மேலும்

நாடாளுமன்றம் நாளை கூடும் – சபாநாயகர் அறிவிப்பு

பெரும் பரபரப்புக்கு மத்தியில் சிறிலங்கா நாடாளுமன்றம் நாளை காலை 10 மணிக்கு கூடும் என்று சபாநாயகர் செயலகம் சற்று முன்னர் அறிவித்துள்ளது.

அதற்கு முன்னதாக, நாளை காலை 8.30 மணிக்கு கட்சித் தலைவர்களின் கூட்டம் இடம்பெறும் என்று சபாநாயகர் கரு ஜெயசூரிய அறிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தைக் கலைக்கும் சிறிலங்கா அதிபரின் உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்துள்ள நிலையிலேயே நாளை காலை நாடாளுமன்றம் கூடவுள்ளது.

சிறிலங்கா நாடாளுமன்றம் நாளை கூடும்?

நாடாளுமன்றத்தைக் கலைக்கும் சிறிலங்கா அதிபரின் உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், நாடாளுமன்றம் நாளை கூட்டப்படும் என்று ஐதேக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

முன்னதாக, நாளை 14ஆம் நாள்,  நாடாளுமன்றத்தைக் கூட்டும் அரசிதழ் அறிவிப்பை சிறிலங்கா அதிபர் வெளியிட்டிருந்தார்.

அதற்குப் பின்னரே, நாடாளுமன்றக் கலைப்பு அரசிதழ் அறிவிப்பு அவரால் வெளியிடப்பட்டது. இந்த அரசிதழ் அறிவிப்புக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்திருப்பதால், முன்னைய அரசிதழ் அறிவிப்புக்கு அமைய நாடாளுமன்றம் நாளை கூட்டப்பட வேண்டும்.

நாளை திட்டமிட்டபடி நாடாளுமன்றம் கூடும் என்று ஐதேக வட்டாரங்கள் தெரிவித்துள்ள போதும் அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னமும் வெளியாகவில்லை.

சபாநாயகர் விரைவில் நாடாளுமன்றத்தைக் கூட்டும் அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஐதேக  தலைவர்கள் வரவேற்பு

உச்சநீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவுக்கு ஐதேக தலைவர்கள் ரணில் விக்கிரமசிங்க, மங்கள சமரவீர, ஹர்ஷ டி சில்வா, எரான் விக்கிரமரத்ன உள்ளிட்ட பலரும்  வரவேற்றுள்ளனர்.

இது ஜனநாயகத்துக்குக் கிடைத்த வரலாற்று வெற்றி என்று ஐதேக தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

சர்வாதிகாரத்தின் பிடியில் இருந்து ஜனநாயகம் காப்பாற்றப்பட்டிருப்பதாகவும், நீதித்துறை சுதந்திரத்தை நிலைநாட்டிய நீதிபதிகளுக்கு நன்றி தெரிவிப்பதாகவும், மங்கள சமரவீர கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *