மேலும்

பிறநாடுகளின் உள் விவகாரங்களில் அதிகரிக்கும் சீனாவின் தலையீடுகள்

Chinese_flagஅமெரிக்க முறைமையிலான தலையீட்டை சீனா பாரம்பரியமாக மறுத்து வந்துள்ள போதிலும் மியான்மார், சிம்பாப்வே போன்ற நாடுகளில் சீனா தனது ஆழமான பொருளாதாரத் தலையீட்டைக் காண்பிப்பதானது சீனாவை மேலும் உறுதியான பூகோளப் பங்களிப்பை நோக்கி இழுத்துச் செல்வதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

சீனாவின் வெளிநாட்டுக் கோட்பாடானது ‘ஏனைய நாடுகளின் உள்விவகாரங்களில் தலையீடு செய்யாத’ கொள்கையை அடிப்படையாகக் கொண்டுள்ளது.

சீனாவின் வெளிநாட்டுக் கோட்பாடானது உலகின் மிகப் பெரிய இராணுவத்தைக் கொண்டிருப்பதற்கும் உலகின் இரண்டாவது மிகப் பாரிய பொருளாதாரத்தைக் கொண்டிருப்பதற்கும் காரணமாக உள்ளது.

அண்மையில் சீனாவின் இராஜதந்திர நடவடிக்கையில் மாற்றம் ஏற்படுவதற்கும் இது உறுதுணையாக உள்ளது.

குறிப்பாக மியான்மாரிலிருந்து பங்களாதேஸ் வரையான எல்லைப் புறங்களில் வாழும் முஸ்லீம் அகதிகள் தொடர்பான நெருக்கடியைத் தீர்ப்பதற்கான ஒரு மூலோபாயத்தை அமுல்படுத்துவதற்கு சீனா அசாதாரண நகர்வொன்றை அண்மையில் முன்னெடுத்தது.

சிரியா மற்றும் இஸ்ரேலிய-பாலஸ்தீனிய விவகாரங்களில் சீனா பேச்சுவார்த்தைகளை  மேற்கொள்வதற்கு  powder-keg    பிராந்தியத்தில் சீனா தன்னை நிலைநிறுத்தியது. சீனாவின் இந்த நகர்வானது பெற்றோலிய வளத்தைப் பெற்றுக் கொள்ளும் மத்திய கிழக்குத் தொடர்பான சீனாவின் கோட்பாட்டு மாற்றமாக நோக்கப்படுகிறது.

சீனா மிக விரைவில் உலக நாடுகளின் விவகாரங்களில் தலையீடு செய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக லண்டனிலுள்ள கிங்க்ஸ் கல்லூரியின் லவோ சீன நிறுவகத்தின் இயக்குனர் கெரி பிறவுன் தெரிவித்துள்ளார்.

ஆசியா மற்றும் ஐரோப்பாவிற்கு இடையிலான புராதன வர்த்தகப் பாதைகளை பாரிய தொடருந்து மற்றும் கரையோர வலைப்பின்னலின் ஊடாக இணைக்கும் நோக்கில் சீனாவால் ஒரு ட்ரில்லியன் டொலர் பெறுமதியான ஒரு பாதை ஒரு அணை என்கின்ற கட்டுமானத் திட்டம் மேற்கொள்ளப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் சீனா வெளிநாடுகளில் தனது தலையீட்டை அதிகரிக்கத் தொடங்கியது.

சீனா தனது வெளிநாட்டு முதலீடுகளை மேலும் விரிவுபடுத்தும் போது இந்த முதலீடுகளை எவ்வாறு பாதுகாப்பது என்கின்ற கேள்வியையும் கருத்திற் கொண்டே சீனா செயற்படுவதாக சீனாவின் அரசியல் விமர்சகரான சென் டயோயின் தெரிவித்தார்.

chinese-navy-aid (3)

சீன இராணுவத்தை முதல் தரம் மிக்க இராணுவமாக மாற்றுவதுடன் சீனாவை பூகோளத்தின் வல்லாதிக்கம் மிக்க நாடாக மாற்றும் இலக்கைக் கொண்டுள்ளதாக கடந்த மாதம் இடம்பெற்ற கம்யூனிச கட்சியின் மாநாட்டின் போது சீன அதிபர் சி ஜின்பிங்க் தெரிவித்தார்.

அனைத்துலக ஒழுங்கை நிலைநாட்டுவதாகவும் சீன அதிபர் தெரிவித்திருந்தார். அத்துடன் அமெரிக்காவைப் போல் சீனாவும் பல்வேறு முதன்மைப் பணிகளில் ஈடுபடுவதாகவும் இவர் உறுதிப்படுத்தியிருந்தார்.

சீனாவானது வெளிப்படையாக தனது தலையிடாக் கொள்கையை நிராகரிக்காத போதிலும், உலக நாடுகளின் விவகாரங்களில் நடுநிலையுடன் கூடிய தலையீட்டை சீனா விரும்புவதாகவும் அரசியல் விமர்சகர் சென் தெரிவித்தார்.

‘சீனாவின் தேசிய நலன்கள் வெளிநாடுகளில் பாதிப்படைந்தாலும் கூட, தனது முதலீட்டையும் புலம்பெயர்ந்துள்ள தனது குடிமக்களையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பை சீனா கொண்டுள்ளது’ என சென் தெரிவித்தார்.

கடந்த ஓகஸ்ட் மாதம் டிஜிபோற்றியில் சீனா தனது முதலாவது வெளிநாட்டு இராணுவத் தளத்தை உருவாக்கியதன் மூலம் உலக அரங்கில் சீனா தனது இராணுவப் பலத்தையும் பலப்படுத்தத் தொடங்கியுள்ளது. அத்துடன் சர்ச்சைகள் நிறைந்த தென் சீனக் கடலில் சீனா இராணுவமயப்படுத்தப்பட்ட தீவுகளை அமைத்து வருகிறது.

சீனா நேரடி இராணுவத் தலையீட்டை இன்னமும் மேற்கொள்ளாவிட்டாலும் கூட, சீனாவானது தார்மீக அரசியலைக் கடைப்பிடிக்க விரும்புகின்ற போதிலும் வெளிநாடுகளின் அரசியலிற்குள் சிக்க வேண்டிய நிலை காணப்படுகிறது.

சிம்பாவேயின் இராணுவப் படையினர் தமது நாட்டை தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கு சில நாட்களின் முன்னர் சிம்பாவேயின் இராணுவத் தளபதி ஜெனரல் கொன்ஸ்ரன்ரைன் சிவென்க சீனாவிற்கு உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொண்டிருந்தமையானது சிம்பாவே இராணுவத்தின் தீர்மானத்தில் சீனா பங்களிப்புச் செய்துள்ளது என்கின்ற சந்தேகத்தை ஏற்படுத்தியது.

ரொபேர்ட் முகாபேயுடன் சீனாவானது நீண்ட கால உறவைப் பேணிவருவதுடன் இந்த நாட்டைப் பாதுகாப்பதற்காக கணிசமான முதலீடுகளையும் மேற்கொண்டுள்ளது.  கம்போடியாவில் சீனா பாரிய வெளிநாட்டு முதலீட்டை மேற்கொண்டது. 2016 முடிவில் சீனாவால் கம்போடியாவில் 11.2 பில்லியன் டொலர் முதலீடு மேற்கொள்ளப்பட்டது.

ஜனநாயகம் மற்றும் ஜனநாயக நகர்வுகளை இல்லாதொழிக்கின்ற அரசியல் நகர்வுகளில் சீனப் பிரதமர் ஹன் சென் ஈடுபடுவதற்கு சீனாவின் முதலீடுகளில் தங்கியுள்ள வறுமைக்கோட்டிற்குட்பட்ட நாடுகள் உந்துதல் அளிப்பதாக  அமெரிக்காவைத் தளமாகக் கொண்டியங்கும் ஸ்ரிம்சன் மையத்தின் தென்கிழக்காசிய நிகழ்ச்சித் திட்டத்தின் இயக்குனர் பிரியன் ஐலர் தெரிவித்துள்ளார்.

சீனாவானது கம்போடியா மீது பொருளாதாரச் செல்வாக்கைத் தொடர்ந்தும் செலுத்துவதால் கம்போடியா எந்தவொரு எதிர்க்கட்சியுமின்றி அதிகாரத்துவ நாடாகவே விளங்கும் என பிரியன் ஐலர் மேலும் குறிப்பிட்டார். மியான்மாரின் றக்கினே மாநிலத்தைச் சேர்ந்த சிறுபான்மை றோகின்ய முஸ்லீம்கள் மீது தொடரப்படும் யுத்தத்தால் மியான்மார் உலக நாடுகளின் சீற்றத்திற்கு ஆளாகியுள்ளது.

றோகின்ய முஸ்லீம்கள் மீதான யுத்தத்தை ஐக்கிய நாடுகள் சபை ‘இனச்சுத்திகரிப்பு’ என அறிவித்துள்ளது. இவ்வாறான இனச்சுத்திகரிப்பு இடம்பெறுகின்ற போதிலும் சீனாவிடமிருந்து மியான்மார் தொடர்ந்தும் பொருளாதார உதவிகளைப் பெற்றுவருகிறது.

கடந்த ஏப்ரல் மாதம் 2.45 பில்லியன் டொலர் பெறுமதியான குழாய் சீனாவால் மியான்மாரில் திறந்து வைக்கப்பட்டது. இதுமட்டுமல்லாது மியான்மாரின் துறைமுகங்கள், பெற்றோலிய மற்றும் எரிவாயுத் திட்டங்களுக்காக சீனா அதிகளவில் முதலீடு செய்துள்ளது.

மியான்மாரில் வன்முறைகளை முடிவிற்குக் கொண்டு வருவதற்கான ஐ.நா பாதுகாப்புச் சபையின் தீர்மான வரைபிற்கு சீனா மிகப் பலத்த எதிர்ப்பைக் காண்பித்ததால் இது இம்மாதத்தின் ஆரம்பத்தில் கைவிடப்பட்டது.

இதற்குப் பதிலாக மியான்மாரில் போர்நிறுத்தம் ஒன்றைக் கொண்டு வருவதற்கும் அகதிகளை மீளவும் நாட்டிற்கு அழைப்பதற்கும், வறுமையை ஒழிப்பதற்குமான திட்டப் பரிந்துரை ஒன்றை சீனா, ஐ.நா பாதுகாப்புச் சபையிடம் கையளித்தது.

‘தற்போது அனைத்து விடயங்களும் சீனாவுடன் தொடர்புபடுகிறது. அதாவது சிம்பாப்வே, பர்மா, சிறிலங்கா, நியூசிலாந்தின் அரசியல் விவகாரங்கள் என அனைத்திலும் சீனா தலையீடு செய்கிறது. இது சீனாவின் வெளியுறவுக் கோட்பாடு தொடர்பில் ஏற்பட்ட அசாதாரண மாற்றமாகும்’ என பிறவுன் குறிப்பிட்டார்.

‘சீனாவின் தலையீடாக் கொள்கையானது தற்போது சாத்தியமற்ற ஒன்றாக மாறி வருகிறது. சீனா உலக நாடுகளின் உள்விவகாரங்களில் தலையீடு செய்யாது தனித்துச் செயற்பட வேண்டும் என ஒதுங்கினாலும் கூட, பிரச்சினைகள் சீனாவைத் தேடிச் செல்லும் நிலை காணப்படுவதால் இதனை சீனா தீர்க்க வேண்டிய நிலையிலுள்ளது’ என இயக்குனர் கெரி பிறவுன் குறிப்பிட்டுள்ளார்.

வழிமூலம்        – AFP
மொழியாக்கம் – நித்தியபாரதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *