படுகொலைகள் பற்றிய ஆவணத்தை வெளியிடவில்லை – விக்னேஸ்வரன் மறுப்பு
யாழ்ப்பாணத்தில், நடந்த ஈபிஆர்எல்எவ் மாநாட்டில், எந்த ஆவணத்தையும் தான் வெளியிடவில்லை என்று, தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம், சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் நடந்த ஈபிஆர்எல்எவ் கட்சியின் பிராந்திய மாநாட்டில், வரலாற்று ஆவணம் ஒன்று வெளியிடப்பட்டிருந்தது. அதில், விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகள் பற்றிய குறிப்புகளும் இடம்பெற்றிருந்தன.
இந்த மாநாட்டில் சி.வி.விக்னேஸ்வரனும் பங்குபற்றி உரையாற்றியிருந்தார்.
இந்தநிலையில், விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகள் பற்றிய ஆவணத்தை, ஈபிஆர்எல்எவ் மாநாட்டில் விக்னேஸ்வரன் வெளியிட்டு வைத்தார் என்று ஊடகங்கள் பலவற்றில் செய்திகள் வெளியாகியிருந்தன.
இது தொடர்பாக மறுப்பு அறிக்கை ஒன்றை விக்னேஸ்வரன் வெளியிட்டுள்ளார்.
“யாழ்ப்பாணத்தில் கடந்த 3 ஆம் நாள் நடைபெற்ற ஈ.பிஆர்எல்எவ் மாநாட்டில் சிறப்பு அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றியதைத் தவிர, புத்தக வெளியீட்டிலோ அல்லது வேறு எந்த ஆவண வெளியீட்டிலோ நான் ஈடுபடவில்லை” என்று, விக்னேஸ்வரன் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.