எமது தீர்வு யோசனைக்கு பதிலளிக்கப் பயந்தே பேச்சுக்களை முறித்தார் மகிந்த – சம்பந்தன் குற்றச்சாட்டு
நாங்கள் முன்வைத்த, இனப்பிரச்சினைக்கான தீர்வுத்திட்ட யோசனைகளுக்குப் பதிலளிக்கப் பயந்தே பேச்சு மேசைக்கு வராமல் மகிந்த தரப்பினர் பின்வாங்கினர் என்று, தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
இனப்பிரச்சினைக்கு தீர்வுகாணும் முயற்சி தோல்வி கண்டதற்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பே பிரதான காரணம் என்று சிறிலங்காவின்முன்னாள் அதிபர், மகிந்த ராஜபக்சஅண்மையில் குற்றம்சாட்டியிருந்தார்.
இந்தக் குற்றச்சாட்டுக்குப் பதிலளித்துள்ள, தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்,
“மகிந்த ராஜபக்ச அரசுடன் அனைத்துச் சுற்றுப் பேச்சுகளிலும் நாங்கள் உண்மையான முகத்துடன் பங்கு பற்றினோம்.
நாங்கள் முன்வைத்த தீர்வுத் திட்ட யோசனைகளுக்குப் பதிலளிக்கப் பயந்தே பேச்சுக்கு வராமல் மகிந்த தரப்பினர் பின்வாங்கினர்.
பேச்சுக்களை நாங்கள் குழப்பியடிக்கவில்லை.போலி முகத்தைக் காட்டி மகிந்த தரப்பினரே குழப்பியடித்தனர்.
உண்மையை அவர் பேச வேண்டும். தம் மீதான பிழைகளை அவர் மறைக்க முற்படக்கூடாது.
தற்போது எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் மகிந்த ராஜபக்ச எந்த வேளையிலும் எங்களுடன் பேச முடியும். தமிழ் மக்களின் எதிர்காலத் தீர்வுக்காக எத்தகைய தரப்பினருடனும் பேச நாம் தயாராக இருக்கின்றோம்.
அந்தப் பேச்சுகள் நேர்மையானதாக இருக்க வேண்டும். காலத்தை வீணடிக்கும் வகையில் இருக்கக் கூடாது,” என்றும் சம்பந்தன் தெரிவித்துள்ளார்.