மேலும்

அஸ்கிரிய பீடத்தில் சங்கடமான நிலையை எதிர்கொண்ட விக்னேஸ்வரன் – ஏமாற்றத்துடன் திரும்பினார்

CM-WIGNESWARANஅஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க தேரரை தனியாகச் சந்திக்கச் சென்ற வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சங்கடமான நிலையை எதிர்கொண்டு, அதிருப்தியுடனும் ஏமாற்றத்துடனும் திரும்பும் நிலை ஏற்பட்டது.

நேற்றுமுன்தினம் கண்டியில் மல்வத்த பீடத்தின் மகாநாயக்க தேரரைத் தனியாகச் சந்தித்து மனம்விட்டுப் பேசிய வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், அந்தச் சந்திப்புக் குறித்து திருப்தி வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையில், நேற்று மாலை அஸ்கிரிய பீட மகாநாயக்கரைச் சந்திக்கச் சென்றிருந்தார் முதலமைச்சர் விக்னேஸ்வரன்.

தனியாக மகாநாயக்கரைச் சந்திக்கும் எண்ணத்துடன் சென்றிருந்த அவரை, மகாநாயக்கருடன் அஸ்கிரிய பீடத்தின் 12 தேரர்கள், இணைந்தே சந்தித்தனர்.

மேலாதிக்க நிலையில் இருந்து கொண்டு, அவர்கள் இறுக்கமான அரசியல் நிலைப்பாடுகளை வெளிப்படுத்தி, முதலமைச்சரை ஏமாற்றத்துடனும், அதிருப்தியுடனும் திரும்பும் நிலையை ஏற்படுத்தியுள்ளனர்.

இந்தச் சந்திப்புத் தொடர்பாக கொழும்பு நாளிதழ் ஒன்றுக்கு தகவல் வெளியிட்டுள்ள முதலமைச்சர் விக்னேஸ்வரன்,

“கண்டி அஸ்கிரிய பீடத்தின் தேரர்களை நல்லெண்ண அடிப்படையில் நாம் சந்தித்திருந்தோம்.

நேற்று முன்தினம் நாம் மல்வத்த மாநாயக்க தேரரை சந்தித்தோம். அவர் என்னுடன் தனிப்பட்ட பேச்சுக்களை முன்னெடுத்திருந்தார். மிகவும் புரிந்துணர்வு ரீதியில் நல்லதொரு பேச்சுவார்த்தையாக இது அமைந்தது.

ஆனால் அஸ்கிரிய பீட தேரருடன் சந்திப்பானது சற்று மாறுபட்ட சங்கடத்துக்குறிய வகையில் அமைந்தது.  அவருடன் நான் தனிப்பட்ட ரீதியில் கருத்துக்களை பகிரவே விரும்பினேன்.

ஆனால் இந்த சந்திப்பில் மாநாயக்க தேரருடன் மேலும் 12 தேரர்களும் கலந்துகொண்டனர். அவர்களின் பிரித் பிரார்த்தனைகளை செய்த பின்னரே என்னுடன் பேச்சுக்கு வந்தனர்.

ஏற்கனவே அவர்கள் இருந்த நிலைப்பாட்டில் இருந்தே என்னுடன் பேச்சுக்கு வந்தார்களே தவிர எனது நிலைப்பாட்டை முழுமையாக செவிமடுக்கும் நோக்கம் இருக்கவில்லை என நான் உணர்ந்தேன் .

இவர்கள் என்ன நிலைப்பாட்டில் இருந்து என்னுடன் பேசினார்கள் என்பதை என்னால் உணர்ந்து கொள்ள முடியும். ஆனால் எனது தரப்பின் காரணிகளை முன்வைத்தேன்.

குறிப்பாக எமது உரிமைகளை நாம் பெற்றுக்கொள்ள போராடுவது குறித்தும், எம்மிடம் பிரிவினைவாதம் , மதவாதம், இனவாத கொள்கைகள் இல்லை என்பதையும் கூறினேன்.

எமது பிரச்சினைகளுக்கு சமஷ்டி முறையிலான தீர்வு மட்டுமே சாதகமாக அமையும். அரசியல் தீர்வு குறித்து நாம் மிகவும் ஆழமான எதிர்பார்ப்பை கொண்டுள்ளோம் என்பதையும் தெரிவித்தோம்.

நாட்டில் சிங்களவர்கள் பெரும்பான்மையாக இருந்த போதிலும் வடக்கு கிழக்கில் தமிழ் மக்களே பெரும்பான்மையான மக்களாக உள்ளனர். எனவே எமது சுய கௌரவம், அடையாளத்தை பாதுகாக்க நாம் முயற்சிக்கின்றோம். சிங்கள மேலாதிக்கம் எம்மத்தியில் திணிக்கப்படக் கூடாது என்பதை நான் தெரிவித்தேன்.

அதேபோல் அரசியலமைப்பு விடயத்தில் இவர்கள் மத்தியில் மாற்றுக் கருத்துக்கள் உள்ளன. நாடு பிரியும் வகையில் அல்லது ஒருசிலரது தேவைக்கு அமைய புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படுவதாக கூறுகின்றனர்.

மாறுபட்ட கருத்தில் இவர்கள் இருப்பதால் எமது தரப்பு நியாயங்களை நாம் முன்வைக்க கிடைத்தது.

எனினும் இவர்கள் கூறும் அனைத்தையும் எம்மால் ஏற்றுகொள்ள முடியாது. ஒருசில விடயங்களில் எம்மால் இணக்கம் தெரிவிக்க முடியும்.

ஆனால் வடக்கு மற்றும் தமிழர்கள் விடயத்திலும் சமஷ்டி விடயத்திலும் இவர்களின் நிலைப்பாடு மாறுபட்ட ஒன்றாகும். இந்த பேச்சு முன்னெடுக்கப்பட்டமையை மிகவும் ஆரோக்கியமான ஒன்றாக நாம் கருதுகின்றோம்.

தொடர்ந்து வரும் காலங்களில் தமிழ் மக்களின் உரிமைகளை வென்றுகொள்ள இவர்களின் தலையீடுகள் மற்றும் நடுநிலைத்தன்மை கிடைக்கும் என நம்புகின்றோம்.  நல்ல மாற்றங்களை எதிர்காலத்தில் உருவாக்க வாய்ப்புகள் உள்ளன” என்று தெரிவித்துள்ளார்.

செய்தி உள்ளடக்கம் – வீரகேசரி

ஒரு கருத்து “அஸ்கிரிய பீடத்தில் சங்கடமான நிலையை எதிர்கொண்ட விக்னேஸ்வரன் – ஏமாற்றத்துடன் திரும்பினார்”

  1. Arinesaratnam Gowrikanathan says:

    பௌத்த மதபீடங்களில் இருந்து நடுநிலைத்தன்மையை எதிர்பார்க்கிறார். செல்வநாயகத்தின் அனுபவத்தை பார்க்கவில்லைப்போலும். அரசாங்கத்திடம் அடுத்த கட்டத் சமரசத்துக்குத் தயாராகிறார் போலும். மதகுருமாரைத் திருப்திபடுத்தப் பாருங்கள் என சிறிசேன கூறியிருப்பார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *