மேலும்

டிசெம்பருக்குள் புதிய அரசியலமைப்பு – இந்தியா, அமெரிக்காவிடம் சிறிலங்கா அதிபர் வாக்குறுதி

Alice Wells met maithri (1)இந்த ஆண்டு இறுதிக்குள், புதிய அரசியலமைப்பை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமெரிக்காவிடமும், இந்தியாவிடமும், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன வாக்குறுதி அளித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பதில் உதவிச் செயலர் அலிஸ் வெல்ஸ் மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர்   சுஸ்மா ஸ்வராஜ் ஆகியோருடனான சந்திப்புகளின் போதே, சிறிலங்கா அதிபர் இந்த வாக்குறுதியை அளித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளை, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பதில் உதவிச் செயலர் அலிஸ் வெல்ஸ் நேற்றுக்காலை சந்தித்துப் பேசியிருந்தார்.

Alice Wells met maithri (1)

இதன்போது, “புதிய அரசியலமைப்பின் ஊடாகவே தமிழ் மக்களின் உரிமைகள் உறுதிப்படுத்தப்படும் என்று நம்பிக்கை கொண்டிருக்கிறோம்.

ஒருமித்த நாட்டிற்குள் பகிரப்பட்ட இறையாண்மையின் அடிப்படையில் அதிகாரங்கள் பகிரப்பட்ட வேண்டும்.

தமிழ் மக்கள் சமஉரிமை கொண்ட குடிமக்களாக  கௌரவமாகவும் பாதுகாப்பாகவும் வழ்வது புதிய அரசியலமைப்பின் ஊடாக உறுதிப்படுத்தப்பட வேண்டியது அவசியம்.

புதிய அரசியலமைப்பை உருவாக்கும் பணிகளுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முழு ஒத்துழைப்புக்களை வழங்கி வருகிறது.

இருப்பினும் பிரதான கட்சிகள் இந்த விடயத்தில் ஒருமித்த பயணத்தை மேற்கொள்வதில் சில இடர்பாடுகள் காணப்படுகின்றன.

இதனால் கடந்த ஆண்டு டிசம்பர் 10ஆம் நாள் அரசியலமைப்பு பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டிருக்க வேண்டிய புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கையின் வரைவு இன்னமும் பூர்த்தி செய்யப்படாமல், தாமதமடைந்துள்ளது.

சிறிலங்கா அரசாங்கம் காலத்தை இழுத்தடிப்பதால், தமிழ் மக்களே பெரிதும் பாதிப்புக்குள்ளாகின்றார்கள். எனவே, பிரதான கட்சிகள் இரண்டும் புதிய அரசியலமைப்பை உருவாக்கும் செயற்பாட்டில் அதிகளவு கரிசனையைக் காட்ட வேண்டும்.

அதற்குரிய அழுத்தங்களை சிறிலங்கா அரசாங்கத்துக்கு அமெரிக்கா கொடுக்க வேண்டும்” என்று என இரா.சம்பந்தன் கேட்டுக் கொண்டார்.

இதற்குப் பதிலளித்த அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பதில் உதவிச் செயலர் அலிஸ் வெல்ஸ், “சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை நான் சந்த்திருந்தேன். அவர் இந்த ஆண்டுஇறுதிக்குள் புதிய அரசியலமைப்பை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுப்பதாக கூறினார் என்று குறிப்பிட்டார்.

இதேவேளை,  இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா ஸ்வராஜை,  தமிழ்த் தேசியக் கூட்மைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நேற்று சந்தித்து உரையாடிய போதும், புதிய அரசியலமைப்பு உருவாக்கப் பணிகள் தாமதிக்கப்படுவது குறித்தும், இந்த விடயத்தில்  இந்தியா அக்கறை செலுத்தி, சிறிலங்காவுக்கு அழுத்தங்களை கொடுக்க  வேண்டும் என்றும் கோரியிருந்தார்.

maithri-sushma (1)

இதன்போது, இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா ஸ்வராஜ், “புதிய அரசியலமைப்பு விரைவாக உருவாக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே நானும் இருக்கின்றேன்.

அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்பதே எமது விருப்பம்.  வீணாக காலம் தாழ்த்தப்பட்டுக்கொண்டிருக்கின்றது என்பதை நாமும் அவதானித்திருந்தோம்.

இது குறித்து சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்த போதும் கவனம் செலுத்தியிருந்தேன். அவர் அது குறித்து சாதகமான பதிலை அளித்தார்.

அதனை தங்களிடம்  கூறுவதற்காகவே, இந்த சந்திப்புக்கான ஏற்பாட்டைச் செய்திருந்தேன் என்று தெரிவித்துள்ளார் என்று கொழும்பு நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *