மேலும்

வெளிச்சத்துக்கு வந்தது கூட்டு எதிரணியின் பிளவு

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று பிரதி சபாநாயகர் தெரிவின் போது, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் முன்னிறுத்தப்பட்ட சுதர்சினி பெர்னான்டோ புள்ளேக்கு, மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட கூட்டு எதிரணியின் ஒரு பகுதி உறுப்பினர்கள் ஆதரவு அளிக்கவில்லை.

சுதர்சினி பெர்னான்டோ புள்ளேவின் பெயரை பிரதி சபாநாயகர் பதவிக்கு, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திசநாயக்க முன்மொழிந்தார்.

அதனை கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார வழிமொழிந்தார்.

அதேவேளை, ஐதேக தரப்பில் ஆனந்த குமாரசிறியின் பெயர் முன்மொழியப்பட்டதால், இரகசிய வாக்கெடுப்பை நடத்த சபாநாயகர் உத்தரவிட்டார்.

இரகசிய வாக்கெடுப்பு சுமார் 1 மணித்தியாலம் 45 நிமிடங்கள் வரை இடம்பெற்றது.

இதற்கு முன்னதாக உரையாற்றிய கூட்டு எதிரணியின் தலைவரான தினேஸ் குணவர்த்தன, பிரதி சபாநாயகராக சுதர்சினி பெர்னான்டோ புள்ளே தெரிவு செய்யப்படுவதை ஆதரிக்குமாறு கோரியிருந்தார்.

இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்ட போது, கூட்டு எதிரணியின் 11 உறுப்பினர்கள் நாடாளுமன்ற உணவகத்தில் அமர்ந்திருந்தனர்.

இவர்களில் பலர், கேள்வி நேரத்தின் போது சபையில் அமர்ந்திருந்து. கேள்வி எழுப்பியிருந்தனர்.

வாக்கெடுப்பு நடந்த போது, சமல் ராஜபக்ச உள்ளிட்ட ஒரு பகுதி கூட்டு எதிரணி உறுப்பினர்கள் மாத்திரம் வாக்களித்தனர்.

மகிந்த ராஜபக்ச முன்னதாக நாடாளுமன்றத்தில் இருந்த போதும் அவர் வாக்களிக்கவில்லை.

கூட்டு எதிரணியின் 18 நாடாளுமன்ற உறுப்பினர்கள், இந்த வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.

கூட்டு எதிரணிக்கு நாடாளுமன்றத்தில் 54 உறுப்பினர்கள் இருந்தனர். இவர்களில் மூவர் வெளிநாடு சென்றுள்ளனர். நால்வர் நேற்று நாடாளுமன்றத்துக்கு வரவில்லை.

பிரசன்ன ரணதுங்க தலைமையிலான கூட்டு எதிரணியின் ஒரு குழுவினரே நாடாளுமன்ற உணவகத்தில் அமர்ந்திருந்தனர்.

முன்னதாக, ஐதேக வேட்பாளரைத் தோற்கடித்து. சுதர்சினி பெர்னான்டோ புள்ளேவை வெற்றி பெற வைப்பது என்று  மகிந்த ராஜபக்ச தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டிருந்தது என்று தினேஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *