மேலும்

வடக்கு, கிழக்கில் அபிவிருத்திப் பணிகளை துரிதப்படுத்த சிறப்புச் செயலணிக் கூட்டத்தில் முடிவு

வடக்கு, கிழக்கில் அபிவிருத்திப் பணிகளை துரிதமாக முன்னெடுக்கப்படுவது அவசியம் என்றும், இது நல்லிணக்கத்தை ஊக்குவிப்பதற்கு முக்கியமானது என்றும் தெரிவித்துள்ளார் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன.

சிறிலங்கா அதிபரால் நியமிக்கப்பட்ட, வடக்கு -கிழக்கு அபிவிருத்திக்கான செயலணியின் கூட்டம் நேற்று கொழும்பில் நடைபெற்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கடந்த மூன்றரை ஆண்டுகளில் சிறிலங்கா அரசாங்கத்தினால் வடக்கு, கிழக்கில் பாரியளவில் முன்னெடுக்கப்பட்டுள்ள வாழ்வாதார மற்றும், உட்கட்டமைப்புத் திட்டங்கள் தொடர்பாக மக்களுக்கு சரியாகத் தெரியப்படுத்தப்படவில்லை என்றும் சிறிலங்கா அதிபர் இந்தக் கூட்டத்தில் குறிப்பிட்டுள்ளார்.

போரினால் வடக்கு, கிழக்கில் அபிவிருத்தியில் பின்னடைவு ஏற்பட்டதாகவும், அதனைத் தற்போது துரிதப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தக் கூட்டத்தில் வடக்கு, கிழக்கில் துரிதமாக முன்னெடுக்கப்பட வேண்டிய திட்டங்களும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

வடக்கு, கிழக்கில் 50 ஆயிரம் வீடுகளை அமைக்கும் திட்டத்தில், 25 ஆயிரம் வீடுகளை அமைக்கும் நடவடிக்கைகளை ஓகஸ்ட் மாதமே ஆரம்பிப்பது,  ஏனைய 10 ஆயிரம் வீடுகளை கட்டும் பணிகளை 2019 ஜனவரியில் ஆரம்பிப்பது என்றும்  இதன் போது முடிவு செய்யப்பட்டுள்ளது.

இரண்டு மாகாணங்களிலும், 1847 கி.மீ நீளமான வீதி வலையமைப்புகளை விரைவில் ஆரம்பிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மயிலிட்டி மீன்பிடித் துறைமுகமும் விரைவில் அபிவிருத்தி செய்யப்படும்.

அத்துடன், விவசாய, பொருளாதார , கல்வி, சுகாதார துறைகளில் சிறப்பு அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த மாகாணங்களிலுள்ள மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கு, 20இற்கு மேற்பட்ட திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன் கீழ் அம்பாறை சீனித் தொழிற்சாலை,  மட்டக்களப்பு தேசிய காகித ஆலை,  மட்டக்களப்பு அரிசி ஆலை என்பன மீண்டும் இயக்கப்படவுள்ளன.

சிறிலங்கா அதிபரால் நியமிக்கப்பட்ட 48 பேர் கொண்ட இந்தச் செயலணியில் பிரதமர், அமைச்சர்கள், அரச அதிகாரிகள், படை அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *