புதிய அமைச்சர்களின் பட்டியல் இன்று மைத்திரியிடம் கையளிப்பு
சிறிலங்காவின் புதிய பிரதமராக நாளை பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படும் ரணில் விக்கிரமசிங்க தமது அமைச்சரவையின் பட்டியலை இன்று சிறிலங்கா அதிபரிடம் கையளிப்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் நாளை காலை 10 மணிக்கு, ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவியேற்பார் என்று, ஐதேக வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
புதிய அமைச்சர்களின் பதவியேற்பு நாளை மறுநாள் திங்கட்கிழமை இடம்பெறலாம் என்றும் எதிர்பாார்க்கப்படுகிறது.
அதேவேளை, ரணில் விக்கிரமசிங்கவின் அமைச்சரவையில் இடம்பெறவுள்ள அமைச்சர்களின் பட்டியலைத் தயாரிக்கும் பணி நேற்றிரவு அலரி மாளிகையில் இடம்பெற்றது.
ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாச உள்ளிட்ட ஐதேக தலைவர்களும், ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்களும் இதுதொடர்பான ஆலோசனைகளில் ஈடுபட்டனர்.
இன்று அமைச்சர்களின் பட்டியலை சிறிலங்கா அதிபரிடம் ரணில் விக்கிரமசிங்க, கையளிப்பார் என்று அதிபர் செயலக வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
19 ஆவது திருத்தச்சட்டத்துக்கு அமைய, 30 அமைச்சர்கள் மற்றும், பிரதி அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் 45 பேரை மட்டுமே நியமிக்க முடியும்.
இந்த அமைச்சரவையில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த 6 பேரும் இடம்பெறும் வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.