மேலும்

மகிந்த தரப்புக்கு சுமந்திரன் எச்சரிக்கை

ஐதேகவுடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இரகசிய உடன்பாடு செய்திருப்பதாக தொடர்ந்தும்  குற்றச்சாட்டுகளை முன்வைத்தால், சிறிலங்கா பொதுஜன முன்னணி, தமக்கு வழங்க முன்வந்த வாக்குறுதிகளை வெளிப்படுத்த வேண்டிய நிலை ஏற்படும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எச்சரித்துள்ளது.

ஐதேகவுடன் கூட்டமைப்பு இரகசிய உடன்பாடு ஒன்றை செய்திருப்பதாக சிறிலங்கா பொதுஜன முன்னணி குற்றம்சாட்டி வருகிறது.

அத்துடன், ரணில் விக்கிரமசிங்கவும், இரா.சுமந்திரனும் கையெழுத்திட்டுள்ள ஆவணம் ஒன்றும், ஊடகங்களில் பரவி வருகிறது.

இந்த நிலையில், கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில்,

“ ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமிப்பதற்கு, எந்த உடன்பாடும் செய்து கொள்ளப்படாமலேயே கூட்டமைப்பு ஆதரவு வழங்கியது.

ஜனநாயகத்தைப் பாதுகாக்கவே கூட்டமைப்பு இந்த ஆதரவை வழங்கியிருந்தது.

இந்த நிலையில், ஐதேகவுக்கும், கூட்டமைப்புக்கும் இடையில் இரகசிய உடன்பாடு செய்து கொள்ளப்பட்டுள்ளதாக, பொதுஜன முன்னணி தொடர்ந்து குற்றம் சாட்டுகளை முன்வைத்தால், எமது ஆதரவை தமது தரப்புக்குப் பெறுவதற்காக, நாமல் ராஜபக்ச உள்ளிட்டவர்கள் நடத்திய பேச்சுக்களின் போது, சிறிலங்கா பொதுஜன முன்னணி வழங்க முன்வந்த வாக்குறுதிகளை நாங்கள அம்பலப்படுத்த நேரிடும்” என்று எச்சரித்துள்ளார்.

அதேவேளை, ரணில் விக்கிரமசிங்கவுடன், தாம் கையெழுத்திட்டுள்ளதாக வெளியாகியுள்ள ஆவணம் பொய்யானது என்றும் அத்தகைய எந்த உடன்பாட்டிலும் தாம் கையெழுத்திடவில்லை என்றும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதற்கிடையே, கூட்டமைப்புக்கு தாங்கள் இரகசியமாக எந்த வாக்குறுதிகளையும் வழங்க முன்வரவில்லை என்றும், அவர்களுடன் இணக்கப்பாடு ஏற்படுத்துவதாயின் அதனை வெளிப்படையாகவே மேற்கொள்வோம் என்றும் சிறிலங்கா பொதுஜன முன்னணி கூறியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *