சிறிலங்கா அதிபரின் விமர்சனம் – மனித உரிமைகள் ஆணைக்குழு எதிர்ப்பு
சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழு மீது சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன முன்வைத்த குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ள ஆணைக்குழுவின் தலைவர் கலாநிதி தீபிகா உடகம, சிறிலங்கா அதிபரின் அநியாயமான விமர்சனங்களால் ஆழ்ந்த கவலையும் மனச்சோர்வும் அடைந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் சிறிலங்கா அதிபருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
கடந்த புதன்கிழமை சிறிலங்கா நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அதிபர் சிறிசேன, மாலியில் ஐ.நா அமைதிப்படையில் பணியாற்றிய இரண்டு சிறிலங்கா படையினர் கொல்லப்பட்டமைக்கு சிறிலங்கா மனித உரிமை ஆணைக்குழுவின் தாமதமான செயற்பாடே காரணம் என்றும், அகுணகொல பெலஸ்ஸ சிறைச்சாலையில் சிறப்பு அதிரடிப்படையினரை பாதுகாப்பில் ஈடுபடுத்த எடுத்த நடவடிக்கையை மனித உரிமை ஆணைக்குழு தடுத்து விட்டதாகவும் குற்றம்சாட்டியிருந்தார்.
இதுகுறித்து, சிறிலங்கா அதிபருக்கு கலாநிதி தீபிகா உடகம அனுப்பியுள்ள கடிதம் ஒன்றில், அநியாயமான விமர்சனங்களால் மனச்சோர்வு அடைந்திருப்பதாக அதில் தெரிவித்துள்ளார்.