மேலும்

மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேறியது மாகாணசபை தேர்தல்கள் திருத்தச்சட்டம்

parliamentமாகாணசபைத் தேர்தல்கள் திருத்தச்சட்டம் நேற்று சிறிலங்கா நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

1988ஆம் ஆண்டின் 2ஆம் இலக்க மாகாணசபைத் தேர்தல்கள் சட்டத்தில் திருத்தம் செய்யும் வகையிலான வரைவு நேற்று சிறிலங்கா நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

மாகாணசபைத் தேர்தல்களில் போட்டியிடும் அரசியல் கட்சிகள், சுயேட்சைக் குழுக்கள் தமது வேட்பாளர் பட்டியலில் குறைந்தபட்சம் 30 வீதத்தை பெண்களுக்கு ஒதுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில், இந்த திருத்தச் சட்ட வரைவு அமைந்திருந்தது.

20 ஆவது திருத்தச்சட்ட வரைவுக்கு பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை அடுத்து, சிறிலங்கா அரசாங்கம் நேற்று நாடாளுமன்றத்தில் மாகாணசபைத் தேர்தல்கள் திருத்தச்சட்ட வரைவை முன்வைத்தது.

இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்த நிலையில் சட்டமா அதிபரின் அறிவுரை பெறப்பட்டு பிற்பகலில் அமர்வு ஆரம்பமானது.

இந்த திருத்தச்சட்ட வரைவை நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்ற வேண்டும் என்று சட்டமா அதிபர் ஆலோசனை கூறியிருந்தார்.

இதையடுத்து, இரண்டாவது வாசிப்பின் மீது நேற்றிரவு நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், மாகாணசபைத் தேர்தல்கள் திருத்தச்சட்ட வரைவுக்கு ஆதரவாக, 157 வாக்குகள் அளிக்கப்பட்டன. எதிராக 44 வாக்குகள் அளிக்கப்பட்டன. ஒருவர் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.

அரசாங்கத் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜேவிபி, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் உறுப்பினர்களும் இதற்கு ஆதரவாக வாக்களித்தனர்.

தொடர்ந்து மூன்றாவது வாசிப்பின் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்ட போது, 159 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தனர். 37 உறுப்பினர்கள் எதிராக வாக்களித்தனர். இதன் மூலம் 122 மேலதிக வாக்குகளால் மாகாணசபைகள் திருத்தச்சட்ட நிறைவேற்றப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *