தமிழர் தாயகத்தில் கரிநாளாக கடைப்பிடிக்கப்பட்ட சிறிலங்காவின் சுதந்திர நாள்
சிறிலங்காவின் 71 ஆவது சுதந்திர நாளான இன்று, காலி முகத்திடலில் பிரமாண்டமான இராணுவ அணிவகுப்புடன் கொண்டாட்டங்கள் இடம்பெற்ற அதேவேளை, வடக்கு, கிழக்கில் வாழும் தமிழர்கள் கரிநாளாக, துக்கநாளாக கடைப்பிடித்ததுடன், எதிர்ப்புப் போராட்டங்களையும் நடத்தினர்.
யாழ்ப்பாண பல்கலைக்கழத்தில்
யாழ்.பல்கலைக்கழகத்தின் பிரதான கொடிக் கம்பத்தில் கருப்புக் கொடி பறக்கவிடப்பட்டிருந்ததுடன், நுழைவாயில் மற்றும் முன்பக்கங்களில் எமக்கு எப்போது சுதந்திரம் என்று கேள்வி எழுப்பும் வகையிலான கருப்புப் பதாகைகளும் தொங்கவிடப்பட்டிருந்தன.
யாழ்ப்பாண நகரில்
யாழ். மத்திய பேருந்து நிலையத்தின் முன்பாக, தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை அங்கீகரிக்கக் கோரியும், தமிழர்களின் நிலங்களை விடுவிக்கக் கோரியும், அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும், காணாமல் ஆக்கப்பட்டவர்கள் பற்றிய உண்மையை வெளிப்படுத்தக் கோரியும் இன்று காலை போராட்டம் நடத்தப்பட்டது.
கிளிநொச்சியில்
யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில், தமிழ் மக்கள் கூட்டணி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, ஈபிஆர்எல்வ் போன்ற கட்சிகளின் பங்களிப்புடன் பாரிய கரிநாள் போராட்டம் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக இடம்பெற்றது.
அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதி, காணிகள் விடுவிப்பு, உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
முல்லைத்தீவில்
முல்லைத்தீவு- கேப்பாப்புலவில் 700 நாட்களுக்கு மேலாக நில மீட்புக்கான போராட்டத்தை ஈடுபட்டு வரும் மக்கள், கேப்பாப்புலவு சிறிலங்கா இராணுவ முகாம் முன்பாக கருப்புக்கொடிகளை பறக்கவிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மட்டக்களப்பில்
மட்டக்களப்பில், கிழக்குப் பல்கலைக்கழகம் முன்பாக, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளும், மாணவர்களும் இணைந்து இன்று காலை போராட்டத்தில் ஈடுபட்டனர்.