மேலும்

வருண ரோந்துக் கப்பலை சிறிலங்காவுக்கு வழங்கியது இந்தியா

India hands over OPV to Sri Lankaஇந்திய கடலோரக் காவல்படை நேற்று வருண என்ற ஆழ்கடல் ரோந்துக் கப்பலை சிறிலங்கா கடலோரக் காவல்படையிடம் அதிகாரபூர்வமாக கையளித்தது.

கொச்சியில் உள்ள கடற்படைத் தளத்தில் நேற்று நடந்த நிகழ்வில், இந்திய கடலோரக் காவல்படையின்  பணிப்பாளர் ராஜேந்திர சிங், இந்தக் கப்பலை, சிறிலங்கா கடலோரக் காவல்படையின் பணிப்பாளர் றியர் அட்மிரல் சமந்த விமலதுங்கவிடம் கையளித்தார்.

இந்த நிகழ்வில் சிறிலங்கா கடற்படையின் தலைமை அதிகாரி றியர் அட்மிரல் ரணசிங்கவும் கலந்து கொண்டார்.

பயிற்சி மற்றும் கண்காணிப்பு பயன்பாட்டுக்காக இந்த கப்பலை சிறிலங்காவுக்கு வழங்கியுள்ளதாக இந்திய கடலோரக் காவல்படையின் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

India hands over OPV to Sri Lanka

சிறிலங்கா கடற்படைக்கு இந்தியக் கடலோரக் காவல்படையின் பயன்பாட்டில் இருந்த வரஹா என்ற ஆழ்கடல் ரோந்துக் கப்பல் 2006ஆம் ஆண்டு ஏப்ரல் மாதமும், விக்ரஹா என்ற ஆழ்கடல் ரோந்துக் கப்பல் 2008ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதமும் இந்தியாவினால் வழங்கப்பட்டது.

இந்திய கடலோரக் காவல் படையிடம் இருந்து பெற்றுள்ள வருண என்ற ஆழ்கடல் ரோந்துப் படகிற்கு சிறிலங்கா கடலோரக் காவல் படை, SLCG-60 என்று பெயரிட்டுள்ளது. இதன் கட்டளை அதிகாரியாக கப்டன் நெவில் அமர உபயசீலி நியமிக்கப்பட்டுள்ளார்.

இது சிறிலங்காவுக்கு புறப்பட முன்னர், இதனை இயக்கும் செயல்முறைகள் தொடர்பாக சிறிலங்கா கடலோர காவல்படை மாலுமிகளுக்கு பயிற்சிகள் அளிக்கப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *