மேலும்

சரத் பொன்சேகா வழங்கிய ஆவணத்தை வைத்து மிரட்டுகிறார் ஜெனரல் ஜயசூரிய

general jegath-jeyasooryaசிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதியும், அமைச்சருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா சுமத்திய போர்க்குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ள சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஜெகத் ஜயசூரிய, போர் நடவடிக்கைகளில் தனக்கு எந்தத் தொடர்பும் இருக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியில் அவர், “போரின் இறுதிக்கட்டத்தில் இராணுவத் தளபதியாக இருந்த சரத் பொன்சேகா அனுப்பிய அதிகாரபூர்வ ஆவணம் என்னிடம் உள்ளது. அதில், இராணுவ நடவடிக்கைகளுக்கு நான் பொறுப்பு அல்ல என்று கூறப்பட்டுள்ளது.

அத்துடன், போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு எல்லாம் செய்தது தானே என்றும் சரத் பொன்சேகா கூறியிருக்கிறார். எனவே அவர் தான் போர்க்குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்க வேண்டும். என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அந்தச் செவ்வியில் ஜெனரல் ஜயசூரிய மேலும் கூறியிருப்பதாவது-

“ பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியாக இருந்த போது பிரேசிலுக்கான தூதுவராக தெரிவு செய்யப்பட்டேன். இரண்டு ஆண்டு பதவிக்காலத்துக்காக, 2015 ஓகஸ்ட் மாதம், தூதுவராக பொறுப்பேற்றுக் கொண்டேன்.

எனது பதவிக்காலம் முடிவடைகிறது, என்றும், தூதுவராக மீண்டும் நியமனம் வழங்குவதாக இருந்தால் ஆசிய நாடு ஒன்றில் பதவி வழங்குமாறும் வெளிவிவகாரச்செயலர் எசல வீரக்கோனுக்கு நான் கடந்த ஜூன் மாதம் கடிதம் எழுதினேன்.

அதற்கு ஜூலை 10ஆம் நாள் பதில் அனுப்பப்பட்டது. பதவிக்காலம் முடிவடைவது அங்கீகரிக்கப்பட்டுள்ளதாகவும், ஓகஸ்ட் 31ஆம் நாளுக்கு முன் நாடு திரும்புமாறும் அதில் கேட்கப்பட்டிருந்தது.

கடந்த ஓகஸ்ட் 7ஆம் நாள் எனது பொதிகளை அனுப்பினேன். 27ஆம் நாள் நான் பிரேசிலியாவில் இருந்து புறப்பட்டேன். சாவோ போலோ, டுபாய் வழியாக, ஓகஸ்ட் 29ஆம் நாள் கொழும்பு வந்து சேர்ந்தேன்.

பிரேசிலில் எனக்கு எதிரான வழக்கு தொடர்பாக நான் அறிந்திருக்கவில்லை. நான் சிறிலங்கா வந்து சேர்ந்த பின்னர், ஓகஸ்ட் 29ஆம் நாள் காலையில் பிரேசிலில் உள்ள தூதரக பதில் தூதுவர் தொடர்பு கொண்டு செய்தியை கூறினார். ஊடகங்கள் தூதரகத்துடன் தொடர்பு கொண்டு கருத்துக்களை கேட்பதாக அவர் தெரிவித்தார்.

அத்துடன், ஊடகங்களில் கூறப்பட்டது போல, நீதிமன்றத்தில் எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. இந்த குற்றச்சாட்டு ஆவணத்தை தயாரித்த சட்டவாளர், அதனை பிரேசில் சமஷ்டி காவல்துறையில் கையளித்துள்ளார். அதில் சிறிலங்கா தூதுவருக்கு எதிராக விசாரணை நடத்துமாறும்,  தூதுவருக்கான இராஜதந்திர விலக்குரிமையை அகற்றி, விரும்பத்தகாத நபராக அறிவிக்குமாறும் கோரப்பட்டுள்ளது.

இந்த குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளமை பற்றி கேள்விகள் எழுகின்றன. எதற்காக எனது பதவிக்காலம் முடியும் வரை காத்திருந்தார்கள்? நான் தூதுவராக இருந்த போது இலகுவாக இதனைச் செய்திருக்கலாம்.

இது எனது பெயரை தனிப்பட்ட முறையில் களங்கப்படுத்துவதற்கான முயற்சியாக இருக்கக்  கூடும்.  அதன் மூலம் தூதுவராக மீண்டும் நியமிக்கப்படுவதை  தடுக்கவோ, வேறு மறைமுக நிகழ்ச்சி நிரல்களோ இருந்திருக்கலாம்.

இதுபோன்ற குற்றச்சாட்டுகள் காலத்துக்குக் காலம் ஒவ்வொருவர் மீது சுமத்தப்பட்டு வந்துள்ளது. முன்னதாக, கமல் குணரத்ன, சவேந்திர சில்வா போன்றோர் இலக்கு வைக்கப்பட்டனர். இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு எந்த ஆதாரமோ, அடிப்படையொ கிடையாது. இவை சில சக்திகள் உயிர்வாழ்வதற்காக செய்யப்படுகின்றன.

இத்தகைய குற்றச்சாட்டுகளால் வெளிநாட்டுப் பயணங்கள் பாதிக்கப்படும். ஒருமுறை, நான் மியாமி வழியாக பிரேசிலில் இருந்து பயணம் மேற்கொள்ள முனைந்த போது,அமெரிக்கா எனக்கு அனுமதி அளிக்கவில்லை. எனது மனைவி மாத்திரம் அனுமதிக்கப்பட்டார். நான் தடுக்கப்பட்டேன்.

எனது மகள் அவுஸ்ரேலியாவிலும் மகன், ஹொங்கொங்கிலும் உள்ளனர். காலத்துக்குக் காலம் அவர்களிடம் நான் செல்ல வேண்டியுள்ளது. குற்றச்சாட்டுகள் எந்த வகையிலானதாக இருந்தாலும், தூதரகங்கள் நுழைவிசைவு வழங்க தயங்குகின்றன. இது எனக்கு கவலையளிக்கிறது.

இந்த விடயத்தை வெளிவிவகார அமைச்சின் கவனத்துக்கு கொண்டு வரவுள்ளேன். வரும் திங்கட்கிழமை வெளிவிவகார செயலர் பிரசாத் காரியவசத்தை சந்தித்து, எனது தூதுவர் பணி முடிவடைந்தமை தொடர்பான ஆவணங்களை கையளிக்கும் போது, இந்த விவகாரத்தை எழுப்புவேன். சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்திப்பதற்கு,  அதிபரின் செலருடனும் பேசவுள்ளேன்.

இராணுவத்துக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கும் விடயத்தில், சிறிலங்கா அரசாங்கத்தின் செயற்பாடுகள் திருப்தியளிப்பதாக இல்லை.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *