சிறிலங்கா இராணுவ அதிகாரிகளுக்கு ரஷ்யாவில் ஆட்டிலறி, ஏவுகணை சூட்டுப் பயிற்சி
சிறிலங்கா இராணுவ அதிகாரிகளுக்கு ரஷ்யாவில் ஆட்டிலறிச் சூடு மற்றும் ஏவுகணைத் தொழில்நுட்பப் பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளன.
இந்தப் பயிற்சிகளுக்கான முதல் தொகுதி சிறிலங்கா படை அதிகாரிகள் குழு, அடுத்த சில நாட்களில் மொஸ்கோவுக்குப் பயணமாகவுள்ளது.
ரஷ்யாவுக்கான சிறிலங்கா தூதுவர் கலாநிதி தயான் ஜெயதிலக, இந்த தகவலை ரஷ்யாவின் ஸ்புட்னிக் நாளிதழிடம் தெரிவித்துள்ளார்.
“ஆட்டிலறி மற்றும் ஏவுகணை தொழில்நுட்பங்கள் குறித்த பயிற்சிக்காக, சிறிலங்கா இராணுவத்தின் ஒரு தொகுதி இளம் அதிகாரிகளை அடுத்த சில நாட்களில் ரஷ்யாவுக்கு அனுப்பவுள்ளோம்.
அத்துடன் ரஷ்ய இராணுவ குழுவொன்றும் சிறிலங்காவுக்குச் செல்லவுள்ளது. சிறிலங்காவில் நடத்தப்படும் அனைத்துலக தீவிரவாத முறியடிப்பு நிகழ்வுகளில் பங்கேற்க ரஷ்ய பிரிவுக்கு சிறிலங்கா அழைப்பு விடுத்துள்ளது.
இந்த நிகழ்வு இந்த ஆண்டின் இரண்டாவது அரையாண்டில் இடம்பெறும். இந்த நிகழ்வில் பங்கேற்க ரஷ்ய கடற்படைக்கும் அழைப்பு விடுத்துள்ளோம்.
ரஷ்ய இராணுவத்தின் அனுபவங்களின் மீது சிறிலங்கா ஆர்வம் கொண்டுள்ளது. அவற்றை பெற்றுக் கொள்ள விரும்புகிறது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.