மேலும்

அல்லைப்பிட்டியில் 11 ஆம் நூற்றாண்டு சீன மட்பாண்டப் பொருட்கள் – கண்டுபிடித்தது சீனக் குழு

யாழ்ப்பாணம் – அல்லைப்பிட்டியில், தாம் மேற்கொண்ட தொல்பொருள் அகழ்வாய்வில், 600 பழங்கால சீன மட்பாண்டத் துண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சீனாவின் ஷங்காய் அருங்காட்சியகம் தெரிவித்துள்ளது.

கடந்த செப்ரெம்பர் 29ஆம் நாள் இந்த கண்டுபிடிப்புகள் தொடர்பாக அறிவிக்கப்பட்டுள்ளதாக, சீனாவில் இருந்து வெளியாகும் ‘சைனா டெய்லி’ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

இது சீனாவிற்கும் மற்ற நாடுகளுக்கும் இடையில் பண்டைய கடல்சார் பட்டுப் பாதை வழியாக இருந்த இணைப்புகளைக் காட்டுவதாகவும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

சீனாவின் ஷங்காய் அருங்காட்சியகத்தின் தொல்பொருள் அதிகாரிகள், தமது முதலாவது வெளிநாட்டு அகழ்வாய்வு நடவடிக்கைகளை,  கடந்த ஓகஸ்ட் மாதம் சிறிலங்காவில் மேற்கொண்டிருந்தனர்.

துறைமுக நகரான யாழ்ப்பாணம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் 40 நாட்கள் விரிவான அகழ்வாய்வில், ஈடுபட்டனர்.

இதன்போது, அல்லைப்பிட்டி மற்றும் ஊர்காவற்றுறை கோட்டை சிதைவுப் பகுதிகளில், அகழ்வாய்வுகள் மேற்கொள்ளப்பட்டதாக, ஷங்காய் அருங்காட்சியக அதிகாரிகள் குழுவுக்குத் தலைமை தாங்கிய  சென் ஜீ தெரிவித்தார்.

சென்னும் அவரது நண்பர்களும், அல்லைப்பிட்டிப் பகுதியில் 92.4 சதுர மீற்றர் பரப்பளவிலான இடத்தில் அகழ்வாய்வை மேற்கொண்ட போது, 650 வரையான மட்பாண்டத் துண்டுகளைக் கண்டெடுத்தனர். அவற்றில் 600 இற்கு மேற்பட்டவை சீனாவில் தயாரிக்கப்பட்டவை என்று சென் கூறினார்.

பெரும்பாலான சீன மட்பாண்ட துண்டுகள், 11 ஆம் நூற்றாண்டின் பின் அரைக்காலப் பகுதி அல்லது, 12 ஆம் நூற்றாண்டின் தொடக்க காலப்பகுதியைச் சேர்ந்தவையாகும் என்று ஷங்காய் அருங்காட்சியகத்தின், சீன மட்பாண்ட ஆய்வாளர் லூ மிங்ஹுவா தெரிவித்தார்.

கண்டெடுக்கப்பட்ட மட்பாண்டத் துண்டுகளில் கிண்ணங்கள், தட்டுகள், வட்டுகள் (saucers) , பானைகள் அடங்குகின்றன. இதுபோன்ற மட்பாண்டங்கள், தற்போதைய சீன மாகாணங்களான குவாங்டொங் மற்றும் பியூஜியானில் வெளிநாட்டு விற்பனைக்காக தயாரிக்கப்படுகின்றன.

பண்டைய பட்டுப்பாதை தொடர்பான ஆய்வுகளை ஷங்காய் அருங்காட்சியகம் அதிகரித்துள்ளதாக அதன் பணிப்பாளர் யாங் ஷிகாங் தெரிவித்தார்.

சிறிலங்கா மற்றும் சீனா தொடர்பான வரலாற்று ஆவணங்களி்ல், இரண்டு நாடுகளுக்கும் இடையிலான பயணங்கள், 2000 ஆண்டுகளுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டதாக கூறுகின்றன.

சீனாவைச் சேர்ந்த கண்டுபிடிப்பாளரான ஷெங், இலங்கைத் தீவுக்கு பலமுறை வணிக மற்றும் நட்புறவுப் பயணங்களை மேற்கொண்டார் என்பதை வெளிப்படுத்தும், கல்வெட்டு ஒன்று 1911ஆம் ஆண்டு சிறிலங்காவில் கண்டுபிடிக்கப்பட்டது.

பண்டைய கடல்சார் பட்டுப்பாதை வணிக வழி, பயண வலைப்பின்னல்கள், மற்றும் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான கலாசார தொடர்புகள்  குறித்த ஆய்வுகளில், இந்த தொல்பொருள் கண்டுபிடிப்பு முக்கியமான பங்கை வகிக்கும் என்று யாங் கூறினார்.

பண்டைய கடல்சார் பட்டுப் பாதையின் வரலாற்று ஆய்வுகளை மேற்கொள்வது, சிறிலங்காவில் முக்கியமான சிதைவுகள் உள்ள பகுதிகளில் அகழ்வாய்வில் ஈடுபடுதல், கூட்டு கண்காட்சிகளை நடத்துதல், பணியாளர்களை பரிமாற்றம் செய்தல் தொடரபாக,  சிறிலங்காவின் மத்திய கலாசார நிறுவகத்துடன்,  சீனாவின் ஷங்காய் அருங்காட்சியகம், ஐந்து ஆண்டு ஒத்துழைப்பு உடன்பாடு ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *