மேலும்

‘கழுத்தறுக்கும்’ பிரிகேடியருக்கு அபயம் அளித்த சிறிலங்கா அதிபர் – மீண்டும் பணியில் சேர அனுமதி

Brigadier Priyanka Fernandoலண்டனில் உள்ள சிறிலங்கா தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகரான பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவை பணியில் இருந்து இடைநிறுத்த விடுக்கப்பட்ட உத்தரவை ரத்துச் செய்துள்ள சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, அவரை மீண்டும் பணியில் இணைந்து கொள்ளுமாறு அறிவித்துள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை சிறிலங்காவின் சுதந்திர நாளன்று, லண்டனில் உள்ள சிறிலங்கா தூதரகத்தின் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த புலம்பெயர் தமிழர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்திருந்தார், பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ.

இதுதொடர்பான காணொளி ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், பாதுகாப்பு ஆலோசகர் பதவியில் இருந்து பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவை இடைநிறுத்துமாறு நேற்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு உத்தரவிட்டது.

அத்துடன் இதுகுறித்து சிறிலங்காவில் இராணுவ அதிகாரிகளை உள்ளடக்கிய குழு விசாரணையை உடனடியாக ஆரம்பிக்கும் என்றும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்திருந்தது.

Brigadier Priyanka Fernando

இந்த இடைநிறுத்த உத்தரவை இன்று ரத்துச் செய்துள்ள சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, பாதுகாப்பு ஆலோசகர் பணியில் பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ தொடர்ந்து  ஈடுபட அனுமதி அளித்துள்ளார்.

இது தொடர்பாக தகவல் வெளியிட்டுள்ள சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தப்பத்து, “முன்னதாக, இந்தக் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைகள் முடியும் வரை,அவரை இடைநிறுத்தப்பட்டிருந்தார்.

எனினும், அவரை மீண்டும் இன்று தொடக்கம் ஆரம்பிக்குமாறு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன” என்று கூறியுள்ளார்.

அதேவேளை, பாதுகாப்பு ஆலோசகர் அவமதிப்பான நடத்தையில் ஈடுபட்டதாக கூறப்படும் சம்பவம் சார்ந்த காணொளி தொடர்பில், ஒருபக்கச் சார்பான நடவடிக்கை எடுக்க முடியாது என்றும், இந்தக் காணொளி குறித்து துரித விசாரணைகளை முன்னெடுக்குமாறும் சிறிலங்கா அதிபர் அறிவுறுத்தியுள்ளதாக மேஜர் ஜெனரல் ரொஷான் செனிவிரத்ன தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *