மேலும்

போர்க்களமாகிய நாடாளுமன்றம் – இன்று நடந்தது என்ன?

இன்று முற்பகல் நடந்த குழப்பங்கள், மோதல்களை அடுத்து, முடிவுக்கு வந்த நாடாளுமன்ற அமர்வு நாளை பிற்பகல் 1.30 மணிக்கு மீண்டும் ஆரம்பமாகும் என்று சபாநாயகரின் செயலகம் அறிவித்துள்ளது.

சிறிலங்கா நாடாளுமன்றம் இன்று காலை 10 மணிக்கு கூடிய போது, ஆளும்கட்சி வரிசையில் மகிந்த ராஜபக்ச தரப்பினர் அமர்ந்திருந்தனர்.

முன்னதாக, தாமே ஆளும்கட்சி வரிசையில் அமருவோம் என்று ஐதேகவினர் கூறியிருந்த போதும், மகிந்த தரப்பினர் அமர்ந்த போது, அதனை எதிர்க்காமல், ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட ஐதேகவினர் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்தனர்.

பிரதமருக்காக ஒதுக்கப்பட்டிருந்த ஆசனத்தில் மகிந்த ராஜபக்ச அமர்ந்திருந்தார்.  எனினும், நேற்றைய நம்பிக்கையில்லா பிரேரணையை அடுத்த அமைச்சரவை கலைந்துள்ளதாகவும், அடுத்த பிரதமர் நியமிக்கப்படும் வரை யாரையும் பிரதமராகவோ அமைச்சர்களாகவோ ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் சபாநாயகர் அறிவித்தார்.

இதையடுத்து,  தினேஸ் குணவர்தன  எதிர்ப்புத் தெரிவித்து உரையாற்ற முற்பட்டார். அதற்கு கடுமையான எதிர்ப்பு எழுந்தது. அப்போது, தினேஸ் குணவர்தனவை சபாநாயகர்  கடுமையாக  எச்சரித்து விட்டு, மகிந்த ராஜபக்சவை உரையாற்ற அனுமதித்தார்.

நேற்றைய சபை அமர்வுகளை கடுமையாக விமர்சித்த மகிந்த ராஜபக்ச, சபையில் நேற்று நடத்தப்பட்ட வாக்கெடுப்பு நாடாளுமன்ற பாரம்பரியங்களை மீறும் வகையில் இருந்தாக குற்றம்சாட்டினார்.

மகிந்த ராஜபக்ச உரையாற்ற ஆரம்பித்தும், ஐதேகவினர் அவரது உரைக்கு இடையூறு ஏற்படுத்திக் கொண்டிருந்தனர். கூச்சலுக்கு மத்தியில் மகிந்த ராஜபக்ச உரையாற்றி முடித்தார்.

இதையடுத்து, ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல உரையாற்ற சபாநாயகர் அனுமதி அளித்தார்.

அவர், எழுந்து, மகிந்த ராஜபக்சவின் உரையின் மீது நம்பிக்கையில்லை. அதனால், அவரது உரையின் மீது வாக்கெடுப்பு ஒன்றை நடத்த வேண்டும் என்று கோரினார்.

அதற்கு சபாநாயகர்,தான் அதனைத்  தீர்மானிக்க முடியாது என்றும்,  சபையில் பெரும்பான்மையினர் தீர்மானித்தால் வாக்கெடுப்பை நடத்த முடியும் என்றும் கூறினார்.

இதையடுத்து, நாடாளுமன்றத்தில் பெரும் கூச்சலிட்டவாறு, மகிந்த அணியினர், சபாநாயகரின் ஆசனத்தை நோக்கி பாய்ந்து சென்றனர். சபாநாயகரையும், நாடாளுமன்றச் செயலர் உள்ளிட்ட அதிகாரிகளையும் சுற்றிவளைத்துக் கொண்டு கெட்டவார்த்தைகளால் திட்டி கூச்சலிட்டனர்.

செங்கோலை நோக்கி அவர்கள் ஓடிய போது, படைக்கல சேவிதர் அதனைக் கையில் எடுத்துக் கொண்டு பாதுகாத்தார்.

சபாநாயகரை மகிந்த அணியினர் சுற்றி வளைத்து, குழப்பம் விளைவித்த போது அவர் அமைதியாக தனது ஆசனத்தில் இருந்தார். அவரால் சபை அமர்வுகளை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது,

உடனடியாக, ஐதேக உறுப்பினர்களும், நாடாளுமன்ற காவலர்களும் சபாநாயகரைச் சுற்றி அரண் அமைத்து அவரைப் பாதுகாக்க முற்பட்டனர்.

அப்போது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினர் திலும் அமுனுகம, சபாநாயகரின் ஒலிவாங்கியை முறிக்க முயன்ற போது, அவரது கையில் காயம் ஏற்பட்டு இரத்தம் கொட்டியது.

அதேவேளை இரண்டு பக்க உறுப்பினர்களுக்கும் மத்தியில், கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்தக் கட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபாநாயகரை நோக்கி தண்ணீர் போத்தல்களையும், அரசியலமைப்பு ஆவணத்தையும், கடதாசிக் கட்டுகளையும் வீசினர். நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கழிவு கடதாசிகள் போடும் குப்பைக் கூடையை தூக்கி சபாநாயகர் மீது வீசி எறிந்தார்.

சபாநாயகரை நோக்கிச் சென்ற குப்பைக் கூடை நாடாளுமன்ற அதிகாரி ஒருவரை கையில் பிடித்துக் கொண்டார்.

அப்போது சபாநாயகரின் ஆசனத்தை பாதுகாக்க முற்பட்ட ஐதேக உறுப்பினர்கள், மேலிருந்து தள்ளி விட்டதில், படிக்கட்டுகளில் சூழ்ந்து நின்ற மகிந்த ஆதரவு உறுப்பினர்கள் கூட்டமாக சரிந்து வீழ்ந்தனர். இதையடுத்து ஒருவரை ஒருவர் கைகளால் தாக்கிக் கொண்டனர்.

தொடர்ந்து சபையை அமைதிப்படுத்த சபாநாயகர் கடுமையாக முயற்சித்தார். சுமார் 15 நிமிடங்கள் வரை நீடித்த இந்த குழப்பத்தை அடுத்து, நாடாளுமன்றத்தை ஒததிவைக்காமலேயே சபாநாயகர் எழுந்து சென்றார்.

இதன்பின்னர் மகிந்த ராஜபக்சவும், அதனைத் தொடர்ந்து ரணில் விக்ரமசிங்கவும் சபையை விட்டு வெளியேறிச் சென்றனர்.

மீண்டும் சபை எப்போது கூட்டப்படும் என்ற அறிவிப்பு வெளியாகாத  நிலையில், உறுப்பினர்கள் பலரும், சபையிலேயே இருந்தனர்.

இதன் பின்னர், சபாநாயகர் கட்சித் தலைவர்களின் கூட்டத்தைக் கூட்டினார். இதன் பின்னர், வரும் 21ஆம்  நாள் நாடாளுமன்றத்தைக் கூட்டுவதாக சபாநாயகர் அறிவித்திருந்தார்.

எனினும், கட்சித் தலைவர்கள் மீண்டும் கூடிய போது நாடாளுமன்றத்தை நாளை பிற்பகல் 1.30 இற்கு கூட்டுவதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று சபாநாயகரின் செயலகம் அறிவித்துள்ளது.

அதேவேளை சபாநாயகர் கோரியதை அடுத்து நாடாளுமன்றத்துக்கு சிறப்பு அதிரடிப்படையினர் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

இதற்கிடையே இன்று நாடாளுமன்றத்தில் நடந்த குழப்பங்களுக்கு சபாநாயகரே காரணம் என்றும், நிலையியல் கட்டளைகளுக்கு மாறாக அவர் நடக்க முயன்றதால் தான், இந்த நிலை ஏற்பட்டதாகவும் மகிந்த அணியைச் சேர்ந்த எஸ்.பி.திசநாயக்க உள்ளிட்டவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

அத்துடன், ஐதேக உறுப்பினர்களான ரஞ்சன் ராமநாயக்கவும், பாலிய தெவரப்பெருமவும் கத்தியுடன் நாடாளுமன்றம் வந்தனர் என்று தயாசிறி ஜெயசேகர குற்றம்சாட்டினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *