மேலும்

சபாநாயகரின் அறிவிப்பால் மகிந்த தரப்பு கடும் அதிர்ச்சி – அச்சுறுத்தலில் இறங்கியது

பெரும்பான்மையை நிரூபிக்காத வரை- மகிந்த ராஜபக்சவை பிரதமராக ஏற்க முடியாது என்று சபாநாயகர் கரு ஜெயசூரிய வெளியிட்ட அறிக்கை, மைத்திரி- மகிந்த அரசாங்கத்துக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், சபாநாயகருக்கு அரசாங்கத்தின் பங்காளிகள், பகிரங்க எச்சரிக்கைகளை விடுத்துள்ளனர்.

மகிந்த ராஜபக்சவுக்கு நாடாளுமன்றத்தில் பிரதமர் ஆசனத்தை வழங்க முடியாது என்றும், தற்போதைய ஆளும் கட்சி உறுப்பினர்கள் எதிர்க்கட்சி வரிசையிலேயே அமர வேண்டும் என்றும் சபாநாயகர் இன்று அறிவித்திருந்தார்.

இதனால் ஆத்திரமடைந்துள்ள மைத்திரி- மகிந்த அரசாங்கத்தின் அமைச்சர்கள், மற்றும் முக்கிய தலைவர்கள், சபாநாயகரை கடுமையாக எச்சரிக்கும் வகையில் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.

சபாநாயகர் பாரதூரமான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும்

மகிந்த ராஜபக்சவை பிரதமராக அங்கீகரிக்கா விட்டால், சபாநாயகர் கரு ஜெயசூரிய பாரதூரமான விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த எச்சரித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் இதுகுறித்து கருத்து வெளியிட்ட அவர்,

”சபாநாயகர் ஜனநாயகத்திற்கு விரோதமான முறையில் செயற்பட்டால் அவரை மாற்ற முயல்வோம்.

நவம்பர் 14 ம் நாளுக்குள் புதிய அரசாங்கத்தினால் 120 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை பெறமுடியும்.

ஐக்கிய தேசிய கட்சி 116 உறுப்பினர்களின் கையெழுத்துடன் சமர்ப்பித்த தீர்மானம் தற்போது மாறிவிட்டது. இதில் கையெழுத்திட்ட சிலர் தற்போது புதிய அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கின்றனர். 14 ம் நாள் இது தெரியவரும் .

ரணில் விக்கிரமசிங்க அலரி மாளிகையிலிருந்து வெளியேற மறுத்தால் மக்கள் வெளியேற்றுவார்கள்.” என்றார்.

அரசியலமைப்புக்கு முரணாக செயற்படுகிறார் சபாநாயகர்

எதிர்வரும் 14 ம் நாள் நாடாளுமன்றம் கூட்டப்படும்  என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால் வெளியிடப்பட்ட அரசிதழுக்கு எதிராக சபாநாயகர் செயற்படுவாராயின், அவருக்கு எதிராக அரசாங்கம் அரசியலமைப்பு ரீதியில் நடவடிக்கைகளை எடுக்கும் என்று, அமைச்சர்கள் சரத் அமுனுகம, விஜயதாச ராஜபக்ச,  மகிந்த சமரசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர்  திலங்க சுமதிபால  ஆகியோர் தெரிவித்தனர்.

கொழும்பில் இன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் கருத்து வெளியிட்ட இவர்கள்,

“ஐக்கிய தேசிய கட்சியின் பங்காளியாக சபாநாயகர்  கரு ஜெயசூரிய  செயற்படுவதை விடுத்து  பதவிக்கு பொருந்தும் வகையில் செயற்பட வேண்டும்.  14 ஆம் நாள் நாடாளுமன்றம் முறைப்படி கூட  ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

நாடாளுமன்றம்   கூடும் நாள்  நிச்சயிக்கப்பட்டிருக்கும்  நிலையில்,  சபாநாயகர் அரசியலமைப்பிற்கு முரணாகவும், ஐக்கிய தேசிய கட்சிக்கு  மாத்திரம் ஆதரவாகவும் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையினை நிரூபிக்கும் வரையில் கடந்த மாதம் 26 ஆம் நாளுக்கு முன்னர், நாடாளுமன்றத்தில்  காணப்பட்ட நிலைப்பாடுகள் மற்றும் பதவி நிலைகள் அவ்வாறே தொடரும்,  எத்தரப்பினர் பெரும்பான்மையினை நிரூபிக்கின்றனரோ, அவர்கள்  பாரம்பரிய கோட்பாடுகளுக்குட்பட்டு செயற்படலாம் என்று குறிப்பிட்டுள்ளமையானது முற்றுமுழுதும்  அரசியலமைப்பிற்கு முரணாகும்”  எனவும் தெரிவித்தனர்.

சபாநாயகர் சிறைக்குச் செல்ல நேரிடும்

சிறிலங்கா அதிபரின் உத்தரவை மீறி நாடாளுமன்றதைக் கூட்டினால், சபாநாயகர் சிறைக்குச் செல்ல நேரிடும் என்று முன்னாள் சபாநாயகர் டபிள்யூ. ஜே.எம்.லொக்கு பண்டார  எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கொழும்பில் இன்று நடந்த ஜன மகிமய பேரணியில் உரையாற்றிய அவர்,

“அரசியலமைப்புக்கு உட்பட்டே  புதிய பிரதமரை, சிறிலங்கா அதிபர் நியமித்தார்.  சிறிலங்கா அதிபர் அரசியலமைப்பினை மீறிவிட்டார் என்று கூறும் குற்றச்சாட்டுக்களை ஏற்றுக் கொள்ள முடியாது.

அரசிதழ் அறிவித்தலை மீறி நாடாளுமன்றத்தைத் சபாநாயகர் திறந்தால், சிறப்புரிமைச் சட்டத்திற்கு அமைய அவர் சிறைக்குச் செல்ல நேரிடும்.

பொய்யான ஒரு சாவியினைக் கொண்டு நாடாளுமன்றத்தைத் திறக்க முடியாது’ என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *