மேலும்

சிறிலங்கா விவகாரத்தில் இந்தியா எதிர்கொள்ளும் சவால்கள்

சிறிலங்காவில் தற்போது நிலவும் அரசியல் நெருக்கடி தொடர்பில் மாற்றத்தைக் கொண்டு வருவதற்கு வழங்கப்பட்டுள்ள இரண்டு வாரங்கள் என்பது நீளமானது, நவம்பர் 16 இல்  நாடாளுமன்றத்தை மீளக்கூட்டும் போது நிறைய மாற்றங்கள் இடம்பெற்றுவிடும்.  அது இரத்தக்களரியை ஏற்படுத்தி விடும் என்று சபாநாயகர் கரு ஜெயசூரிய எச்சரித்திருந்தார்.

மகிந்த ராஜபக்ச தனது அதிபர் பதவியை இழந்து மூன்று ஆண்டுகளின் பின்னர் தற்போது கிடைத்துள்ள பிரதமர் பதவியைத் தக்கவைத்திருக்க வேண்டும் என்பதற்காகவே நாடாளுமன்றத்தைக் கூட்டுவது இரண்டு வாரங்கள் வரை தள்ளிப்போடப்பட்டுள்ளது.

சிறிலங்காவின் இந்த கணிப்பீட்டை இந்தியா நன்கு அறிந்துள்ளது. இதன்காரணமாக ராஜபக்சவுடன் இந்தியா தனது இராஜதந்திர மற்றும் அரசியல் தொடர்பை ஆரம்பித்துள்ளது.

ஆனால் சீனாவின் செல்வாக்கு அதிகரிக்கும் விடயம் இந்தியாவின் முக்கிய கவலையாக உள்ள அதேவேளையில் இந்தியா சில நல்ல தெரிவுகளையும் கொண்டுள்ளது.

கடந்த வாரம் சிறிலங்காவின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதவியில் இருந்து  வெளியேற்றப்பட்ட பின்னர், ‘ஜனநாயக விழுமியங்கள் மற்றும் அரசியல் சாசனம் போன்றன மதிக்கப்பட வேண்டும்’ என இந்தியா ஒரு எச்சரிக்கை அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது.

அரசியல் சாசனத்திற்கு ஏற்ப நியமிக்கப்படும் எந்தவொரு அரசியல் தலைவருடனும் தொடர்புகளைப் பேணுவதற்கு இந்தியா தயாராக உள்ளதாக இந்திய அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட உத்தியோகபூர்வ அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஜனநாயக அரசியல் கட்டமைப்பை பேணுவது தொடர்பான இந்தியாவின் ஆர்வமானது தென்னாசியாவில் சீனா தனது செல்வாக்கை  விரிவுபடுத்துவதை தடுப்பதற்கான இந்தியாவின் பிராந்திய பாதுகாப்பு மூலோபாயத்திற்கு மேலும் வலுச்சேர்ப்பதாக ஆய்வாளர் கொன்ஸ்ரான்ரினோ சேவியர் ‘இந்துஸ்தான் ரைம்ஸ்’ ஊடகத்தில் வாதிட்டிருந்தார். பலமான ஜனநாயக நிறுவகங்கள் சீனாவின் செல்வாக்கைத் தடுப்பதற்கு துணைபுரிவதாகவும் இந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எதுஎவ்வாறிருப்பினும், தென்னாசியாவில் இந்தியாவால் உருவாக்கப்பட்ட மூலோபாய இடைவெளியானது அதிகமாகக் காணப்படுகிறது. இந்தியா தற்போது இக்கட்டான நிலையில் காணப்படுகிறது.

இந்தியா பிராந்திய அதிகாரம் மிக்க நாடாக உள்ள போதிலும் தனது அயல்நாடுகளுடன் ஆரோக்கியமான உறவைக் கொண்டிருக்கவில்லை. அயல்நாடுகளின் பொருளாதார இராணுவப் பிரச்சினைகளுக்கு உதவக்கூடிய மேலதிக வளங்களை இந்தியா கொண்டிருக்கவில்லை என்பதும் இதற்கான காரணமாக கூறப்படுகிறது.

இதன் காரணமாகவே இந்தியாவானது தனது அயல்நாடுகளில் யார் ஆட்சிக்கு வந்தாலும் அல்லது எத்தகைய அரசியல் கட்டமைப்புக்கள் செயற்படுத்தப்பட்டாலும் அவற்றுக்கு கீழ்ப்படிகின்றதா என்கின்ற கேள்வி எழுகின்றது.

சிறிலங்கா விடயத்தில் இந்தியா உறுதியான நிலைப்பாட்டைப் பின்பற்றாதமையே இங்கு வேறு நாடுகள் ஆதிக்கம் செலுத்துவதற்கும் சீனாவின் செல்வாக்கு அதிகரிப்பதற்கும் காரணமாக உள்ளதை வரலாற்றுச் சம்பவங்கள் நிரூபிக்கின்றன.

 எடுத்துக்காட்டாக, 1971ல் சிறிலங்காவில் ஜே.வி.பி கிளர்ச்சி இடம்பெற்ற போது இதனைத் தடுப்பதற்கு உதவுமாறு  இந்தியாவிடம் சிறிலங்காவினால், உதவி கோரப்பட்டு சில மாதங்களின் பின்னர், கிழக்கு பாகிஸ்தான் யுத்தம் இடம்பெற்ற போது பாகிஸ்தானிய போர் விமானங்கள் சிறிலங்காவில் எரிபொருளை நிரப்புவதற்கு சிறிலங்கா அனுமதித்தது.

இதேபோன்று  இந்திய அமைதி காக்கும் படையினர் சிறிலங்காவிற்கு அனுப்பப்பட்ட போது அதை அங்கிருந்து வெளியேற்றுவதற்காக சிறிலங்காவின் அப்போதைய அதிபர் ரணசிங்க பிறேமதாசா, தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடன் தற்காலிகமாக நட்புறவைப் பேணியிருந்தார்.

மகிந்த ராஜபக்ச தனது ஆட்சிக்காலத்தில் சீனாவுடன் மிகவும் நெருக்கமான உறவைப் பேணியிருந்தார். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தை மகிந்த ராஜபக்ச முன்னெடுத்த போது அதற்குத் தேவையான போர்த் தளபாடங்கள் சீனாவிடமிருந்தே கொள்வனவு செய்யப்பட்டன.

அம்பாந்தோட்டை துறைமுகத் திட்டம் மற்றும் ஏனைய பல கட்டுமாணத் திட்டங்கள் சீனாவால் மேற்கொள்ளப்படுவதற்கு சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச அனுமதித்திருந்தார்.

இதற்காக சீன வங்கிகளிடமிருந்து கடன்கள் பெறப்பட்டன. இதேவேளையில் இந்தியாவுடன் மகிந்த ராஜபக்ச கொண்டிருந்த உறவானது குழப்பங்கள் மற்றும் அமைதி போன்றவற்றைக் கொண்டிருந்தன.

சீன எதிர்ப்பு பிரச்சாரத்தின் மூலமும் இந்தியாவின் ஆதரவுடனும் சிறிசேன 2015ல் அதிபராகப் பதவியேற்றிருந்தார். இவர் ஆட்சிக்கு வந்த கையோடு சீனாவால் மேற்கொள்ளப்பட்ட சில திட்டங்கள் இரத்துச் செய்யப்பட்டன.

குறிப்பாக சீன நிறுவனத்துடன் உடன்பாடு செய்யப்பட்ட 40,000 வீடுகளைக் கட்டுவதற்கான 300 மில்லியன் டொலர் திட்டத்தை சிறிசேன இந்தியாவிடம் கையளித்திருந்தார்.

சிறிலங்காவின் உள்கட்டமைப்புத் திட்டங்கள் சீனாவிடமிருந்து பெறப்பட்ட கடன் நிதியில் மேற்கொள்ளப்பட்டதால் சீனாவுடன் சுமூகமான உறவைப் பேண வேண்டிய நிர்ப்பந்தத்தை சிறிசேன-விக்கிரமசிங்க அரசாங்கம் கொண்டிருந்தது. அதேவேளையில் உள்நாட்டு அரசியலில் ஏற்படும் முரண்பாடுகளைத் தடுப்பதற்காக இந்தியாவுடனும் நட்புறவைப் பேணவேண்டிய நிலை சிறிசேன-விக்கிரமசிங்க அரசாங்கத்திற்கு ஏற்பட்டது. 

சீனாவிடமிருந்து பெறப்பட்ட கடனை அடைப்பதற்காக 99 ஆண்டுகாலக் குத்தகைக்கு அம்பாந்தோட்டை துறைமுகத்தின் ஒரு பகுதி ரணில் விக்கிரமசிங்கவின் அமைச்சரவையால் சீனாவிடம் கையளிக்கப்பட்டது.

சிறிலங்காவில் சீனா தனது செல்வாக்கை நிலைப்படுத்துவதைத் தடுப்பதற்காக இந்தியாவால், திருகோணமலை எண்ணெய் கிணறுகள் மத்தல மற்றும் பலாலி விமானநிலையங்கள், கரவலப்பிட்டியவில் திரவ எரிவாயு நிலையம் ஆகியவற்றை புனரமைப்பதற்கான திட்டங்களை முன்னெடுப்பதாக உறுதியளிக்கப்பட்டது.

2015ல், மகிந்த ராஜபக்ச தேர்தல் மூலம் தோற்கடிக்கப்பட்ட பின்னர், இவர் இந்தியாவுடன் நட்புறவைப் பேணுவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டார். குறிப்பாக இவர் கடந்த மாதம் இந்தியாவிற்கு பயணம் செய்திருந்தார். தனக்கு விரோதம் இழைக்கப்படக் கூடாது என்பதில் இந்தியா மிகவும் கவனமாக இருக்கின்றது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

ராஜபக்ச மற்றும் அவருக்கு பின்னர் ஆட்சிக்கு வந்தவர்கள் மூலம் சீனாவை சிறிலங்காவிலிருந்து வெளியேற்ற முடியும் என்பது அவ்வளவு இலகுவான காரியமல்ல என்பதே உண்மையாகும்.

சீனாவிடமிருந்து பெறப்பட்ட கடன் காரணமாக கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சிறிலங்காவின் மொத்த தேசிய உற்பத்தி வளர்ச்சியானது 16 ஆண்டுகால வீழ்ச்சியைக் கண்டுள்ள நிலையில் சிறிலங்காவில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நிலையானது சிறிலங்காவின் பொருளாதாரத்தில் மேலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிறிலங்காவில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிநிலையைக் கவனத்திற் கொண்டு அதற்கேற்ப செயற்பட வேண்டிய நிலையில் இந்தியா உள்ளது. ஆனால் இந்தியாவின் கட்டமைப்பு சார் தடைகள் காரணமாக சிறிலங்கா விடயத்தில் தீர்மானத்தை எட்டுவதற்கு இந்தியாவானது வேறு சில தெரிவுகளையும் கொண்டுள்ளது என்பதே இங்கு இந்தியா எதிர்கொள்ளும் பிரச்சினையாகும்.

வழிமூலம்         – Livemint
மொழியாக்கம் – நித்தியபாரதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *