மேலும்

விஜயகலாவின் உரை – விக்னேஸ்வரனிடம் ஒன்றரை மணிநேரம் விசாரணை

விடுதலைப் புலிகள் குறித்து அண்மையில் முன்னாள் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் வெளியிட்ட கருத்து தொடர்பாக, வட மாகாண முதலமைச்சரிடம் சிறிலங்கா காவல்துறையினர் நேற்று விசாரணை நடத்தியுள்ளனர்.

யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் கடந்த 2ஆம் நாள் நடந்த நிகழ்வில் உரையாற்றிய விஜயகலா மகேஸ்வரன், விடுதலைப் புலிகள் மீண்டும் வர வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து, சிறிலங்கா காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தநிலையில், மேற்படி நிகழ்வில் பங்கேற்ற வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம், அவரது இல்லத்தில் வைத்து, சிறிலங்கா காவல்துறையின் திட்டமிட்ட குற்றங்கள் தடுப்பு பிரிவினர் நேற்றுக்காலை விசாரணை நடத்தினர்.

ஒன்றரை மணி நேரம் கேள்விகளை எழுப்பி அவரிடம் வாக்குமூலம் பெற்றிருந்தனர்.

இதன்போது, “அப்படிக் கூறியிருந்தாலும், விஜயகலா மகேஸ்வரன் வன்முறையை ஆதரிக்கவில்லை. மோசமான சட்டம் ஒழுங்கு நிலைமைகளையே அவர் மேற்கோள்காட்டியிருந்தார்.

அந்த நாளும் வந்திடாதோ என்று ஒருவர் அங்கலாய்ப்பது குற்றமாகாதென்று கூறினேன்

விஜயகலா மகேஸ்வரன் தனது கட்சிக்கு விசுவாசமானவர். அவருக்கு எதிராக எந்த நடவடிக்கை எடுக்கப்பட்டாலும், அது அவரது பேச்சு சுதந்திரத்துக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக இருக்கும்” என்றும் சிறிலங்கா காவல்துறையினரிடம் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

அதேவேளைன, நிகழ்வில் பங்கேற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஊடகவியலாளர்கள், அரச அதிகாரிகளிடமும், காவல்துறையினர் வாக்குமூலங்களைப் பெற்றுள்ளனர்.

விஜயகலா மகேஸ்வரன் உரையாற்றிய மேற்படி நிகழ்வில் அமைச்சர்கள் திலக் மாரப்பன மற்றும் வஜிர அபேவர்த்தன ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர். அவர்களும் சிறிலங்கா காவல்துறையிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *