மேலும்

சிறிலங்காவில் என்ன நடக்கிறது – என்ன சொல்கிறார்கள்? – நடப்புகளின் சங்கமம்

சிறிலங்காவுக்கான அமெரிக்கா மற்றும் ஐ.நாவின் தூதுவர்கள் சபாநாயகர் கரு ஜெயசூரியவைச் சந்தித்து அரசியல் நெருக்கடிகள் தொடர்பாக பேச்சுக்களை நடத்தியுள்ளனர்.

இன்று பிற்பகல் 3 மணியளவில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.

இந்தச் சந்திப்பில் சிறிலங்காவுக்கான பதில் அமெரிக்க தூதுவர் றொபேர்ட் ஹில்டனும் ஐ.நா தூதரக உயர் அதிகாரி ஒருவரும் பங்கேற்றனர்.

இந்தச் சந்திப்பின் போது, அமெரிக்க அதிகாரிகள், தற்போதைய அரசியல் நிலவரங்கள் குறித்து கவலை தெரிவித்தனர் என்றும், விரைவாக பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினர் என்றும் சபாநாயகரின் செயலகம் தெரிவித்துள்ளது,

ஐ.நா உயர் அதிகாரியும் அதே உணர்வை வெளிப்படுத்தியுள்ளார்.

நாடாளுமன்றத்தை கூட்டுவது குறித்து நாளை முடிவு

நாடாளுமன்றத்தை கூட்டுவது குறித்து ஆராய சபாநாயகர் கரு ஜெயசூரிய, நாளை கட்சித் தலைவர்களின் கூட்டத்தை கூட்டியுள்ளார்.

நாளை காலை 11 மணியளவில் இந்தக் கூட்டம் இடம்பெறவுள்ளது.

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தை வரும் நொவம்பர் 16ஆம் நாள் வரை முடக்கி வைத்துள்ள நிலையில், நாடாளுமன்றத்தை கூட்ட முடியுமா என்பது குறித்து நாளை கூட்டத்தில் சபாநாயகர் ஆலோசனை நடத்தவுள்ளார்.

கூட்டமைப்பு எம்.பிக்கள் அவசரமாக கொழும்புக்கு அழைப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் உடனடியாக கொழும்புக்கு வருமாறு,  அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாளை சந்தித்து தற்போதைய நிலவரங்கள் தொடர்பாக, கலந்துரையாடுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வெளிநாடுகளுக்குச் சென்றுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களை உடனடியாக நாடு திரும்புமாறும், அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மகிந்தவின் முதல் உத்தரவு – அர்ஜூன ரணதுங்க கைது

அண்மையில் கலைக்கப்பட்ட அமைச்சரவையில் பெற்றோலிய வளங்கள் அமைச்சராகப் பணியாற்றிய அர்ஜூன ரணதுங்க சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தெமட்டகொட பெற்றோலியக் கூட்டுத்தாபன வளாகத்தில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பாகவே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவத்தில் ஒருவர் பலியானார். இருவர் காயமடைந்தனர்

பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு சென்றிருந்த அர்ஜூன ரணதுங்கவை மகிந்த ராஜபக்ச ஆதரவு தொழிற்சங்கத்தினர் முற்றுகையிட்டு தாக்க முற்பட்டனர். அப்போது, அவரது பாதுகாவலர்கள் சுட்டதில், ஒருவர் மரணமானார். இருவர் காயமடைந்தனர்.

சிறப்பு அதிரடிப்படையினர், சென்று, அவர்களின் சீருடை மற்றும் தலைக்கவசம் அணிவித்தே, அர்ஜூன ரணதுங்கவை பாதுகாப்பாக அங்கிருந்து வெளியேற்றியிருந்தனர்.

இந்த நிலையில், அர்ஜூன ரணதுங்கவை கைது செய்யக் கோரி பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் சில தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் குதித்தன. இதனால் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கடும் நெருக்கடி ஏற்பட்டது.

அதேவேளை, இன்று முற்பகல் பிரதமராகப் பொறுப்பேற்ற மகிந்த ராஜபக்ச, தெமட்டகொட துப்பாக்கிச சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையவர் எந்தப் பதவியில் இருந்தாலும் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு, சிறிலங்கா காவல்துறை மா அதிபருக்கு உத்தரவிட்டார்.

இதையடுத்தே, குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அர்ஜூன ரணதுங்கவை கைது செய்துள்ளனர். இதையடுத்து பெற்றோலிய தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை கைவிட்டுள்ளன.

‘ஐயோ சிறிசேன”-  மங்களவின் பாதுகாப்பும் நீக்கம்

சிறிலங்காவின் நிதியமைச்சராக இருந்த மங்கள சமரவீரவின் பாதுகாப்பும் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அவர் கீச்சகத்தில் பதிவு ஒன்றை இட்டுள்ளார். அதில்,

“அதிபர் மைத்திரிபால மீண்டும் தாக்குதல் தொடுத்துள்ளார். எனது பாதுகாப்பும் விலக்கப்பட்டுள்ளது. ஐயோ…. சிறிசேன..” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐ.நா அமைதிப்படையை நிறுத்துமாறு போலி கடிதம்

சிறிலங்காவில் அமைதியை ஏற்படுத்த ஐ.நா அமைதிப்படையை நிறுத்துமாறு கோரி, வெளிநாட்டுத் தூதுவர்களுக்கு ரணில் விக்ரமசிங்கவின் போலியான கையொப்பத்துடன் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன.

இந்தக் கடிதம் முற்றிலும் போலியானது என்று ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவில் அரசியல் குழப்பங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், சிவில் உரிமையை நிலை நிறுத்தவும், அமைதியை ஏற்படுத்தவும், ஐ.நா அமைதிப்படையை நிறுத்துவதற்கான சாத்தியங்கள் குறித்து அவசரமாக ஆராயுமாறு, அந்தக் கடிதத்தில் கோரப்பட்டுள்ளது.

அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ், நோர்வே, ஜேர்மனி உள்ளிட்ட பல நாடுகளின் தூதரகங்களுக்கு இந்தக் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன. இதன் பிரதிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.

நாடாளுமன்றத்தைக் கூட்டுமாறு மல்வத்த, அஸ்கிரிய பீடங்கள் ஆலோசனை

உடனடியாக நாடாளுமன்றத்தைக் கூட்டி பிரதமர் தொடர்பான பிரச்சினைக்குத் தீர்வு காணுமாறு, அஸ்கிரிய, மல்வத்த பீடங்கள், சபாநாயகர் கரு ஜெயசூரியவுக்கு ஆலோசனை கூறியுள்ளன.

சபாநாயகர் கரு ஜெயசூரிய இன்று அஸ்கிரிய, மல்வத்த பீடங்களின் மகாநாயக்கர்களைச் சந்தித்து நாட்டின் நெருக்கடி நிலை குறித்து கலந்துரையாடினார்.

இதன்போது இரண்டு பீடங்களினதும் மகாநாயக்கர்கள், “யார் பிரதமர் என்பது பிரச்சினையல்ல, ஆனால் பிரதமர் நியமனம், சட்டபூர்வமானதாக- அரசியலமைப்புக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும்.

புதிதாக நியமிக்கப்பட்ட பிரதமரும், ஏற்கனவே பதவியில் உள்ள பிரதமரும் தமது பக்க நியாயங்களைக் கூறிக் கொண்டிருக்கின்றனரே தவிர, பிரச்சினைக்குத் தீர்வு காணும் சூழலை ஏற்படுத்தவில்லை.

இதனால் நிலைமைகள் உக்கிரமடையக் கூடும், எனவே உடனடியாக நாடாளுமன்றத்தைக் கூட்டி பிரதமர் தொடர்பான பிரச்சினைக்குத் தீர்வு காணுமாறு, ஆலோசனை கூறியுள்ளனர்.

அமெரிக்க, ஐ.நா தூதுவர்கள் சபாநாயகரைச் சந்திக்கின்றனர்

சிறிலங்காவுக்கான அமெரிக்க தூதுவரும், ஐ.நாவின் சிறப்புத் தூதுவரும் சபாநாயகர் கரு ஜெயசூரியவை இன்று பிற்பகல் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளனர்.

நாட்டின் அரசியல் நெருக்கடிகள் தீவிரமடைந்துள்ள நிலையில் இந்தச் சந்திப்பு இடம்பெறவுள்ளது.

நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டி தற்போதைய அரசியலமைப்பு நெருக்கடிக்குத் தீர்வு காணுமாறு அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம், நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது.

இந்த நிலையில் அமெரிக்கத் தூதுவரும் ஐ.நாவின் சிறப்புத் தூதுவரும் சபாநாயகரைச் சந்திக்கவுள்ளனர்.

உடன் நாடாளுமன்றத்தைக் கூட்டுமாறு 126 எம்.பிக்கள் கடிதம்

உடனடியாக நாடாளுமன்றத்தைக் கூட்டுமாறு கோரி, 126  நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பங்கள் அடங்கிய கடிதம் ஒன்றை  சபாநாயகருக்கு ஐக்கிய தேசியக் கட்சி, அனுப்பியுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க இதனை சற்று முன்னர் உறுதிப்படுத்தியுள்ளார்.

அதேவேளை, பெரும்பான்மை உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்று நாடாளுமன்றத்தைக் கூட்டும் அதிகாரம் சபாநாயகருக்கு இருப்பதாகவும், நாளை இதுகுறித்து அவர் முடிவெடுப்பார் என்றும், வெளிநாட்டுச் செய்தியாளர்களை அலரி மாளிகையில் இன்று சந்தித்த ரணில விக்ரமசிங்க தெரிவித்தார்.

சிறிலங்கா நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டி தற்போதைய நெருக்கடி நிலையைத் தீர்க்க வேண்டும் என்று, சபாநாயகருக்கு, ஜேவிபியும் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனும்,  இதுபோன்றதொரு கடிதத்தை நேற்று சபாநாயகருக்கு அனுப்பியிருந்தார்.

கேலிக்கூத்தாக்கி விட்டார் சிறிலங்கா அதிபர்

சிறிலங்கா அதிபரின் நடவடிக்கை அனைத்துலக அரசியலில் சிறிலங்காவைக் கேலிக்கூத்தாக்கியுள்ளது என்று ஜேவிபி  தலைவர் அனுர குமார திசநாயக்க தெரிவித்தார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பதவி நீக்கம் செய்தமை எதேச்சையாக இடம் பெறவில்லை. அது ஒரு அரசியல் சூழ்ச்சி.

ஆட்சி மாற்றத்திற்கான காரணம் என்ன என்பதற்கு, சிறிலங்கா அதிபர்  மைத்திரிபால சிறிசேன  நேற்று நிகழ்த்திய உரையில், எந்த புதிய   விடயங்களும் காணப்படவில்லை, மாறாக பல கேள்விகளையே எழுப்பியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவின் 22 ஆவது பிரதமராக பொறுப்பேற்றார் மகிந்த

சிறிலங்காவின் 22 ஆவது பிரதமராக மகிந்த ராஜபக்ச இன்று காலை பிரதமர் செயலகத்தில் கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார்.

இந்த நிகழ்வில், மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு அளிக்கும் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும்,  பிரதமரின் செயலர் சிறிசேன அமரசேகரவும் கலந்து கொண்டனர்.

முன்னதாக கடந்த 26ஆம் நாள் மாலை, மகிந்த ராஜபக்ச சிறிலங்கா அதிபரின் முன்னிலையில் பிரதமராக பதவியேற்றிருந்தார்.

எனினும், இன்றே அவர் பிரதமர் செயலகத்தில் கடமைகளை பொறுப்பேற்றார்.

இன்று மாலை புதிய அமைச்சரவை பதவியேற்கும் என்றும் பிரதமரின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

ஒன்றாக ஏர்பூட்டு விழாவில் மகிந்தவும் மைத்திரியும்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் மகிந்த ராஜபக்சவும், இன்று அம்பாந்தோட்டை மாவட்டத்தில் உள்ள திஸ்ஸமகாராம விகாரையில் வழிபாடுகளை மேற்கொண்டனர்.

அதையடுத்து, தேசிய ஏர்பூட்டு விழாவிலும் அவர்கள் ஒன்றாக கலந்து கொண்டனர்.

இருவரும் இணைந்து பங்கேற்கும் முதல் அரசாங்க நிகழ்வு இதுவாகும்.

அரசாங்கப் பேச்சாளர்களாக இருவர் நியமனம்

சிறிலங்காவின் தற்போதைய அரசாங்கத்தின் புதிய பேச்சாளர்களாக முன்னாள் அமைச்சர்களான மகிந்த சமரசிங்கவும், கெஹலிய ரம்புக்வெலவும் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *