தேசிய அரசாங்கத்தை அமைக்கும் பிரேரணை – பின்வாங்கியது ஆளும்கட்சி
parliaதேசிய அரசாங்கத்தை அமைக்கும் பிரேரணை மீதான விவாதத்தை ஆளும் ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்றத்தில் நேற்று முன்வைக்கவில்லை.
அமைச்சர்களின் எண்ணிக்கையை 45 ஆக அதிகரிக்கும் வகையிலும், பிரதி அமைச்சர்களின் எண்ணிக்கையை 48 ஆக அதிகரிக்கும் வகையிலும், தேசிய அரசாங்கத்தை அமைக்கும் பிரேரணை ஒன்றை ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்திருந்தது.
இதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, ஜேவிபி உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்திருந்தன.
ஆனாலும், நாடாளுமன்ற நிலையியல் கட்டளையை இடைநிறுத்தி விட்டு நேற்றைய அமர்வில் இந்தப் பிரேரணையைக் கொண்டு வந்து வாக்கெடுப்பை நடத்தப் போவதாக அரச தரப்பு அறிவித்திருந்தது.
ஆனால், நேற்றைய அமர்பில் இந்தப் பிரேரணை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை.
நாடாளுமன்றத்தில் போதிய ஆதரவு கிடைக்காது என்பதால் தான், அரசாங்கத் தரப்பு பிரேரணையைக் கைவிட்டுள்ளதாக, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர்.
எனினும், பிரதமர் ரணில் விக்ரமசிங்க அடுத்த அமர்வில் இந்தப் பிரேரணையை சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொண்டதால், தான் அதனைப் பிற்போட்டுள்ளதாக சபை முதல்வரான அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
முன்னதாக, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசுடன் இணைந்து தேசிய அரசாங்கத்தை அமைக்கும் முடிவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு தராது என்று நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்திருந்தார்.
அதேவேளை, தேசிய அரசாங்கத்தை அமைக்கும் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்கப் போவதாக சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினரான பியசேன கமகே தெரிவித்திருந்தார்.
தம் மீது கட்சி ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்தால், வேறு பலரும் சிக்கிக் கொள்வார்கள் என்றும் அதனால் தான் அத்தகைய மிரட்டல்களுக்கு அஞ்சப் போவதில்லை என்றும் அவர் கூறியிருந்தார்.