மேலும்

இந்தியா எமது மூத்த சகோதரன் என்கிறார் அமரபுர பீடத்தின் மகாநாயக்கர்

Kotugoda Dhammawasa thero -amarapuraதெற்காசியக் குடும்பத்தில் இந்தியா எமது மூத்த சகோதரன் போல, இருக்கிறது என்று சிறிலங்காவின், இரண்டாவது சக்திவாய்ந்த பௌத்த பீடமான அமரபுர மகாநிக்காயவின் மகாநாயக்கரான வண. கொட்டுகொட தம்மவன்ச தேரர் தெரிவித்துள்ளார்.

இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது-

“பாகிஸ்தான், மாலைதீவு, சிறிலங்கா, நேபாளம் போன்ற நாடுகளை உள்ளடக்கிய   தெற்காசியக் குடும்பத்தில் இந்தியா எமது மூத்த சகோதரன். அவர்கள் பரஸ்பர புரிந்துணர்வின் அடிப்படையில் அனைவரும் ஒன்றாக பணியாற்ற வேண்டும்.

பிராந்தியத்தில் அமைதியை கட்டியெழுப்ப இந்தியாவுடனும் பாகிஸ்தானுடனும், இணைந்து மிகச் சிறந்த பணியாற்ற சிறிலங்கா முயற்சிக்க வேண்டும்.

இந்திய- சிறிலங்கா உறவுகள் மிகமிக ப் பழைமை வாய்ந்தது. வரலாற்று ரீதியானது. இந்த உறவுகளை நாங்கள் சேதப்படுத்துவதற்கு எதையும் செய்து விடக் கூடாது.

வடஇந்திய இளவரசனான விஜயன் தான், சிங்கள நாகரீகத்தை உருவாக்கினார் என்பதை புதிய தலைமுறையினர் நினைவில் கொள்ள வேண்டும்.

அதுபோல தமிழர்களும் இந்தியாவில் இருந்தே வந்தனர். முஸ்லிம்களும் இந்தியா ஊடாகவே வியாபார நோக்கமாக இலங்கைத் தீவுக்கு வந்தனர்.

எமது தேசிய மதமான பௌத்தம் இந்தியாவில் இருந்தே வந்தது. எமது கலாசாரம், எமது எழுத்துவடிவங்கள், எமது பெயர்கள் கூட இந்தியாவில் இருந்தே வந்தன.

இந்தக் காரணங்களால், இந்தியா இல்லாமல் நிற்கவோ,  அல்லது அதன் உறவுகளை காயப்படுத்தவோ முடியாது. எனது ஆரம்ப காலத்தை நினைத்துப் பார்க்கிறேன், வடக்கில் உள்ள சிறுவர்கள் படம் பார்ப்பதற்கு சென்னைக்கு நீந்திச் சென்றார்கள்.

சீனாவுடன் நாங்கள் நீண்ட உறவுகளைக் கொண்டிருக்கிறோம். இந்தியா எமது உறவினராக இருக்கும் போது, சீனா ஒரு நண்பனாக இருக்கிறது. இரண்டு சமூகங்களுக்கும் இடையில் பௌத்தம் மூலம்,  தொடர்புகள் ஆரம்பித்தன.

பொருளாதார ரீதியாக வளர்ச்சி பெற்று உலகின் செல்வந்த நாடுகளில் ஒன்றாக வளர்ந்திருக்கிறது.

கடந்த காலத்தில் எமக்கு உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்ட போது, எம்மை மீட்க வந்தார்கள். இந்தியாவினால் அப்போது அதிகம் செய்ய முடியாதிருந்தது.

லருங் காரில் பௌத்த இடங்களை அழித்த சீன அதிகாரிகளை நான் கண்டிக்கிறேன். ஆனால்,  பெரும்பாலான இலங்கையர்கள் சீனாவை நண்பனாக உணர்கின்றனர்.

அவர்கள் எமது நண்பனாக இருந்தாலும், அம்பாந்தோட்டை துறைமுக நிலத்தை சீனாவுக்கு வழங்குவதை நாம் எதிர்க்கிறோம்.

நாம் மட்டுமல்ல ஒட்டுமொத்த நாடுமே, அரசாங்கத்தின் இந்த முடிவை எதிர்க்கிறது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *