மேலும்

வியாழேந்திரனை மகிந்த அணிக்கு கொண்டு செல்ல கனடாவில் நடந்த பேரம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்  எஸ்.வியாழேந்திரன், திடீரென மகிந்த ராஜபக்சவின் அரசாங்கத்துடன் இணைந்து கொண்டதன் பின்னணியில் நடந்த நாடகம் குறித்த சில தகவல்கள் ஆங்கில இதழ் வாரஇதழ் ஒன்றில் வெளியாகியுள்ளன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் கடந்த வெள்ளிக்கிழமை, பிராந்திய அபிவிருத்தி ( கிழக்கு மாகாண) பிரதி அமைச்சராக பதவியேற்றிருந்தார்.

கனடாவில் இருந்து கொழும்புக்கு 24 மணித்தியாலம், விமானத்தில் ஒன்றாகப் பயணித்த தனது சகாவிடம் அந்த திட்டத்தை வெளிப்படுத்தாமல் இரகசியமாக வைத்திருந்தார்.

கனடாவில் உள்ள தமிழ்ச் சமூகத்தினால் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கே.துரைரட்ணசிங்கமும் எஸ்.வியாழேந்திரனும் அழைக்கப்பட்டிருந்தனர்.

நிகழ்வு முடிந்த பின்னர், இருவரும் ஒன்றாக விமானம் ஏறினர். பயணத்தில் அவர்களின் ஆசனங்களும் அருகருகே தான் இருந்தன.

அவர்கள் தரையிறங்கியதும், நாடாளுமன்றத்தில் சபாநாயகர் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் பங்கேற்குமாறு துரைரட்ணசிங்கத்துக்கு அறிவிக்கப்பட்டது. அவரது பங்கேற்பு முக்கியமானதாக இருந்தது.

வியாழேந்திரனுக்கு அந்த தகவலை வழங்குவதற்கு கூட்டமைப்பு எடுத்த முயற்சி தோல்வியில் முடிந்தது.

ஏனென்றால், அவர் விமான நிலையத்தில் இருந்து, கட்டுநாயக்கவுக்கு அருகே உள்ள விடுதி ஒன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு சிறிது ஓய்வெடுத்த பின்னர், புதிதாக நியமிக்கப்பட்ட மகிந்த ராஜபக்சவின் இல்லத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

வியாழேந்திரன் கனடாவில் இருந்த போதே, இந்த பேரத்தை ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் நடத்தி வைத்திருந்தார் என்று தெரிவிக்கப்படுகிறது, என்று அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *