மேலும்

சூடுபிடிக்கிறது சுங்கப் பணிப்பாளர் நீக்க விவகாரம் – அமெரிக்க தலையீடா?

சுங்களத் திணைக்களத்தின் பணிப்பாளராக இருந்த திருமதி பி.எம்.எஸ்.சார்ள்ஸ் நீக்கப்பட்ட விவகாரம் அரசியல் வட்டாரங்களிலும் தீவிரமான விவாதங்கள் தோற்றுவித்துள்ளது.

சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளராக இருந்த திருமதி பி.எம்.எஸ்.சார்ள்ஸ் நீக்கப்பட்டு, முன்னாள் கடற்படை அதிகாரியான, றியர் அட்மிரல் ஷேர்மல் பெர்னான்டோவை நியமிக்க அமைச்சரவை அனுமதி அளித்திருந்தது.

இந்த நியமனத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, சுங்கத் திணைக்கள அதிகாரிகள், பணி நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இதையடுத்து, முன்னாள் கடற்படை அதிகாரியான, றியர் அட்மிரல், ஷேர்மல் பெர்னான்டோ நியமனத்தை இடை நிறுத்தி விட்டு, நிதியமைச்சின் மேலதிக செயலர் சுமணசிங்கவை தற்காலிக பணிப்பாளராக நியமிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது.

எனினும், இவர்கள் இருவரது நியமனங்களையும் ஏற்றுக் கொள்ள மறுக்கும், சுங்கத் திணைக்கள அதிகாரிகள் தொடர்ந்தும் சட்டப்படி பணியாற்றும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில், வெளிநாட்டு ஆயுதங்களை சுங்கச் சோதனையின்றி எடுத்துச் செல்ல முற்பட்ட போது அதனை தடுக்க முயன்றதால் தான், சுங்கத் திணைக்களப் பணிப்பாளர் பதவியில் இருந்து பி.எம்.எஸ்.சார்ள்ஸ் நீக்கப்பட்டார் என சிறிலங்கா பொது்ஜன முன்னணி குற்றம்சாட்டியுள்ளது.

இந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கனக ஹேரத் கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் இந்த தகவலை வெளியிட்டார்.

“ சுங்கக் கட்டளைச் சட்டத்தைப் பின்பற்றாமல் தவிர்ப்பதற்காக, அரசாங்கம்  வெளி நபரை சுங்கத் திணைக்களப் பணிப்பாளராக நியமிக்க முற்படுகிறது.

அமெரிக்காவுடன் ஒரு புரிந்துணர்வு உடன்பாடு செய்து கொள்ளப்பட்டுள்ளதாக அறிக்கைகள் கூறுகின்றன.

வெளிநாட்டில் இருந்து ஆயுதங்களைக் கொண்டு வரும் போது, அவற்றை சுங்கத் திணைக்களத்தின் சோதனையில் இருந்து தவிர்க்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அண்மையில், ஆயுதங்களுடன் விமானம் ஒன்று கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வந்தது. அந்த ஆயுதங்கள் சுங்கத் திணைக்களத்தின் பார்வைக்கு வராமல், சிறிய விமானங்களில் ஏற்றப்பட்டு, நடுக்கடலில் இருந்த கப்பலுக்கு கொண்டு செல்லப்பட்டன. சுங்கத்தை தவிர்க்கும் பொறிமுறை ஒன்று செயற்பாட்டில் உள்ளது.

அனைத்துலக புரிந்துணர்வு உடன்பாடு பற்றிய இரகசியத் தன்மையைப் பாதுகாக்கும் விடயத்தில், நிதியமைச்சர் மங்கள சமரவீரவின் நம்பிக்கையைப் பாதுகாக்கத் தவறி விட்டதால் தான், சுங்கத் திணைக்களப் பணிப்பாளர் சார்ள்ஸ் அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.” என்றும் அவர் கூறினார்.

இதனிடையே, சுங்கப் பணிப்பாளராக மீண்டும் பி.எம்.எஸ். சார்ள்சை நியமிக்க சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மகிந்த தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச கோரியிருக்கிறார்.

“சுங்கத் திணைக்களத்தின் செயற்பாட்டில் அரசாங்கத் தலையீட்டை எதிர்த்ததால் தான், பி.எம்.எஸ். சார்ள்ஸ் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

பல்தேசிய இறக்குமதியாளர் ஒருவரால், தரம் குறைந்த 2800 மெட்றிக் தொன், மிளகு இறக்குமதி செய்யப்பட்ட போதும், தேங்காய் எண்ணெய் இறக்குமதியினால், நாட்டுக்கு 81 மில்லியன் ரூபா இழப்பு ஏற்படுத்தப்பட்டதற்கு எதிராக சுங்கத் திணைக்களப் பணிப்பாளர் நடவடிக்கை எடுத்த போது, பிரதமர் செயலகம் தலையீடு செய்தது.

இந்த அரசியல் தலையீட்டை அவர் வன்மையாக எதிர்த்தார்.இதனால் தான் அவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.” என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

அதேவேளை, நிதியமைச்சர் மங்கள சமரவீரவுடன், நேற்று சுங்க பணியாளர் தொழிற்சங்கம் நடத்திய பேச்சு தோல்வியில் முடிந்ததால்,  தாம் தொடர்ந்து சட்டப்படி பணியாற்றும் போராட்டத்தை தொடரவுள்ளதாக, அந்தச் சங்கத்தின் துணைச் செயலர் சுதத் டி சில்வா தெரிவித்துள்ளார்.

பணிப்பாளரின் நீக்கத்துக்கான காரணங்களை அமைச்சர் மங்கள சமரவீர கூறினார் என்றும் ஆனால் அவை ஏற்றுக் கொள்ளக் கூடியவையல்ல எனவும் அவர் குறிப்பிட்டார்.

சுங்க ஆய்வுகளின் மூலம், அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரிக்கத் தவறி விட்டார் என அமைச்சர் குற்றம்சாட்டியதாகவும் அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *