மேலும்

புலிகளை ஆதரிக்கும் பதிவுகளுக்காக மன்னிப்புக் கோரிய கனடாவின் தமிழ் வேட்பாளர்

கனடாவின் ஒன்ராரியோ மாகாணத் தேர்தலில் போட்டியிடும் ஈழத் தமிழரான விஜய் தணிகாசலம், விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக சமூக ஊடகங்களில் தாம் இட்டிருந்த பதிவுகளுக்காக மன்னிப்புக் கோரியுள்ளார் என்று கனேடிய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஒன்ராரியோ மாகாணசபைக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது. இதில், ஒன்ராரியோ கொன்சர்வேட்டிவ் கட்சியின் சார்பில், ஸ்காபரோ ரூஜ் ரிவர் தொகுதியில், விஜய் தணிகாசலம் போட்டியிடுகிறார்.

இவர் கடந்த செவ்வாயன்று கீச்சகத்தில் இட்டுள்ள பதிவு ஒன்றில்,“ கடந்த காலத்தில் தமிழ்ப் புலிகளுடன் தொடர்புடைய விடயங்களைப் பகிர்ந்திருந்தேன். நான் மன்னிப்புக் கோருவதுடன், அத்தகைய பார்வையைக் கொண்டிருக்கவில்லை” என்று குறிப்பிட்டுள்ளார் என கனேடிய ஊடகமான Global News தெரிவித்துள்ளது.

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தொடர்பான, முகநூல் பதிவுகள் குறித்து கொன்சர்வேட்டிவ் கட்சியிடம் Global News எழுப்பிய கேள்வியை அடுத்தே, விஜய் தணிகாசம் இந்த மன்னிப்பைக் கோரியுள்ளார்.

2011ஆம் ஆண்டு, விஜய் தணிகாசம், “எமது தேசியத் தலைவருக்கு 57 ஆவது இனிய பிறந்த நாள் ” என்று குறிப்பிட்டு, சீருடையணிந்த பிரபாகரனின் படத்தை வெளியிட்டிருந்தார்.

கரும்புலிகள் தொடர்பான இன்னொரு பதிவையும் அவர் இட்டிருந்தார்.

“கரும்புலிகள் எமது இனத்தின் பாதுகாப்புக் கவசங்கள்” என்று அதில் அவர் குறிப்பிட்டிருந்தார் என்றும் Global News குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *