மேலும்

உள்ளூராட்சித் தேர்தலில் மீண்டும் இழுபறி

Srilanka-Electionநுவரெலிய மாவட்டத்தில் புதிய பிரதேசசபையை உருவாக்குவதில் ஏற்பட்டுள்ள இழுபறியினால், உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

உள்ளூராட்சித் தேர்தலை நடத்தும் வகையில், உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்களின் எண்ணிக்கையை வரையறை செய்யும் வர்த்தமானி அறிவித்தல் நேற்று வெளியிடப்படும் என்று சிறிலங்கா அரசாங்கம் கூறியிருந்தது.

இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்ட பின்னரே தேர்தல் ஆணைக்குழுவினால் வேட்புமனுக்களைக் கோர முடியும்.

இந்த நிலையில், உள்ளூராட்சி சபை உறுப்பினர்களின் எண்ணிக்கை விபரங்களை உள்ளடக்கிய சிறப்பு வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதில் இழுபறி ஏற்பட்டுள்ளது.

நுவரெலிய மாவட்டத்தில் உள்ள அம்பேகமுக பிரதேசசபையை பிரிக்க வேண்டும் என்று மனோ கணேசன் தலைமையிலான மலையக கட்சிகளின் கூட்டமைப்பு வலியுறுத்தி வருகிறது.

சிறிலங்கா அரசாங்கம் இதற்கு இணக்கம் வெளியிட்டிருந்தது. இந்த நிலையில் இந்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் வர்த்தமானியை வெளியிடக் கூடாது என்று சிறிலங்கா அரசாங்கத்திடம் அமைச்சர் மனோ கணேசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள உள்ளூராட்சி மாகாணசபைகள் அமைச்சின் செயலர் கமல் பத்மசிறி,

“நுவரெலிய மாவட்டத்தில் அம்பேகமுவ பிரதேச சபையை உருவாக்குவது தொடர்பாக அரசியல் கட்சிகளிடம் இருந்து கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.

இதனை நாங்கள் கவனத்தில் எடுத்துள்ளோம். பல பரிந்துரைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.

நுவரெலிய மாவட்டத்தில் அம்பேகமுவ, ஒரு இலட்சத்துக்கும் அதிகமான வாக்காளர்களைக் கொண்ட பிரதேசமாகும். அதிகளவு மக்கள் தொகை கொண்ட பாரிய தனியொரு பிரதேச செயலர் பிரிவு.

எனவே இதனைப் பிரிக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகள் கோருகின்றன. அதனைக் கவனத்தில் கொண்டுள்ளோம். வர்த்தமானியில் திருத்தங்கள் செய்வதனால் தாமதம் ஏற்பட்டுள்ளது.

வழக்கமாக உள்ளூராட்சி சபைகளின் வாக்களிப்பு பிரிவு ஒன்றில் சுமார் 50 ஆயிரம் வாக்காளர்களே இருப்பர். ஆனால், அம்பேகமுவவில், 2012 சனத்தொகைக் கணக்கெடுப்பின் படி 205,723 பேர் வசிக்கின்றனர். என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *