மேலும்

ஆட்சிக் கவிழ்ப்பும் பின்னணியும்

ஒரு சிலரைத் தவிர, இலங்கையிலோ, உலகத்திலோ யாருமே எதிர்பாராத அரசியல் மாற்றம் – கடந்த வெள்ளிக்கிழமை முன்னிரவில் நடந்தேறியிருக்கிறது. மகிந்த ராஜபக்சவை திடீரெனப் பிரதமராக நியமித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இந்த திடீர் நடவடிக்கை, இலங்கையை மாத்திரமன்றி உலகத்தையே குழப்பத்தில் ஆழ்த்தியிருக்கிறது. அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

2014 நொவம்பர் மாதம், ஜனாதிபதி தேர்தல் அறிவிப்பு வெளியிடப்படுவதற்கு முதல் நாள் இரவு, மகிந்த ராஜபக்சவுடன் இணைந்திருந்து அப்பம் சாப்பிட்டு விட்டு, மறுநாள் காலையில் மைத்திரிபால சிறிசேன எப்படி எதிரணிக்கு ஓடிச் சென்றாரோ, அதேபோன்றதொரு பரபரப்பை மீண்டும் ஏற்படுத்தியிருக்கிறார் ஜனாதிபதி.

இது ஒன்றும் ஒரே நாளில் எடுக்கப்பட்ட முடிவு என்றோ, அல்லது ஒரே ஒரு சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்டது என்றோ இலகுவாக நம்பிவிட முடியவில்லை. இதற்குப் பின்னர் ஒரு பாரிய – ஒன்றிணைக்கப்பட்ட திட்டங்கள் இருந்திருப்பதாகவே தோன்றுகிறது.

மகிந்த ராஜபக்சவை பிரதமராக நியமித்து, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பதவி நீக்கம் செய்திருப்பதாக கடிதம் அனுப்பி, இவை இரண்டையும், வர்த்தமானி மூலம் அறிவித்த போதும்- நேற்று இந்தப் பத்தியை எழுதப்படும் நேரம் வரை- எதற்காக இந்த மாற்றங்களைச் செய்தார் என்று ஜனாதிபதி, நாட்டு மக்களுக்கு அறிவிக்கவேயில்லை. 

2015ஆம் ஆண்டு மகிந்த ராஜபக்சவை வீட்டுக்கு அனுப்ப நாட்டு மக்கள் எடுத்த முடிவை,- அவர்களின் ஆணையை-  ஜனாதிபதி தனது ஒரு நடவடிக்கையின் மூலம் தலைகீழாக மாற்றியிருக்கிறார். இது ஆட்சிமாற்றத்தில் பங்கெடுத்த அனைத்துத் தரப்புகளுக்கும், அதற்குத் துணையாக இருந்த தரப்புகளுக்கும் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறது.

மைத்திரிபால சிறிசேவுடன் ஆரம்பத்தில் இருந்தே, இணைந்திருந்த ராஜித சேனாரத்ன போன்றவர்களே இதனை ஒரு பாரிய காட்டிக்கொடுப்பு என்றும் துரோகம் என்றும் விமர்சிக்கின்ற நிலை ஏற்பட்டிருக்கிறது.

ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையிலான அரசாங்கத்தை கவிழ்க்க எடுத்த முடிவுக்கு, தனக்கு நிறைவேற்று அதிகாரம் இருக்கிறது என்பதை மாத்திரம், ஜனாதிபதி ஒரு காரணமாக குறிப்பிட முடியாது.

புதிய அரசியல் கலாசாரம், அரசியல் மாற்றம், ஜனநாயகம், உரிமைகள் என்று பேசியும், வாக்குறுதிகளையும் கொடுத்து, நாட்டிலும், சர்வதேச அளவிலும் தனக்கு மதிப்பைத் தேடிக் கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அற்பமான, சாதாரண அரசியல் காரணங்களை முன்வைக்க முடியாது,

ஜனநாயக ரீதியாக தெரிவு செய்யப்பட்ட ஒரு அரசாங்கத்தை, பதவி நீக்குவதற்கு அவர் சரியான- காரணங்களை முன்வைக்க வேண்டியிருக்கும். உடனடியாக அவரால் அதனை முன்வைக்க முடியவில்லை. அது அவரது இயலாமையை வெளிப்படுத்துகிறது.

எனினும், அந்தப் பொறுப்பில் இருந்து அவரால் நீண்டகாலத்துக்கு நழுவ முடியாது. அவ்வாறு நழுவினால், அவர் இலங்கையின் வரலாற்றில் மிகமோசமான ஒரு தலைவராகவே அடையாளப்படுத்தப்படுவார்.

மக்களின் ஆணையை மீறி மகிந்த ராஜபக்சவைப் பிரதமராக்கிய, ஜனாதிபதியின் முடிவு பல்வேறு கேள்விகள், சந்தேகங்களை எழுப்பியிருக்கிறது. அதாவது, 2014ஆம் ஆண்டிலேயே இத்தகையதொரு திட்டத்துடன் தான் அவர், எதிரணிக்குள் நுழைந்தாரா என்பதும் அத்தகைய சந்தேகங்களில் ஒன்று.

2014ஆம் ஆண்டு மகிந்த ராஜபக்ச ஜனாதிபதி தேர்தலை முன்கூட்டியே நடத்த எடுத்த முடிவுக்கு இரண்டு முக்கியமான காரணங்கள் இருந்தன. ஒன்று நாட்டின் மோசமான பொருளாதார நிலை. இன்னொன்று ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் மூலம் கொடுக்கப்பட்ட சர்வதேச நெருக்கடி.

மைத்திரிபால சிறிசேனவை எதிரணிக்குள் அனுப்பி, அவரை ஜனாதிபதியாக்கி, அவரது அரசாங்கத்தின் மூலம், சர்வதேச நெருக்கடிகளை தளர்த்திக் கொண்டு தனக்கு வசதியான ஒரு சந்தர்ப்பத்தில் மீண்டும் அதிகாரத்தை மகிந்த கைப்பற்றியிருப்பாரோ என்ற சந்தேகம் பலரிடம் எழக்கூடும். மைத்திரிபால சிறிசேனவின் நடவடிக்கைகளே அத்தகைதொரு நிலைக்கும் வழிவகுக்கிறது.

எனவே, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இந்த ஆட்சிக்கவிழ்ப்புக்கான சரியான- ஏற்றுக்கொள்ளக் கூடிய காரணத்தை, மக்களுக்கு முன்பாக தெரியப்படுத்த வேண்டியிருக்கும்.

இந்த ஆட்சி மாற்றம் சட்டத்தின் படி நிகழ்ந்ததா- அரசியலமைப்பு ரீதியாக செல்லுபடியாகுமா- அடுத்து என்ன நடக்கப் போகிறது என்ற விவாதங்கள் நீண்டு கொண்டிருக்கின்றன. ஏனென்றால், இந்த ஆட்சிக்கவிழ்ப்பு வழக்கத்துக்கு மாறான ஒன்றாக நிகழ்ந்திருக்கிறது.

இந்த ஆட்சி மாற்றத்தின் பின்னணியில், மிகப்பெரியதொரு வலையமைப்பு செயற்பட்டிருப்பதற்கான சந்தேகங்கள் உள்ளன. தனியே உள்நாட்டு அரசியலுக்கும் அப்பால், பூகோள அரசியலும், அதனைச் சார்ந்த அதிகாரப் போட்டிகளும் இதில் தொடர்புபட்டிருக்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

அமெரிக்காவில் இருந்த பசில் ராஜபக்ச, அவசர அவசரமாக மகிந்த ராஜபக்சவினால் கொழும்புக்கு அழைக்கப்பட்டதில் இருந்தே, இந்த அரசியல் நாடகம், தீவிரம் பெற்றிருக்கும் என்று கருதப்படுகிறது.

அதற்குப் பின்னர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், மகிந்த ராஜபக்சவும், இரகசியமாக பேச்சுக்களை நடத்தியிருந்தனர். ஒன்றுக்கு மேற்பட்ட சந்தர்ப்பங்களில் இந்தச் சந்திப்புகள் நடந்திருக்கின்றன.

சமநேரத்தில், நடந்த பல்வேறு விடயங்களும் இந்த விவகாரத்தில் சந்தேகங்களை எழுப்பியிருக்கின்றன. குறிப்பாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் மகிந்த ராஜபக்ச குடும்பத்தினரை கொல்லும் சதித்திட்டம் தொடர்பாக வெளியாகிய செய்திகள் அதனைச் சார்ந்து நடக்கும் விசாரணைகள் என்பன, ஜனாதிபதியின் முடிவில் கணிசமான தாக்கத்தை செலுத்தியிருக்கும் போலத் தெரிகிறது.

நாட்டின் பொருளாதார நிலை சமாளிக்க முடியாத கட்டத்தைச் சென்றிருப்பதும், கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தை இந்தியாவுக்கு வழங்குவதற்கு கொடுக்கப்பட்ட அழுத்தங்களும், இதனை விட, ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் அவ்வப்போது தோன்றியிருந்த விரிசல்களும், இந்த ஆட்சிக்கவிழ்ப்பு விடயத்தில் தொடர்புபட்டிருப்பதாகத் தெரிகின்றன.

படுகொலைச் சதித் திட்ட விசாரணைகளை முன்னிறுத்தி, மைத்திரிபால சிறிசேனவுக்கு, ராஜபக்சவினால், கொடுக்கப்பட்ட ‘பேதி’ கூட, இதில் கணிசமான பங்கை வகித்திருக்கலாம்.

இந்தப் படுகொலைச் சதித்திட்டம் உண்மையானதா அல்லது ஆட்சிக் கவிழ்ப்பை இலக்கு வைத்து,  மறைகரங்களால் திட்டமிட உருவாக்கப்பட்டதா என்ற கேள்விகளும் இனிமேல் அதிகமாக எழுவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன.

இந்த விவகாரத்தில் இந்தியாவின் நிலையும் கேள்விக்குட்படுத்தப்படும் சூழலும் ஏற்பட்டிருக்கிறது. 2015இல், மகிந்தவின் ஆட்சி கவிழ்க்கப்பட்ட போதும், இந்தியப் புலனாய்வுப் பிரிவின் பங்கு குறித்து, அவரே குற்றச்சாட்டை எழுப்பியிருந்தார்.

இப்போது, அதே இந்தியப் புலனாய்வுத் துறையின் தொடர்பு குறித்த குற்றச்சாட்டுகளை மைத்திரிபால சிறிசேனவே அமைச்சரவைக்குள் முன்வைத்திருந்தார் என்று கூறப்பட்டது. அதன் தொடர்ச்சியாகவே, மகிந்த ராஜபக்ச பதவியைப் பெற்றிருக்கிறார்.

கடந்த செப்ரெம்பர் மாதம் மகிந்த ராஜபக்ச இந்தியாவுக்குப் பயணம் செய்து, இந்தியாவின் பக்கத்தில் இருந்த தவறான புரிதல்களை களைந்து விட்டு வந்ததாக குறிப்பிட்டிருந்தார்.

அவரை புதுடெல்லிக்கு அழைத்துச் சென்று, அதற்கான ஒழுங்குகளை செய்திருந்த சுப்ரமணியன் சுவாமி, விரைவில் மகிந்த ராஜபக்ச இலங்கை ஜனாதிபதியாகப் பதவியேற்கப் போகிறார் என்று கூறியிருந்தார். அவரது அந்தக் கூற்றுப் பலித்திருக்கிறது. ஜனாதிபதியாக அல்ல, பிரதமராக.

மகிந்த ராஜபக்ச புதுடெல்லியில் இருந்து திரும்பிய பின்னர், ஆட்சியை கவிழ்க்க இந்தியா துணையாக இருக்கும் என்று மகிந்த அணியினர் கூறியதும் நினைவிருக்கலாம்.

அதேவேளை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டு விட்டு, திரும்பிய ஒரு வாரத்துக்குள்ளாகவே அவரது ஆட்சி கவிழ்க்கப்பட்டிருக்கிறது.

அதுவும், றோ தொடர்பான சர்ச்சைகள், கொழும்பு துறைமுக சர்ச்சை, இந்தியாவின் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் உள்ள இழுபறிகள் குறித்து இந்தியப் பிரதமர் மோடி காட்டமாக வெளியிட்டகருத்துக்கள் என்பனவும், இத்தருணத்தில் நினைவிற் கொள்ள வேண்டிய விடயங்களாக இருக்கின்றன.

அதைவிட, விரைவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சீனாவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ள சூழலில் தான் இந்த பதவிக்கவிழ்ப்பும் நிகழ்ந்திருக்கிறது.

இவற்றை வைத்துப் பார்க்கும் போது, பல்வேறு குழப்பமான சூழல்கள் நிலவுவதும், தெரிகிறது, இந்தியாவின் திட்டங்களை செயற்படுத்துவதில் இழுத்தடிப்புகளுக்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் ஜனாதிபதியுமே தடையாக இருந்தனர்.

அவ்வாறான நிலையில், மகிந்த அணி கூறியது போன்று, ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சியைக் கவிழ்க்க இந்தியா துணை போயிருக்குமா என்ற கேள்வி உள்ளது.

அதேவேளை, இந்த விவகாரத்தில், இந்தியாவைச் சிக்கவைக்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதா என்ற சந்தேகிப்பதற்கும் இடமுள்ளது.

குறிப்பாக, இந்தியர் ஒருவரின் கைது, றோ பற்றிய குற்றச்சாட்டுகள் என்பன, ஆட்சிக்கவிழ்ப்புக்கான கருவிகளாகப் பயன்படுத்தப்பட்டிருக்கும் வாய்ப்புகளையும் நிராகரிப்பதற்கில்லை.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைப் பொறுத்தவரையில், தனது அரசியல் எதிர்காலம் பற்றி அதிகம் குழப்பமடைந்திருக்கிறார். பலமுறை அவர் பகிரங்கமாக வெளியிட்ட கருத்துக்கள், அவரது குழப்பத்தை வெளிப்படுத்தியிருந்தன. அதன் தொடர்ச்சியாகத் தான் இந்தப் பதவிக் கவிழ்ப்பையும் பார்க்க முடிகிறது.

ஆனால், 2015இல் அவரைக் சுற்றிக் கட்டியெழுப்பப்பட்ட ஒரு பெரிய விம்பம், அவரது ஒரு நடவடிக்கையினால், ஒட்டுமொத்தமாக தகர்ந்து தரைமட்டமாகியிருக்கிறது,

புறச்சக்திகளின் திட்டங்களுக்கு இவர் பலிக்கடா ஆனாரா -ஆக்கப்பட்டாரா என்ற விவாதங்கள் இனித் தேவையில்லை. ஏனென்றால், கிட்டத்தட்ட மைத்திரிபால சிறிசேன இனிமேல், ராஜபக்சக்களின் பிடியில் இருந்து தப்பிக்க முடியாது.

ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்துடன் இருந்த முரண்பாட்டை அவ்வப்போது அவர் வெளிக்காட்டினார். பல சந்தர்ப்பங்களில் அவர்களுடன் முட்டி மோதினார். அவர்களின் சில முடிவுகளுக்கு தடை போட்டார். சில நிமனங்களை ரத்துச் செய்தார். சிலரைப் பதவியில் இருந்து நீக்கினார். அதன்மூலம் அவர் தன்னிடம் நிறைவேற்று அதிகாரம் இருப்பதை அவ்வப்போது நிரூபித்து வந்தார்.

வெளிப்படையாக நிறைவேற்று அதிகார ஆட்சிமுறைக்கு எதிரானவராக தன்னைக் காட்டிக் கொண்டாலும், நிறைவேற்று அதிகாரத்தை இன்னமும் அனுபவிக்கும் விருப்பில் இருந்து மைத்திரிபால சிறிசேன விடுபடவில்லை என்பதையே இந்தப் பதவிக்கவிழ்ப்பும் உறுதி செய்கிறது.

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் மகிந்தவின் ஆதரவுடன் மீண்டும் போட்டியிடும் வாய்ப்பு அளிக்கப்படும் என்ற உத்தரவாதம் அவருக்கு கொடுக்கப்பட்டிருப்பதாக, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கிய தலைவர் ஒருவர் கூறியிருக்கிறார்.

அது உண்மையானால், – அதற்காகவே இந்த ஆட்சிக்கவிழ்ப்புக்கு அவர் துணைபோயிருந்தால், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவி மீதான அவரது கடந்தகால கருத்துக்கள் எல்லாமே, பொய் என்பது உறுதியாகி விடும்.

எவ்வாறாயினும், ராஜபக்சக்களின் கையில் தனது குடுமியைக் கொடுத்து விட்ட மைத்திரிபால சிறிசேனவினால், ரணிலுக்கு காட்டியது போன்ற ஆட்டத்தை இனிமேல் அவரால் காட்டவே முடியாது.  அவர்களுக்கு கீழ் இருந்து, காலில் மிதிபட்ட அவருக்கு அது நன்றாகவே தெரியும்.

ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்திருந்தால் தன்னை ஆறடி மண்ணுக்குள் புதைத்திருப்பார்கள் என்றும், சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலராக இருந்த தன்னை, எப்படியெல்லாம் வதைத்தார்கள் என்றும் ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர், புலம்பித் திரிந்தவர் மைத்திரிபால சிறிசேன.

அந்த நிலை அவருக்கு மீண்டும் வராது என்பதற்கு யார் உத்தரவாதம் என்று தெரியவில்லை.

எதுஎவ்வாறாயினும், இந்த ஆட்சி மாற்றம் சர்வதேச சமூகத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக தெரியவில்லை. இந்தியா இதுவரை காக்கும் மௌனம், அமெரிக்கா வெளியிட்டுள்ள எச்சரிக்கை செய்யும் பாணியிலான கருத்து என்பன, சர்வதேச சமூகம் இந்த நாடகத்தை ரசிக்கவில்லை என்பதை உணர்த்துகிறது.

மகிந்த ராஜபக்சவுக்கு மாத்திரமன்றி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் கூட, இது சிக்கலான தருணம். அரசியலில் எதுவும் நடக்கலாம் என்று கூறப்படுவதற்கு உதாரணமான மற்றொரு சம்பவமும் கூட.

– -என்.கே.

வழிமூலம் – வீரகேசரி வாரவெளியீடு (2018.10.28)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *