இராஜதந்திர நகர்வுகளாகவே கருத்தில் கொள்ளப்படுகிறன.

ஏனெனில் 1987 ஆம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட இந்திய- சிறிலங்கா  ஒப்பந்த்தின் அடிப்படையில் திருகோணமலை துறைமுகம் உட்பட இருநாடுகளுக்கும் இடையிலான ஒருமைப்பாடு பாதுகாப்பு ஆகியவற்றிற்கு எதிரான வகையில் செயற்பாடுகளில் ஈடுபடுவதில்லை என உறுதி வழங்கப்பட்டிருந்த போதிலும், 2014ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 20ஆம் திகதி சீன நீர்மூழ்கி கப்பலை கொழும்பு துறைமுகத்தில் நுழைவதற்கு அனுமதித்ததன் ஊடாக,  இந்தியாவின் அதிக வெறுப்பை சிறிலங்கா சம்பாதித்து கொண்டது.

இந்த நீர்மூழ்கியின் வருகையின் போது  கடலடி பாதைகளை சுற்று நோட்டமிட்டு விபரம் சேகரிக்க சீன பாதுகாப்பு தரப்புக்கு சிறிலங்கா   இடம் கொடுத்திருக்கிறது என்பது இந்தியாவின் குற்றச்சாட்டாக இருந்தது.

இந்த நீர்மூழ்கி கப்பல்களின் வருகைகளைத் தொடர்ந்து   2015 ஆம் ஆண்டு சிறிலங்காவில் இடம் பெற்ற தேர்தலில் இந்தியாவின் பங்கு பெருமளவில் இருந்தது என்ற குற்றச்சாட்டு அந்த தேர்தலிலே தோல்வி கண்ட மகிந்த இராஜபக்ச தரப்பினரினரால் முன்வைக்கப்பட்டது..

அதேவேளை, இந்திய பாதுகாப்பு கடல் ரோந்து நடவடிக்கை கலன்களுக்கு சவாலாக,   பல்வேறு வல்லரசுகளிடமும் கடற்படைசார்  உதவிகளை பெற்று தனது கடற்பலத்தை விரிவுபடுத்தும் சிறிலங்கா , போர்க்கப்பல்களையும் அது சார்ந்த உபகரணங்களையும் கடன் அடிப்படையில் ஆயினும்  வாங்கி விடுவதற்கு கூட, பெரும் ஆர்வம் கொண்டுள்ளது.

இந்தியா பலரோந்து படகுகளை அன்பளிப்பாக கொடுத்திருந்த போதிலும் இந்திய தொழில்நுட்பத்திற்கு அப்பால் செயற்படும் பாங்கில் இந்த நடவடிக்கைகள் அமைவதான கடற் படை உபகரண ஆய்வாளர்களின் கருத்து உள்ளது.

திருகோணமலையை சிங்கள மயப்படுத்தல்

1948 ஆம் ஆண்டு சிறிலங்கா சுதந்திரம் அடைந்ததாக அறிவிக்கப்பட்ட காலப்பகுதியிலிருந்து திருகோணமலையை சிங்கள பெரும்பான்மை பிரதேசமாக மாற்றுவதில் சிறிலங்கா அரச தரப்பு மிகவும் கவனமாக செயற்பட்டு வருகிறது. 1987 ஆம் ஆண்டு இந்திய – சிறிலங்கா ஒப்பந்தத்திற்கு ஏற்ப வடக்கு- கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்ட ஒரு பிராந்தியமாக ஏற்று கொள்ளப்பட்ட போதிலும், திருகோணமலை துறைமுக நிர்வாகத்தை  கொழும்பு அரச அதிகார செயற்பாடுகளின் கட்டுப்பாட்டிலேயே வைத்திருந்தது.

துறைமுக போக்குவரத்து அதிகாரத்தை மாகாண அதிகாரங்களில் சேர்த்து கொள்ளாது, கொழும்பு அரசின் கைகளிலேயே வைத்திருப்பதன் மூலம் வட-கிழக்கு மாகாண அரசாங்கங்கள்  பொருளாதார நிலை எடுத்து விட முடியாதபடி கொழும்பு அதிகாரத்திலேயே தங்கி இருக்கும் நிலையே பேணி வரப்படுகிறது

இதில் அடுத்த முக்கியமான பகுதி மகாவலி அபிவிருத்தி ஆகும்.   மகாவலி அபிவிருத்தி என்ற பெயரில்  சிறிலங்கா ஜனாதிபதியின் நேரடி கண்காணிப்பின் கீழ் பல்வேறு வலயங்களாக பிரிக்கப்பட்டு அபிவிருத்தி நடவடிக்கைகள் என்ற பெயரில் சிங்கள குடியேற்றம்   இடம் பெற்று வருகிறது. இந்த திட்டத்தை தமிழ் மக்கள் தமது பாரம்பரிய பிரதேசங்கள் மீதான நில ஆக்கிரமிப்பு என சிறிலங்கா அரசின் மீது குற்றம் சுமத்தி வருகின்றனர்.

அரச உதவியுடன் தமிழினத்தை சிறுமைப்படுத்துவதான நோக்கம் கொண்ட சிங்களக் குடியேற்றம் என்று உள்ளுர் தமிழ் தேசிய ஆர்வலர்கள் கடுமையாக எதிர்த்து வருகின்றனர். 1977 ஆம் ஆண்டிலிருந்து படிப்படியாக தமிழ் மக்களது பாரம்பரிய தாயகம், சிங்கள மக்கள் மத்தியில் பகிர்ந்து அளிக்கப்படுவதுடன் இந்த திட்டத்தின் பலனாக வடக்கு- கிழக்கு என தமிழர் தாயகம் புவியியல் ரீதியாக பிரிக்கப்படுவதற்கும் ஏற்புடையதாக இருக்கும் என்பது சிறிலங்கா அரசின் யோசனையாக உள்ளது.

இந்த திட்டத்தில் குறிப்பாக பழமைமிக்க தமிழ் கிராமமான தம்பலகாமம் மிகவும் திட்டமிட்ட வகையில் சிங்கள குறியேற்றத்திற்குள் உள்ளாவதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. தம்பலகாமம் பகுதியில் சிறிய கிராம எல்லைகள் யாவும் பகுதி பகுதியான இந்த ஆக்கிரமிப்பிற்குள் உள்ளாவதான செய்திகள் உள்ளன.

திருகோணமலைப் பகுதியையும் கொழும்பையும் இணைக்கும்  வர்த்தக நேர்கோட்டில்  பொருளாதார வலயமாக்குவதில் கொரிய நிறுவனமாகிய  கொரிய ஏற்றுமதி இறக்குமதி வங்கி,  ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் இணைந்து ஆர்வம் காட்டி இருந்தன. இந்த நேர்கோடு தம்பலகாமம் தமிழ் கிராமத்துடன் ஆரம்பமாகி, திருகோணமலை  துறைமுகத்தை அண்டிய பகுதியில் முடிவடைகிறது.

அத்துடன் தம்பலகாமத்தில் உள்ள பல கிராமங்கள் அருகே உள்ள அனுராதபுர மாவட்டத்துடன் இணைக்கப்பட்டு திருகோணமலை துறைமுகத்தை நெருங்குவதற்கான பல்வேறு நடவடிக்கைகளும் திட்டமிட்டு எடுக்கப்பட்டு வருகிறது. திரு கோணமலை பகுதியை சூழ உள்ள பல்வேறு கிராமங்களும் இத்தகைய சிங்கள குடியேற்றத்தினால் ஆக்கிரமிக்கப்பட்டு வருவது முக்கியமானதாகும்.

பொருளாதார திட்டங்கள் எதிர்காலத்தில் விரிவடைந்து புதிய வர்த்தக வலையமாக உருவாகுமிடத்து, வேலைவாய்ப்புகளும் தனியார் முதலீடுகளும் பெருகுவதற்கு மிகுந்த வாய்ப்புகள் உள்ளது. இந்த வாய்ப்புகளை சிங்கள குடியேற்றவாசிகளுக்கு பெற்று கொடுக்கும் நோக்குடனும், தமிழர் தாயகத்தை துண்டாடுவதையும் நோக்கமாக கொண்டு,  இந்த பகுதி கிராமங்களில் அதிக சிங்கள குடியேற்றவாசிகளை கொண்டு வந்து அமர்த்தி அவர்களுக்கு அரச காணி சான்றிதழ்களும் வழங்கி, நிரந்தர வதிவிடம் அமைத்து தரும் வேலைகள் ஏற்கனவே இடம் பெற்று வருவதாக உள்ளுர் தமிழ் தேசியவாதிகள் கூறுகின்றனர்.

இந்த வகையில் திருகோணமலையின் பல்வேறு  நிலைமைகளையும்  மையமாக வைத்து  தனது சர்வதேச அரசியல் பொருளாதார மற்றும் இராணுவ இலாப நோக்கங்களை அடைய சிறிலங்கா முற்படுகிறது. இதிலே சிறிலங்காவின் போர்க்குற்ற,  மனித உரிமை குற்றசாட்டு, மூலோபாய  பாதுகாப்பு நகர்வுகள்,  சிங்கள குடியேற்றவாதம்  என பல்வேறு நோக்கங்களையும் நகர்த்துவதற்கு முயற்சிக்கின்றது.

தமிழர் இறையாண்மை

விடுதலைப் போராட்ட காலங்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் திருகோணமலையை விடுதலை பெற்ற புதிய தேசத்தின்  தலைநகராக ஆக்குவது என்று அறிவித்திருந்தனர்.  போராட்டத்தின் இறுதிக்காலங்களில் திருகோணமலை முக்கிய பங்கு வகித்த போதிலும், குறிப்பாக 2008 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 26 ஆம் திகதி விடுதலைப்புலிகள் திருகோணமலை துறைமுகம் மீது விமானம் கொண்டு தாக்கிய போது சிறிலங்கா தனது இறைமையை இழந்து  நின்றது.

இந்த விமானத் தாக்குதல் சிங்கள மக்களுக்கே தாம் தமிழ் பிரதேசத்தில் ஊடுருவல் செய்து ஆக்கிரமித்து வாழ்கிறோம் என்ற ஒரு எண்ணத்தை உருவாக்கி இருந்தது என்றால் அது மிகையாகாது.

திருகோணமலை துறைமுகம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது , ஆனால் சீன கட்டுப்பாட்டு நடவடிக்கைக்குள் வந்து விட்ட அம்பாந்தோட்டை துறைமுகத்தின் நிலைமை காரணமாகவும், அமெரிக்காவின் புதிய இந்தோ-பசுபிக் பிராந்திய ஒருங்கிணைப்பு கொள்கையாலும், வங்க கடல் நாடுகள் புதிய தொரு கடற்கரை நாடுகளின் சமுதாயமாக உருவாகும் நிலைகாரணமாகவும், மீண்டும் திருகோணமலை புதிய ஒரு பரிமாணத்தை பெற்று கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.

வங்கக் கடலில் புதிய பாதுகாப்பு மற்றும் பொருளாதார கட்டமைப்புகள் உருவாகும் தேவைகள் எழுந்துள்ள நிலையில், திருகோணமலை பகுதியும் அதனை சூழ உள்ள பகுதிகளும் அதிக வளர்ச்சியை பெற்று கொள்ள கூடிய நிலையை எட்டிவருகிறது. இங்கே தமிழ் பேசும் மக்களின் செல்வாக்கை அதிகரிப்பதன் மூலம் அதன் தனித்துவத்தை பேணக் கூடிய நிலை ஏற்படும்.

அதேவேளை சர்வதேச வளர்ச்சிக்கு ஏற்ப முதலீட்டாளர்களின் வருகையால் ஏற்படும்  பொருளாதார வளர்ச்சியின் பலன்களை பெற்றுக் கொள்ளவும் வாய்ப்புகள் ஏற்படும். பொதுவாக ஒரு பிரதேசத்தின் தனித்துவம் அந்த பிரதேசத்தில் அதிகமாக காணப்படும் கலாசார , பண்பாட்டு நிகழ்வுகளை அண்டியதாக அமைவது வழக்கம். இந்த பொதுவான சமூக ஆய்வுப் போக்கை மையமாக கொண்டே சிறிலங்கா அரசு, திருகோணமலைப் பகுதியில் உள்ள பல்வேறு இடங்களையும் சிங்கள பௌத்த பண்பாட்டு கட்டட வடிவங்களை நிறுவி வருகிறது.

இது குடியேற்றப்பட்ட சிங்கள மக்களை தமது சொந்தப் பிரதேசத்தில் வாழ்வது ’போன்ற மனோநிலையை ஏற்படுத்த உதவும். அத்துடன் அதிக உல்லாசப் பிரயாணிகளை கொண்ட இப்பிரதேசம்  உலகிற்கு இது ஒரு சிங்கள பிரதேசம் என்ற மன எண்ணப்படத்தை உருவாக்குவதாகவும் அமையும்.  ஆனால் தமிழ் பேசும் மக்களின் கோவில் திருவிழாக்களும் இதர கலாச்சார நிகழ்வுகளும் அதன் பாரம் பரியத்தை இன்னமும் எடுத்து  கூறுவனவாகவே உள்ளன.

முடிவுரை

இலங்கைத்தீவில் தமிழர் தாயகப்பகுதியான திருகோணமலை என்றும் தெற்காசிய  வரலாற்றில் ஒரு நட்சத்திரமாகவே திகழ்கிறது. அதன் நிலையும்  இயற்கையான வடிவமைப்பும் இதற்கு முக்கிய காரணமாகும்.   காலாகாலம் ஏற்பட்டு வந்த அரசியல் மாற்றங்களாலும் இன அழிப்பு படுகொலைகளாலும் குடியேற்றதிட்டங்களாலும் மீண்டும் மீண்டும் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வந்திருக்கிறது

இவை எல்லாவற்றுக்கும் மேலாக வல்லரசுகளின் பூகோள அரசியல் போட்டியின் மத்தியில் சிக்கி இருப்பது, தற்போதைய முக்கியமான நிலையாகும். சிறிலங்கா அரசு பல்வேறு தரப்புகளுடனும் பேச்சுவார்த்தைகள் நடாத்தி ஏதாவது ஒரு தரப்பிடம் கையளித்து விடப் பார்க்கிறது. இதன் மூலம் இலாபம் அடைவது சிறிலங்கா அரச செல்வாக்கு பெற்ற சமுதாயமாகவே இருக்கமுடியும்.

இருந்த போதிலும் இந்த துறைமுகத்தை மீண்டும் புனரமைப்பு செய்வது குறித்து  நிரந்தர தீர்மானம் எதுவும் இதுவரை எடுக்கப்படாது இருப்பது முக்கியமானதாகும். முதலீடு செய்ய விரும்பும் நிறுவனங்களும்,நாடுகளும் பாதுகாப்பு தேவைகளின் நிமித்தம் இத்துறைமுகத்தின் செயற்பாடுகள் வல்லரசுகளின் கைகளுக்கு மாற்றப்படுமிடத்து நிறுவனங்கள் தமது முதலீடுகளின் எதிர்காலம் குறித்து கவனத்தில் கொண்டுள்ளன.

இந்த வகையில் இந்த துறைமுகத்தை மிக நேர்த்தியாக  வியாபார நோக்குடனும் சிறந்த முதலீடுகளுக்கு ஈடுகொடுக்கக் கூடிய செயற்பாடுகளுடன் வளர்ச்சி பெற செய்யத்தக்க வகையில் ஒட்டுமொத்த சமூக ஆதரவுடன் கொண்டு செல்லக் கூடிய தரப்பு தமிழர் தரப்பு மட்டுமே.

லண்டனில் இருந்து லோகன் பரமசாமி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *