மேலும்

மைத்திரி – மகிந்த தலைமையில் புதிய கூட்டணி

சிறிலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் சிறிலங்கா பொதுஜன முன்னணியை உள்ளடக்கிய பாரிய கூட்டணி ஒன்றை அமைப்பது குறித்து இரண்டு கட்சிகளுக்கும் இடையில் பேச்சுக்கள் நடத்தப்பட்டுள்ளன.

நேற்று முன்தினம் இரவு, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் இல்லத்தில் இந்தப் பேச்சுக்கள் இடம்பெற்றன.

சுமார் 2 மணித்தியாலங்கள் நடந்த இந்தப் பேச்சுக்களில், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச, பொதுஜன முன்னணியின் தலைவர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாசிறி ஜெயசேகர, மகிந்த அமரவீர, தினேஸ் குணவர்த்தன, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, டக்ளஸ் தேவானந்தா, வாசுதேவ நாணயக்கார, ஏஎச்எம்.அதாவுல்லா, பேராசிரியர் திஸ்ஸ விதாரண உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில் பரந்துபட்ட கூட்டணியை அமைப்பதற்கான, பேச்சுக்களை நடத்துவதற்கான குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

டலஸ் அழகப்பெரும தலைமையிலான இந்தக் குழுவில், தயாசிறி ஜெயசேகர, திலங்க சுமதிபால, அதாவுல்லா, டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்தக் குழுவின் அமைப்பாளராக உதய கம்மன்பில நியமிக்கப்பட்டுள்ளார்

இரண்டு வாரங்களுக்குள் புதிய அரசியல் கூட்டணியை உருவாக்கும் பொறுப்பு இந்தக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கட்சித் தலைவர்களுடன் இந்தக் குழு நடத்தும் பேச்சுக்களை அடுத்து, எதிர்வரும் 16, 17ஆம் நாள்களில், சிறிலங்கா அதிபருடன் கலந்துரையாடல்களை நடத்தவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *