மேலும்

சிறிலங்கா அதிபராகும் கோத்தாவின் கனவு

டி.ஏ.ராஜபக்ச நினைவிடம் அமைப்பதில் 80 மில்லியன் ரூபா மோசடி செய்யப்பட்டது  தொடர்பான குற்றச்சாட்டை எதிர்கொள்வதற்காக, அடுத்த அதிபர் வேட்பாளராகப் போட்டியிடுவார் என நம்பப்படும் கோத்தாபய  ராஜபக்ச கடந்த செவ்வாய்க்கிழமை புதிதாக உருவாக்கப்பட்ட  மேல்நீதிமன்றுக்குச் சென்றிருந்தார்.

அங்கு, கோத்தாபய  ராஜபக்சவிடம் ‘மகிந்த தங்களை அடுத்த அதிபர் வேட்பாளராகக் களமிறக்காது, தங்களின் சகோதரரான பசில் ராஜபக்சவை அடுத்த அதிபர் வேட்பாளராக களமிறக்கவுள்ளதாக கூறப்படுகிறது’ என ஊடகங்கள் கேள்வியெழுப்பின.

‘எமது குடும்பத்திற்குள் பிரிவை ஏற்படுத்துவதை நோக்காகக் கொண்டே இவ்வாறான ஊடக அறிக்கைகள் வெளியிடப்படுகின்றன. மகிந்த ராஜபக்ச அடுத்த அதிபர் வேட்பாளராக எவரையும் இன்னமும் நியமிக்கவில்லை. என்னிடம் இது தொடர்பாக அபிப்பிராயம் கூறுமாறு கேட்கப்பட்டால், நான் பசில் ராஜபக்சவையே அடுத்த அதிபர் வேட்பாளராகத் தெரிவு செய்வேன்’ என கோத்தாபய  ராஜபக்ச பதிலளித்தார்.

கோத்தாபய வின் இந்தப் பதில் அவரது பெருந்தன்மையைக் காட்டினாலும் கூட, கோத்தாபய வோ அல்லது பசிலோ தேர்தலில் போட்டியிட முடியாது என்பது இங்கே பிரச்சினையல்ல. அமெரிக்கா மற்றும் சிறிலங்கா ஆகிய இரு நாடுகளின் இரட்டைக் குடியுரிமைகளைப் பெற்றுள்ள நிலையில் அமெரிக்கச் சட்டங்கள் மற்றும் சிறிலங்காவின் அரசியலமைப்பு போன்றன இவ்விரு சகோதரர்களும் அதிபர் வேட்பாளராகப் போட்டியிடுவதற்கு தடையாக இருக்குமா?

சிறிலங்காவின் அடுத்த அதிபராக வரவேண்டும் என்கின்ற கோத்தாபய ராஜபக்சவின் கனவிற்கும், நாட்டின் அடுத்த தலைவராக வரவேண்டும் என்கின்ற அவரது அரசியல் இலக்குகளும் வெற்றி பெறுவதற்கு பெரும் இரும்புத் திரை ஒன்று தடையாக உள்ளது. இத்திரையானது கோத்தாபயவின் அரசியல் கனவுகளை சாத்தியமற்றதாக மாற்றியுள்ளது.

கோத்தாபய  தேர்தலில் போட்டியிடுவதற்கான பிரபலத்தைப் பெற்றிருக்கவில்லை என்பது இதற்கான காரணமல்ல. மகிந்தவிற்கு அடுத்ததாக, கோத்தாபய  தனது அதிகாரத்தின் மூலமாக தென்னிலங்கையில் பிரபலம் பெற்றுள்ளார். ஆகவே தேர்தலில் போட்டியிடுவதற்கு கோத்தாபய விற்கு அவரது அரசியல் பிரபலம் தடையாக இருக்கவில்லை.

ஆனால் கோத்தாபய  தற்போது எதிர்நோக்கும் சட்ட நடவடிக்கைகள் இவரது தேர்தல் பிரவேசத்திற்கு தடையாக உள்ளது. ஒரு நாட்டுக் குடியுரிமையைப் பெற்றுள்ள ஒருவர் இவ்வாறான சட்டச் சிக்கல்களை மிக மோசமாக எதிர்கொள்ளும் நிலையில், இரு நாட்டுக் குடியுரிமைகளைப் பெற்றுள்ள கோத்தாபய  எவ்வாறான சட்டச் சிக்கல்களுக்கு முகங்கொடுக்க வேண்டும் என்பதை உணர்ந்து கொள்ள முடியும்.

சிறிலங்காவின் 19வது அரசியல் திருத்தச் சட்டத்தின் மூலம் இரட்டைக் குடியுரிமை பெற்றுள்ள ஒருவர் அதிபர் தேர்தலிலோ அல்லது நாடாளுமன்றத் தேர்தலிலோ போட்டியிட முடியாது. ஆகவே அமெரிக்கா மற்றும் சிறிலங்கா ஆகிய இரு நாடுகளின் குடியுரிமையப் பெற்றுள்ள கோத்தாபய  தனது இரட்டைக் குடியுரிமையை இரத்துச் செய்யும் வரை 2020ல் இடம்பெறவுள்ள அதிபர் தேர்தலிலோ அல்லது நாடாளுமன்றத் தேர்தலிலோ போட்டியிட முடியாது.

அடுத்த அதிபர் வேட்பாளாராகப் போட்டியிடுவதற்கான தனது விருப்பத்தை கோத்தாபய , மகிந்தவிடம் தெரிவித்த போது அவர் தனது ஆசியை வழங்கியிருந்தார். ஆனால் இதற்கு இரட்டைக் குடியுரிமை தடையாக இருப்பது தொடர்பாக பல சந்தர்ப்பங்களில் ஊடகங்கள் வினவிய போது, இது தனக்கு பெரிய பிரச்சினையில்லை எனவும், இரண்டு வாரங்களில் அல்லது இரண்டு மாதங்களில் தனது இரட்டைக் குடியுரிமையை இரத்துச் செய்ய முடியும் எனவும் கோத்தாபய  பதிலளித்திருந்தார்.

கோத்தாபயவின் கருத்து சாத்தியமான ஒன்றா? ஒருவர் தனது காப்புறுதித் திட்டத்தை அல்லது கோல்ப் கழகத்தின் உறுப்புரிமையை இரத்துச் செய்வது போல இரட்டைக் குடியுரிமையையும் இரத்துச் செய்ய முடியுமா?

19வது திருத்தச் சட்டத்தின் மூலம் இரட்டைக் குடியுரிமையைப் பெற்றுள்ள ஒருவர் சிறிலங்காவின் அதிபர் தேர்தலிலோ அல்லது நாடாளுமன்றத் தேர்தலிலோ போட்டியிட முடியாது. சுவிற்சர்லாந்து மற்றும் சிறிலங்கா ஆகிய இரு நாடுகளின் இரட்டைக் குடியுரிமைகளைக் கொண்டுள்ள கீதா குமாரசிங்கவிற்கு எதிராக உச்ச நீதிமன்றில் தொடுக்கப்பட்ட வழக்கின் இறுதியில் இவரது நாடாளுமன்றப் பதவி பறிக்கப்பட்டது. இதேபோன்றே இரட்டைக் குடியுரிமையைப் பெற்றுள்ள ஒருவர் தேர்தலில் போட்டியிடும் போது உச்ச நீதிமன்றம் சட்ட நடவடிக்கை எடுக்கும் என்பதில் ஐயமில்லை.

இவ்வாறான சட்டச் சிக்கல்கள் உள்ள நிலையில் ‘இது ஒரு பிரச்சினையில்லை. நேரம் வரும்போது நான் எனது அமெரிக்க குடியுரிமையை இரத்துச் செய்வேன்’ என கோத்தாபய  பதிலளித்திருப்பதானது வேடிக்கையானது. இவரது இந்தப் பதில் சாத்தியமானதா? ஒருவர் பழத்தைச் சாப்பிட்டு விட்டு தனது சொந்த மகிழ்ச்சிக்காக அந்தப் பழத்தை அரைவாசியில் எறிய முடியுமா என்றால் அதற்கு முடியாது என்பதே பதிலாகும்.

அமெரிக்கக் குடியுரிமையை இரத்துச் செய்ய முடியும் எனக் கூறினாலும் கூட, இதற்கு பல நடைமுறைகளை நிறைவேற்ற வேண்டும். அத்துடன் தனது குடியுரிமையை வழங்கிய அமெரிக்கா தன்னால் சலுகைகள் வழங்கப்பட்ட தனது குடிமகன் தனது குடியுரிமையை இரத்துச் செய்வதாக கூறும்போது அதனை சாதாரணமாக நோக்காது. 

தான் வழங்கிய சலுகைகளை அனுபவித்து விட்டு தங்களின் சவாரிக்கு நன்றி, எனக்கு சிறிலங்கா தான் முக்கியமானது. அதனால் என்னை இறக்கி விடுங்கள் என அமெரிக்காவிடம் கோத்தாபய  கூறும்போது,  அது தனக்கு அவமானம் என்றே அமெரிக்கா கருதும்.

‘கோத்தாபய  ஏன் 2020 தேர்தலில் போட்டியிட முடியாது’ என கடந்த ஆண்டு நவம்பர் 05ல் வெளியாகிய Sunday Punch இல் குறிப்பிடப்பட்டிருந்தது. ‘கோத்தாபய  தனது குடியுரிமையை இரத்துச் செய்வதற்கான சத்தியப்பிரமாணத்தை எடுப்பதற்கு முன்னர், இது தொடர்பான பதிவுகளை ஆரம்பிக்க வேண்டும். உள்நாட்டிலுள்ள அமெரிக்கத் தூதரகம் இது தொடர்பான விண்ணப்பத்தை அமெரிக்காவிலுள்ள சில முகவர் அமைப்புக்களுக்கு அனுப்பி வைக்கும்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

உள்நாட்டிலுள்ள அமெரிக்கத் தூதரகம் குடியுரிமையை இரத்துச் செய்வதற்கான விண்ணப்பத்தைப் பதிவு செய்யும் போது, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் இதனை கணினியில் பதிவு செய்யும். இந்த விண்ணப்பமானது உள்நாட்டு பாதுகாப்புத் திணைக்களம், பென்ரகன், அமெரிக்காவின் நீதித் திணைக்களம், FBI மற்றும் அமெரிக்க திறைசேரி போன்ற சம்பந்தப்பட்ட அனைத்துத் திணைக்களங்களும் இந்த விண்ணப்பத்தைப் பெற்றுக் கொள்ளும்.

அமெரிக்காவின் இந்த முகவர் அமைப்புக்கள் குடியுரிமையை இரத்துச் செய்பவர் நிதி மோசடிகள், குற்றச் செயற்பாடுகள், போதைப் பொருட் கடத்தல்கள் போன்றவற்றிலும் இவர் விவகாரத்து வழக்கிற்கு உட்படுகிறாரா என்பதையும் ஆழமாக ஆராயும்.

‘விண்ணப்பத்தின் அடிப்படையில் இச்செயற்பாடானது மூன்று மாதங்கள் தொடக்கம் மூன்று ஆண்டுகள் வரை தொடரும். அமெரிக்கச் சட்டத்தின் பிரகாரம் குடியுரிமை இரத்து தொடர்பான விண்ணப்பத்தை குறித்த காலத்திற்குள் பரிசீலிக்க வேண்டும் என விதந்துரைக்கப்படவில்லை.

ஆகவே அமெரிக்கா, கோத்தாபய  குடியுரிமையை இரத்துச் செய்வதற்கான விண்ணப்பத்தை வழங்குவாராயின் அது தொடர்பில் தீர்மானம் எட்டுவதற்கு தனக்கு விருப்பமான காலத்தை எடுத்துக்கொள்ளும்’ என Sunday Punch இல்  குறிப்பிடப்பட்டது.

ஆனால் கோத்தாபய வின் விடயத்தில் விரைந்து நடவடிக்கை எடுப்பதன் மூலம் தென்னாசியப் பிராந்தியத்தில் அமெரிக்கா அதிக நலன்களைக் கொண்டுள்ளதைக் காண்பிப்பதற்கான ஒரு வாய்ப்பாக பயன்படுத்தலாம். இதற்காக அமெரிக்கா கோத்தாவின் குடியுரிமை இரத்தை இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்காது வெறும் 48 மணித்தியாலங்களுக்குள் வழங்கலாம் எனவும் கூறப்படுகிறது.

எனினும், அமெரிக்காவின் உச்ச நீதிமன்றால் 19 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியிடப்பட்ட தீர்ப்புத் தொடர்பாக இரண்டு வாரங்களின் முன்னர் சிங்கள பத்திரிகை ஒன்றில் பிரசுரிக்கப்பட்டதைத் தொடர்ந்தே தற்போது கோத்தாபய வின் இரட்டைக் குடியுரிமையானது அவர் தேர்தலில் போட்டியிடுவதற்குத் தடையாக இருக்கும் என்கின்ற விடயம் வெளிச்சத்திற்கு வந்தது.

அமெரிக்காவின் சுயாட்சி மாநிலமான புவேர்ட்டோ ரிக்கோ என்கின்ற இடத்தில் 1952 நவம்பர் 02 அன்று பிறந்த லொசாடா கொலன் என்பவர் சட்டவாளராவார்.  அமெரிக்காவிற்குச் சொந்தமான பிராந்தியமான புவேர்ட்டோ ரிக்கோவில் பிறந்ததால் இவர் அமெரிக்கக் குடிமகனாவார்.

இந்நிலையில் 1996ல் லொசாடோ, புவேர்ட்டோ ரிக்கன் சுதந்திரக் கட்சியின் சார்பாக அமெரிக்காவின் மயாகுவெஸ் நகரின் மேயர் தேர்தல் வேட்பாளாராகக் களமிறங்கினார். ஆனால் அமெரிக்காவின் பிராந்தியமாக புவேர்ட்டோ ரிக்கோ விளங்கிய போதிலும், சிறிலங்காவின் 19வது திருத்தச் சட்டத்தில் இரட்டைக் குடியுரிமையாளர்கள் தேர்தலில் போட்டியிடக் கூடாது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது போன்றே புவேர்ட்டோ ரிக்கோவும் இரட்டைக் குடியுரிமை பெற்ற தனது குடிமக்கள் தேர்தலில் போட்டியிட முடியாது என்கின்ற சட்டத்தைக் கொண்டிருந்தது.

தற்போது பசில் மற்றும் கோத்தாபய  சந்திக்கின்ற சட்டச் சிக்கல் போன்றே, 22 ஆண்டுகளுக்கு முன்னர் லொசாடாவும் சட்டச் சிக்கலுக்கு முகங்கொடுத்திருந்தார்.

செப்ரெம்பர் 23, 1996ல் லொசாடா தனது அமெரிக்கக் குடியுரிமையை இரத்துச் செய்யுமாறு கோரி டொமினிக்கன் குடியரசின் அமெரிக்கத் தூதரகத்தில் விண்ணப்பத்திருந்தார். தனது குடியுரிமையை இரத்துச் செய்வதற்கான காரணம் என்ன என்பதையும் அவர் விளக்கமாக தெரிவித்திருந்தார். இவர் எழுத்து மூலமாக தனது அமெரிக்க குடியுரிமையை இரத்துச் செய்வதற்கான உறுதிமொழியையும் வழங்கினார்.

அத்துடன் அமெரிக்காவின் குடியுரிமையை இழந்த பின்னரும் கூட, தான் புவேர்ட்டோ ரிக்கோவின் குடிமகன் என்பதையும் லொசாடா உறுதிப்படுத்திக் கொண்டார். அமெரிக்கச் சட்டத்தின் பிரகாரம், குறிப்பாக அமெரிக்காவின் குடிவரவு மற்றும் தேசியச் சட்டத்தின் கீழ் அமெரிக்கக் குடிமகன் ஒருவர் தனது குடியுரிமையை இரத்துச் செய்வதற்கான சரியான காரணம் என்பதை அமெரிக்கத் தூதர் தெளிவாக்கிக் கொள்ளவேண்டும். இதன் பின்னர் இது தொடர்பாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்திற்கும் இராஜாங்கச் செயலருக்கும் எழுத்து மூலமாக விளக்க வேண்டும்.

இந்த அறிக்கையானது அமெரிக்க இராஜாங்கச் செயலரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்னர் இதன் நகல் பிரதி ஒன்று தகவலுக்காக சட்ட மா அதிபருக்கும் குடியுரிமையை இரத்துச் செய்வதற்கு விண்ணப்பித்தவருக்கும் அனுப்பி வைக்கப்படும். இந்த வகையில் லொசாடாவின் வழக்கும் பரிசீலிக்கப்பட்டு அமெரிக்க இராஜாங்கச் செயலரால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆகஸ்ட் 13, 1997ல் லொசாடா அமெரிக்காவின் கொலம்பியா மாவட்ட நீதிமன்றில் தனக்கான குடியுரிமை இரத்து அத்தாட்சிப் பத்திரத்தை கையளிக்க வேண்டும் என மனுத்தாக்கலை மேற்கொண்டிருந்தார்.

மூன்று ஆண்டு சட்ட விசாரணையின் பின்னர் லொசாடாவின் குடியுரிமையை இரத்துச் செய்வதற்கான விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. இந்த வழக்குப் போன்று சிறிலங்காவினதும் அமெரிக்காவினதும் குடியுரிமைகளைக் கொண்டிருக்கின்றவர்களுக்குப் பொருத்தமாக இருக்கும் எனக் கூறமுடியாது.

ஏனெனில் சிறிலங்காவானது இறைமையுள்ள ஒரு நாடாகும். ஆனால் புவேர்ட்டோ ரிக்கா ஐக்கிய அமெரிக்காவிற்குச் சொந்தமான சுயாட்சி பிரதேசமாகும். அமெரிக்காவின் உச்ச நீதிமன்றில் லொசாடாவால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கானது மூன்று ஆண்டுகள் வரை இழுத்தடிக்கப்பட்டது.

இதுபோன்றே கோத்தாபய வின் வழக்கும் காலந்தாழ்த்தப்படலாம்.  அமெரிக்காவின் குடியுரிமையை இரத்துச் செய்து சிறிலங்காவின் அதிபர் தேர்தலில் கோத்தாபய  போட்டியிடுவதைத் தடுப்பதற்கு ஆதரவாக   குரல் கொடுப்பதற்கு அமெரிக்க வாழ் புலம்பெயர் தமிழ் மக்கள் ஒன்றுசேர்வார்களா?

அமெரிக்க நீதிமன்றங்கள் புலம்பெயர் தமிழ் மக்களின் கோரிக்கைகளை மறுக்கலாம். ஆனாலும் கோத்தாபய  தனது அமெரிக்கக் குடியுரிமையை நிராகரிப்பது தொடர்பாக அடுத்து ஆண்டில் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலிற்கு இடையில் தீர்மானம் எடுப்பதும் சாத்தியமற்றது. தற்போது கோத்தாபயவிற்குச் சாதகமான சூழல் காணப்படவில்லை.

ஆனாலும் தற்போது கோத்தாபய விற்கு சாதகமான நிலை காணப்படவில்லை. சிறிலங்காவினதும் அமெரிக்காவினதும் சட்டங்கள் கோத்தபாயாவிற்கு சாதகமாக அமையவில்லை.

சிறிலங்காவின் தற்போதைய கூட்டணி அரசாங்கமானது பல்வேறு எதிர்ப்புக்களுக்கு முகங்கொடுத்து வரும் நிலையில் சாம்பலிலிருந்து பீனிக்ஸ் பறவை மீண்டும் உயிர் பெறுவது போன்று மகிந்த அணியினர் அரசியலில் தமது இருப்பைத் தக்கவைத்துக் கொள்வதற்கு முயல்வார்கள்.

19வது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் மகிந்த ராஜபக்ச ஏற்கனவே இரண்டு தடவைகள் அதிபராகப் பதவி வகித்ததால் மீண்டும் அதிபராகப் போட்டியிட முடியாது. இதேபோன்று இவரது மகனான நாமல் வயது குறைவாக இருப்பதால் 2020 அதிபர் தேர்தலில் போட்டியிட முடியாது.

இதேபோன்றே தற்போது இரட்டைக் குடியுரிமை விவகாரமானது கோத்தாபய  மற்றும் பசில் ஆகியோர் அதிபர் வேட்பாளார்களாகப் போட்டியிடுவதற்கு தடையாக அமைகிறது.

‘2025 அதிபர் தேர்தலில் மகிந்த தனது மகனான நாமலை அதிபர் வேட்பாளராக நிறுத்துவார்’ என மகிந்தவின் விசுவாசியான குமார வெல்கம அண்மையில் தெரிவித்திருந்தார். சிறிலங்கா சுதந்திரக் கட்சி ராஜபக்சக்களுக்குச் சொந்தமான கட்சி அல்ல. இக்கட்சியில் பல முதிர்ச்சியடைந்த அரசியல்வாதிகள் உள்ளனர். ஆனால் இவர்கள் கட்சியை முன்னோக்கிக் கொண்டு செல்லவில்லை. ஐக்கிய தேசியக் கட்சியானது விக்கிரமசிங்க மீது  சார்ந்துள்ளது போல், எதிர்க்கட்சியானது ராஜபக்சாக்களுக்கு ஆதரவாக உள்ளது போல் தெரிகிறது.

வழிமூலம்       –  Sunday times
மொழியாக்கம் – நித்தியபாரதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *