இந்த ஆண்டு மாகாண சபைத் தேர்தலுக்கு சாத்தியமில்லை – ரில்வின் சில்வா
மாகாண சபைகளுக்கான தேர்தலை இந்த ஆண்டு நடத்துவதது சாத்தியமற்றது என ஜேவிபியின் பொதுச்செயலர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இனப்பிரச்சினையைத் தீர்க்க ஒரு சரியான தீர்வை உருவாக்க வேண்டும் என்று எங்கள் தேர்தல் அறிக்கையில் நாங்கள் வலியுறுத்தியுள்ளோம்.
மாகாண சபைகள் அந்த நோக்கத்திற்கு உதவவில்லை. சிறந்த தீர்வை நாம் தேட வேண்டும்.
அதுவரை, மாகாண சபைகள் இருக்க வேண்டும். மாற்று தீர்வைக் கண்டுபிடிக்காமல் அவற்றை நாம் அகற்றமாட்டோம்.
ரணில் விக்கிரமசிங்கவின் காலத்தில் இயற்றப்பட்ட ஒரு சட்டத்தின் காரணமாக, மாகாண சபைகளை இப்போது இயக்க முடியவில்லை.
இந்த ஆண்டு மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்த நாங்கள் திட்டமிட்டிருந்தோம். இருப்பினும், டிட்வா போன்ற காரணங்களால் இது சாத்தியமற்றது.
தேர்தல்கள் விரைவில் நடத்தப்பட வேண்டும். ஆனால், எப்படி என்பதுதான் கேள்வி.
அதை நடத்துவதற்கு எந்த சட்டமும் இல்லை. நாம் எல்லை நிர்ணயம் செய்ய வேண்டும்.
எல்லை நிர்ணயத்திற்குச் செல்ல வேண்டுமா இல்லையா என்பதை நாம் சிந்திக்க வேண்டும். அதைப் பற்றி ஆராய ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளது என்றும் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
