மேலும்

இந்திய, அமெரிக்க தூதுவர்கள் மைத்திரி, ரணிலுடன் அவசர சந்திப்பு

atul-sandhuசிறிலங்காவுக்கான இந்தியத் தூதுவரும், அமெரிக்கத் தூதுவரும், நேற்று அவசரமாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவையும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவையும் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தியுள்ளனர்.

உள்ளூராட்சித் தேர்தலில் கூட்டு அரசின் பங்காளிக் கட்சிகள் பின்னடைவை சந்தித்துள்ளதையடுத்து, கொழும்பு அரசியலில் குழப்பங்கள் தோன்றியுள்ளன.

கூட்டு அரசாங்கம் ஆட்டம் காணும் நிலையை அடைந்துள்ள சூழலில், நேற்றுக்காலை, இந்தியத் தூதுவர் தரன்ஜித் சிங் சந்து, அலரி மாளிகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவையும், அதிபர் செயலகத்தில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவையும் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

இந்தியாவின் புதிய வெளிவிவகாரச் செயலராகப் பொறுப்பேற்றுள்ள, விஜய் கோகலேயை சந்திப்பதற்காக, புதுடெல்லிக்குப் புறப்படுவதற்கு முன்னர், இந்தச் சந்திப்புகள் இடம்பெற்றுள்ளன.

இந்தச் சந்திப்புகள் முன்கூட்டியே திட்டமிடப்பட்டவை என்றும், தற்போதைய அரசியல் சூழ்நிலையுடன் தொடர்புபட்டதல்ல என்றும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்க தூதுவர் அதுல் கெசாப்பும் நேற்று சிறிலங்கா அதிபரையும், பிரதமரையும் தனித்தனியாகச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

இந்த நிலையில், கொழும்பு அரசியலில் ஏற்பட்டுள்ள பதற்றத்தை தணிப்பதில், இராஜதந்திரிகள் ஈடுபட்டுள்ளதாக மற்றொரு ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

எனினும், அமெரிக்க, இந்திய தூதுவர்கள் சிறிலங்காவின் அதிபர் மற்றும் பிரதமரைச் சந்தித்தமை, வழக்கமான சந்திப்புகளே என்றும் சில தகவல்கள் கூறுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *