நாளை நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார் மைத்திரி – அமைச்சவை திங்களன்று பதவியேற்பு
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நாளை நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன இதனைத் தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா அதிபர் செயலகத்தின் இன்று மாலை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான கூட்டம் இடம்பெற்றது.
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில், பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள மகிந்த ராஜபக்ச மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட, நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன, நாளை சிறிலங்கா அதிபர் நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார் என்றும், நாளை மறுநாள் புதிய அமைச்சரவை பதவியேற்கும் என்றும் கூறினார்.
நாளை நிகழ்த்தவுள்ள உரையில், எதற்காக ரணில் விக்கிரமசிங்கவைப் பதவி நீக்கம் செய்தார் என்பதை சிறிலங்கா அதிபர் தெளிவுபடுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.