மேலும்

சிறிலங்காவுக்கு ஐரோப்பிய ஒன்றியம் கடும் எச்சரிக்கை

மரண தண்டனையை மீண்டும் நடைமுறைப்படுத்தினால், வணிகச் சலுகைகளை சிறிலங்கா இழக்கும் ஆபத்து ஏற்படும் என்று, ஐரோப்பிய நாடுகளின் தூதுவர்கள் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

போதைப் பொருள் கடத்தல் குற்றவாளிகளுக்கு மரணதண்டனையை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப் போவதாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கடந்தவாரம் அறிவித்திருந்தார்.

இதையடுத்து. மரணதண்டனையை நிறைவேற்றுவதற்கான முயற்சிகள் சிறிலங்கா அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், ஐரோப்பிய நாடுகள் அதற்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.

மரணதண்டனையை நடைமுறைப்படுத்துவதை தடுத்து, மரணதண்டனைக்கு எதிரான சிறிலங்காவின் பாரம்பரியத்தை காப்பாற்றுமாறு சிறிலங்கா அதிபர், மைத்திரிபால சிறிசேனவிடம், ஐரோப்பிய நாடுகளின் தூதுவர்கள் கூட்டாக கோரியுள்ளனர்.

கனடா மற்றும் நோர்வே ஆகிய நாடுகள் இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கைக்கு ஆதரவு தெரிவித்து, ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழு, பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி, நெதர்லாந்து, ருமேனியா, ஆகிய நாடுகளின் தூதுவர்கள் இந்த கூட்டு அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.

சிறிலங்கா அதிபர் தமது முடிவில் இருந்து பின்வாங்குவார் என்று தாம் எதிர்பார்ப்பதாகவும், மரணதண்டனையை நடைமுறைப்படுத்தினால், 28 ஐரோப்பிய நாடுகளுக்கான ஏற்றுமதி முன்னுரிமை வாய்ப்புகளை சிறிலங்கா இழக்க நேரிடும் என்றும், ஐரோப்பிய ஒன்றிய இராஜதந்திரிகள் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை, சிறிலங்கா மரணதண்டனையை நடைமுறைப்படுத்தினால், ஜிஎஸ்பி பிளஸ் வரிச் சலுகையை கொழும்பு  உடனடியாக இழக்கும் என்று ஐரோப்பிய ஒன்றிய இராஜதந்திர வட்டாரங்கள் ஏஎவ்பியிடம் தெரிவித்துள்ளன.

மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தின் மோசமான மனித உரிமைகள் நிலைமையால் ஐரோப்பிய ஒன்றியத்தின், ஜிஎஸ்பி பிளஸ் வரிச் சலுகையை சிறிலங்கா இழக்க நேரிட்டது.

7 ஆண்டுகளுக்குப் பின்னர் கடந்த 2017ஆம் ஆண்டிலேயே இந்தச் சலுகை மீண்டும் வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *