வவுணதீவு கொலைகள் – முன்னேற்றமின்றித் தொடர்கிறது விசாரணை
வவுணதீவில் இரண்டு சிறிலங்கா காவல்துறையினர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக, விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த மாதம் 30ஆம் நாள் நடந்த இந்தக் கொலைகள் தொடர்பாக, சிறிலங்கா காவல்துறையினர், வட்டக்கச்சியைச் சேர்ந்த இராசநாயகம் சர்வானந்தன் மற்றும் கன்னக்குடாவைச் சேர்ந்த கதிரித்தம்பி இராஜகுமாரன் ஆகிய இரண்டு முன்னாள் போராளிகளை தடுத்து வைத்து விசாரித்து வருகின்றனர்.
மாவீரர் நாளை நடத்துவது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினைக்கு பழிவாங்கும் நோக்கில் இந்தக் கொலைகள் இடம்பெற்றிருக்கலாம் என்று சிறிலங்கா காவல்துறையினர் முன்னர் கூறியிருந்தனர்.
எனினும், இந்தக் கொலைகள் தொடர்பான விசாரணைகளில் எந்த முன்னேற்றங்களும் இதுவரை ஏற்படவில்லை என்றும், கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள், காவல்துறையினரிடம் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட கைத்துப்பாக்கிகள் இன்னமும் மீட்கப்படவில்லை என்றும், கூறப்படுகிறது.
இந்த நிலையில், விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளுக்கும் இந்தக் கொலையுடன் தொடர்பு இருப்பதற்கான சாத்தியங்களை நிராகரிக்க முடியாது என்று குற்றப்புலனாய்வுப் பிரிவு கூறியுள்ளது.