மேலும்

மகிந்தவுக்கு ‘அரியாசனம்’ கிடையாது – ஆப்பு வைத்தார் சபாநாயகர்

மகிந்த ராஜபக்ச தனது பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை அவருக்கு, நாடாளுமன்றத்தில் பிரதமர் ஆசனத்தை வழங்க முடியாது என்றும்,  தற்போதைய ஆளும்கட்சி உறுப்பினர்கள் எதிர்க்கட்சி வரிசையிலேயே அமர முடியும் என்றும் சபாநாயகர் கரு ஜெயசூரிய அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, சபாநாயகர் இன்று  வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“நாடு என்றும் இல்லாத ஒரு நெருக்கடியான சூழலை சந்தித்துள்ளது. நாடு எதிர்கொண்டுள்ள இந்த நெருக்கடி நிலைமையில் சபாநாயகர் என்ற வகையில்,  நான்  மௌளனித்து இருக்க முடியாது.

எதிர்க்கட்சித் தலைவர் உட்பட அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் உரிமைகளை பாதுகாத்தல் மற்றும் இதுவரை காலமும் பாதுகாத்து வந்த நாட்டின் ஜனாநாயகத்திற்கு எதிரான செயற்பாடுகளை கண்டித்து அதற் கு எதிராக செயற்பட வேண்டியது என்னு டைய தேசிய கடமையாக கருதுகின்றேன்.

ஐக்கிய தேசியக் கட்சி , தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ஜேவிபி மற்றும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 116 பேர் கையொப்பமிட்டு ஜனாதிபதியின் தீர்மானம் அரசியலமைப்புக்கு முரணானது என குறிப்பிட்டு, நாடாளுமன்றத்தை அவசரமாக கூட்டி நடவடிக்கை எடுக்குமாறு-  நியாயமான கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

நொவம்பர் மாதம் முதலாம் நாள் சிறிலங்கா அதிபரைச் சந்தித்த போது, நாடாளுமன்றத்தை அவசரமாக கூட்டி தீர்வு காண்பதாக கூறியிருந்தார். ஆனால் அவ்வாறு இடம்பெறவில்லை.

மாறாக மறுநாள் முற்பகல் 10.30 மணியளவில் தொலைபேசி ஊடாக அழைத்து, 7ஆம் நாள் நாடாளுமன்றத்தை கூட்டுவதற்கான அரசிதழ் அறிவிப்பை வெளியிடுவதாக உறுதியளித்திருந்தார்.

அன்றைய நாள், சிறிலங்கா அதிபரைச் சந்தித்த ஜப்பான், பிரான்ஸ், அமெரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளை சேர்ந்த தூதுவர்களிடம் நொவம்பர் மாதம் 5ஆம் நாள் நாடாளுமன்றம் கூட்டப்படும் என்று உறுதியளித்திருந்தார்.

அதேபோன்று மகிந்த ராஜபக்சவும் 5ஆம் நாள் நாடாளுமன்றத்தை கூட்டி பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதாக பல்கலைக்கழக விரிவுரையாளர்களுடனான சந்திப்பின் போது தெரிவித்திருந்தார்.

இவ்வாறான நெருக்கடியான நிலைமையில், சிறிலங்கா அதிபர், தமது வாய்மூலமான உறுதி மொழிக்கு அமைவாக, 7ஆம் நாள் நாடாளுமன்றத்தை கூட்டி, அரசியல் நெருக்கடிக்குத் தீர்வு காண்பதே சபாநாயகர் என்ற வகையில் எனது கடமையாகும்.

சிறிலங்கா அதிபர் இதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். நாட்டில் ஜனநாயக மிகவும் மோசமான முறையில் பாதிக்கப்பட்டுள்ளது. அரச ஊடகங்கள் மற்றும் அரச நிறுவனங்களின் நிர்வாக கட்டமைப்பு பலவந்தமாக கைப்பற்றப்பட்டுள்ளது.

மறுபுறம் மக்கள் பிரதிநிதிகளுக்கு சிறப்புச் சலுகைகளை வழங்கி தன் பக்க ஆதரவை பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கை குறித்த வெளியான தகவல்கள் தொடர்பில் கருத்தில் கொள்ளாது வேடிக்கை பார்ப்பது சபாநாயகர் என்ற வகையில் முறையானது அல்ல.

நாடாளுமன்ற அமர்வை சட்ட ரீதியாக நடத்துவதற்கான சந்தர்ப்பத்தை தடுத்து, நாடாளுமன்ற உறுப்பினர்களின் உரிமைகளை இல்லாதொழிக்கப்பட்டுள்ளதாக பெரும்பான்மை உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ள இந்த தருணத்தில் நீதியையும் நியாயத்தையும் உலகுக்கு வெளிப்படுத்துவது எனது கடப்பாடாகும்.

இதனடிப்படையில் நாடாளுமன்றத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றங்கள் அனைத்தும் அரசியலமைப்புக்கு முரணானது என்பதோடு-  நாடாளுமன்ற சம்பிரதாயங்களுக்கும் எதிரானது என்பதை பெரும்பான்மை உறுப்பினர்களின் நிலைப்பாடாகும்.

எனவே மாற்றங்கள் ஏற்படுவதற்கு முன்னரான நிலைமையே உறுதியானது என பெரும்பான்மையான உறுப்பினர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில் புதிய தரப்பினர் பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை முன்னதான நிலைமையே கருத்தில் கொள்ளப்படும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *