அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து கலந்துரையாட சிறிலங்கா வருகிறது இந்திய குழு
மட்டக்களப்பில் 32 சுற்றுலா விடுதிகள் அமைக்கப்படவுள்ளதாகவும் இதன் மூலம், 10 ஆயிரம் பேருக்கு நேரடி வேலைவாய்ப்புக் கிடைக்கும் என்றும், சிறிலங்காவின் உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
“முன்னைய ஆட்சிக்காலத்தை விட இப்போது முதலீட்டாளர்களை சிறிலங்கா அதிகம் கவர்ந்து வருகிறது.
ஜப்பானிய உதவியுடன் திருகோணமலை அபிவிருத்தி செய்யப்படவுள்ளது. அம்பாந்தோட்டை அபிவிருத்தித் திட்டங்களுக்கு சீனா உதவவுள்ளது.
நீண்டகால குத்தகை அடிப்படையில் மத்தல விமான நிலையத்தை இந்தியா அபிவிருத்தி செய்யவுள்ளது.
காணிகள் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு விற்கப்படாது. மத்தல விமான நிலைய திட்டம் நீண்ட கால குத்தகை அடிப்படையிலேயே வழங்கப்படவுள்ளது. உடன்படிக்கை முடிந்ததும், காணிகள் திரும்ப ஒப்படைக்கப்படும்.
எதிர்கால அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து கலந்துரையாடுவதற்கு, இந்தியக் குழு விரைவில் சிறிலங்கா வரவுள்ளது. நெடுஞ்சாலைத் திட்டங்களில் ஈடுபட இந்தியா விருப்பம் வெளியிட்டுள்ளது.
வடக்குகிழக்கு வீதி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ், யாழ்ப்பாணம்- மன்னார், மன்னார்- வவுனியா, வவுனியா- திருகோணமலை, திருகோணமலை- யாழ்ப்பாணம் வீதிகள் அபிவிருத்தி செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.